மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 12 நவ 2019

நளினி உரிமை கோர முடியாது: தமிழக அரசு பதில்!

நளினி உரிமை கோர முடியாது: தமிழக அரசு பதில்!

ஆயுள் தண்டனை கைதிகள் தங்களை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டுமென உரிமை கோர முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனுத் தாக்கல் செய்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட ஏழு பேர் 28 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஏழு பேரின் விடுதலை விவகாரத்தில் ஆளுநரே முடிவெடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இதுதொடர்பாக தமிழக அமைச்சரவையில் தீர்மானம் இயற்றி ஆளுநருக்கு அனுப்பியது. இந்த விவகாரத்தில் ஆளுநர் இதுவரை எவ்வித முடிவும் எடுக்கவில்லை.

முன்னதாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் தன்னை முன்கூட்டியே விடுவிக்க வேண்டுமென நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவுக்குத் தமிழக உள் துறை செயலாளர் சார்பிலும், வேலூர் மகளிர் சிறை கண்காணிப்பாளர் சார்பிலும் நேற்று (ஆகஸ்ட் 13) பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், “நளினி உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அரசு அளித்த பரிந்துரை ஆளுநரின் பரிசீலனையில் உள்ளது. ஆயுள் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது அரசின் தனிப்பட்ட அதிகாரங்களுக்குட்பட்டது. ஆயுள் தண்டனை கைதிகள் தங்களை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டுமென உரிமையாகக் கோர முடியாது. ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுக்க சிறைத் தண்டனை அனுபவிப்பதைக் குறிப்பதாகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கைதிகளை முன்கூட்டியே விடுவிப்பது, தண்டனையைக் குறைப்பது போன்ற மாநில அரசின் அதிகாரங்களை நீதிமன்றங்கள் செயல்படுத்த முடியாது. முன்கூட்டியே விடுவிப்பது குறித்துப் பரிசீலிக்கும்படி மட்டும்தான் அரசுக்கு உத்தரவிட முடியும் என்றும் அம்மனுவில் கூறப்பட்டுள்ளது. எனவே, நளினியின் மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இம்மனுவை விசாரித்த நீதிபதி சுப்பையா, சரவணன் அடங்கிய அமர்வு, வழக்கை ஆகஸ்ட் 20ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தது.


மேலும் படிக்க


டிவி கொடுக்கும் ஜியோ!


கதிர் ஆனந்துக்கு இளைஞரணியில் பதவி?


கணக்கு கேட்கும் சங்கீதா... கடுப்பில் வேலூர் திமுகவினர்!


இரட்டைக் குழல் துப்பாக்கி!


டிஜிட்டல் திண்ணை: அமித் ஷா விழா- ரஜினி வந்தது எப்படி?


புதன், 14 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon