மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 22 அக் 2020

சிபிஎஸ்இ: தேர்வுக் கட்டணம் குறைப்பு!

சிபிஎஸ்இ: தேர்வுக் கட்டணம் குறைப்பு!

சிபிஎஸ்இ வாரியத்தின் திருத்தப்பட்ட தேர்வுக் கட்டணத்துக்கு எதிர்ப்புகள் வலுத்து வரும்நிலையில் டெல்லி அரசுப் பள்ளிகளில் படிக்கும் எஸ்சி, எஸ்டி மாணவர்களின் தேர்வுக் கட்டணம் மட்டும் பழைய முறைப்படி தொடரும் என நேற்று (ஆகஸ்ட் 13) தெரிவித்துள்ளது.

சிபிஎஸ்இ வாரியத்தின் திருத்தப்பட்ட தேர்வுக் கட்டணத்தின்படி, எஸ்சி, எஸ்டி மாணவர்கள் இனிமேல் ஐந்து பாடங்களுக்கு ரூ.1,200 கட்டணம் செலுத்த வேண்டும் எனக் கூறப்பட்டது. முன்பிருந்த ரூ.50இல் இருந்து 24 மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டது.

பொதுப் பிரிவினருக்கு ரூ.750ஆக இருந்த கட்டணம் ரூ.1,500ஆக உயர்த்தப்பட்டது. இந்தக் கட்டணம், 2020ஆம் ஆண்டு பொதுத் தேர்வு எழுதும் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொருந்தும் என்று சிபிஎஸ்இ தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு நாடு முழுவதும் பெற்றோர்கள், மாணவர்கள், சமூக அமைப்புகள் எனப் பல தரப்பிலிருந்தும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு, போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் டெல்லி அரசுப் பள்ளிகளில் படிக்கும் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு மட்டும் பழைய முறை நீடிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. அதன்படி 1,200 ரூபாய் என உயர்த்தப்பட்ட கட்டணத்தில் மாணவர்கள் ஏற்கெனவே செலுத்திய 50 ரூபாயைச் செலுத்தலாம் என்றும் மீதமுள்ள 1,150 ரூபாயை மானியமாக டெல்லி அரசு செலுத்தும் என்றும் சிபிஎஸ்இ வாரியத்தின் செயலாளர் அனுராக் திரிபாதி தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் எண்ணிக்கை இறுதியானதும் சிபிஎஸ்இ அந்தத் தொகையை டெல்லி அரசுக்குத் திரும்ப அளிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

“டெல்லி அரசு எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கான உயர்த்தப்பட்ட தொகையை வழங்கும் என உறுதி கூறியுள்ளது” என்றும் திரிபாதி தெரிவித்துள்ளார்.

“சிபிஎஸ்இ பத்தாம், பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்குக் கடந்த ஆண்டு செலவழித்த தொகை 500 கோடி ரூபாய். மாணவர்களின் தேர்வுக் கட்டணம் மூலமாக 250 கோடிக்கும் குறைவாகவே வந்தது. இதனால் 200 கோடி ரூபாய் வரை செலவானது” என்று திரிபாதி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு இந்தச் செலவுத் தொகையை நுழைவுத் தேர்வு நடத்தியது மூலம் சரிசெய்தோம். அது இப்போது தேசிய தேர்வு முகமைக்கு மாற்றப்பட்டுள்ளது. எனவே மாணவர்களின் கட்டணங்களை இரட்டிப்பாக்க வேண்டியதாகிவிட்டது. இதனால் லாபம் பெற முடியாது, செலவைத் தவிர்க்கலாம்” என்றும் தெரிவித்துள்ளார்.

கேள்வித்தாள்கள் வெளியாவதைத் தடுத்தல், விரைவாகவும் தரமாகவும் மதிப்பீடு செய்தல், தாள்கள் மற்றும் அச்சிடுவதற்கான விலை உயர்வு, போக்குவரத்து செலவுகள் ஆகியவை காரணமாகவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மற்றொரு பக்கம் உயர்த்தப்பட்ட கட்டண உயர்வுக்கான போராட்டம் தொடர்ந்து வருகிறது. சிபிஎஸ்இ தலைமை அலுவலகத்தின் முன் இன்றும் பல மாணவ அமைப்புகள் போராட்டம் நடத்தவுள்ளன. அனைத்திந்திய ஜனநாயக மாணவர் அமைப்பு நாடு தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.


மேலும் படிக்க


டிவி கொடுக்கும் ஜியோ!


கதிர் ஆனந்துக்கு இளைஞரணியில் பதவி?


கணக்கு கேட்கும் சங்கீதா... கடுப்பில் வேலூர் திமுகவினர்!


இரட்டைக் குழல் துப்பாக்கி!


டிஜிட்டல் திண்ணை: அமித் ஷா விழா- ரஜினி வந்தது எப்படி?


புதன், 14 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon