மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 14 ஆக 2019

சிறப்புக் கட்டுரை: காணாமல் போகும் வேலைகள்!

சிறப்புக் கட்டுரை: காணாமல் போகும் வேலைகள்!

அமுல்யா கோபால கிருஷ்ணன்

இருபது ஆண்டுகளுக்கு முன்னர் விவசாயத் துறையில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக விவசாயிகள் பலர் கட்டுமானத் துறையில் பிழைப்பைத் தேடிச் சென்றனர். திறனற்ற ஊழியர்கள் பலர் கட்டுமானத் துறையில் காலூன்றினர். அப்போது இத்துறையின் வளர்ச்சி அபரிமிதமாக இருந்தது. இப்போது இத்துறையின் வளர்ச்சி குறைந்து, அதைச் சார்ந்துள்ளவர்களின் வேலைவாய்ப்புகளும் வீழ்ச்சியடைந்து வருகின்றன.

குஜராத் மாநிலம் துவாரகாவைச் சேர்ந்த 62 வயதான பாபு லால் கட்டுமானத் துறையில் தனது அனுபவத்தையும் தற்போதைய நிலவரத்தையும் விவரிக்கிறார். கைதேர்ந்த மேசன் தொழிலாளரான இவர் 1981ஆம் ஆண்டு முதலே டெல்லியில் கட்டுமானத் துறையில் ஈடுபட்டு வருகிறார். 1990களிலும், 2000களிலும் இத்தொழிலில் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வுகளை இவர் கண்கூடாகக் கண்டுள்ளார். “முன்பெல்லாம் வேலை அதிகமாக இருக்கும்; வேலைக்கான ஆட்கள் குறைவாக இருப்பார்கள். ஆனால், இப்போது வேலை குறைவாக உள்ளது; ஆட்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள். எங்கு பார்த்தாலும் வேலை இல்லை என்ற நிலைதான் இருக்கிறது” என்று ஆதங்கப்படுகிறார்.

வறுமை காரணமாகவே தன்னைப் போன்ற பலர் இந்த வேலைக்கு வந்ததாகவும், வேளாண்மையில் போதிய வாழ்வாதாரம் இல்லாத மக்கள் இத்துறைக்கு பிழைப்பைத் தேடி வந்ததாகவும் பாபு லால் கூறுகிறார். கடந்த இருபது ஆண்டுகளில் இத்துறை அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் துறையாக இருந்து வருகிறது என்கிறார் பாபு லால்.

கடந்த பத்து ஆண்டுகளில் கட்டுமானத் துறையில் வேலைவாய்ப்புகள் பெரும் ஏற்றத்தைச் சந்தித்துள்ளன. இத்துறைக்கான வேலைவாய்ப்புகள் 1999-2000 ஆண்டில் 1.7 கோடியிலிருந்து 2004-05ஆம் ஆண்டில் 2.56 கோடியாக அதிகரித்திருக்கிறது. 2011-12ஆம் ஆண்டில் மேலும் உயர்ந்து 5.03 கோடியாக இருந்துள்ளது. 1983ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த வேலைவாய்ப்புகளில் 3.2 சதவிகிதமாக இருந்த கட்டுமானத் துறையின் பங்களிப்பு 2011-12ஆம் ஆண்டில் 10.6 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இக்காலகட்டத்தில் விவசாயம் அல்லாத மற்ற துறைகளில் வேலைபார்க்கும் ஐந்தில் ஒருவர் கட்டுமானத் துறையைச் சேர்ந்தவராக இருந்துள்ளார்.

அதன் பின்னர் நிலைமை தலைகீழாகிவிட்டது. சமீபத்திய கால அளவிலான தொழிலாளர் படை சர்வேயின்படி, இத்துறையின் வளர்ச்சி கீழ் நோக்கிச் சென்றுள்ளது. 2017-18ஆம் ஆண்டில் இத்துறைக்கான வேலைவாய்ப்பு 5.43 கோடி மட்டுமே என்கிறார் இத்துறை குறித்த ஆய்வாளரும் பொருளாதார வல்லுநருமான ரவி ஸ்ரீவஸ்தவா. கடந்த ஆறு ஆண்டுகளில் வீடமைப்புத் திட்டம், கழிப்பறை கட்டும் திட்டம் போன்ற திட்டங்கள் சிறப்பாகச் செயல்பட்டாலும், இத்துறையில் புதிதாக உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை வெறும் 40 லட்சம் மட்டுமே என்கிறார் ஸ்ரீவஸ்தவா. தனியார் முதலீடுகளில் ஏற்பட்ட வீழ்ச்சியே இதற்குக் காரணம்.

இச்சூழல் குறித்துப் பொருளாதார வல்லுநரான சந்தோஷ் மெஹ்ரோத்ரா பேசுகையில், “விவசாயத்தில் வாழ்வாதாரம் இல்லாத திறனற்ற தொழிலாளர்கள் வேறு வழியில்லாமல் இத்துறைக்கு அதிகமாக வந்தனர். அப்போது விவசாயத்தை விட்டு வந்தவர்களுக்கெல்லாம் கட்டுமானத் துறையில் வேலை கிடைத்தது. அவர்களுக்கான ஊதியம் உயர்ந்து, நுகர்வு அதிகரித்து, வறுமை குறைந்தது. ஆனால், இப்போது ஊழியர்களுக்கான சம்பளம் குறைந்துவிட்டது” என்று கூறுகிறார்.

2016ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பழிப்பு நடவடிக்கை இத்துறையைக் கடுமையாகப் பாதித்துவிட்டது. அதன் காரணமாக, கட்டுமானத் திட்டங்களின் எண்ணிக்கையும் அவற்றைச் செயல்படுத்தும் வேகவும் குறைந்துவிட்டது. “நான் பல மாதங்களாக வேலை இல்லாமல் இருந்தேன். இப்போது வேலை இருந்தாலும் அது மிக மந்தமாகவே இருக்கிறது” என்று கூறும் பன்வாரி லால் என்ற மேசன், “சில நேரங்களில் 15 நாட்கள் வேலை இருக்கும்; சில நேரங்களில் 20 நாட்கள்; சில நாட்கள் வேலையே இருக்காது” என்று புலம்புகிறார்.

பெரிய கார்ப்பரேட் கட்டடங்களைக் கட்ட அதிக நேரம் ஆவதோடு அதற்கான சம்பளமும் குறைவாகக் கிடைக்கிறது. ஆனால், சிறிய வீடுகள் உள்ளிட்ட கட்டடங்கள் சில வாரங்களில் கட்டிமுடிக்கப்படும் என்பதோடு அதில் நல்ல சம்பளமும் கிடைப்பதாகக் கூறுகின்றனர். கட்டுமானத் துறையில் நாள் ஒன்றுக்கு ஆண்களுக்கு ரூ.300 முதல் ரூ.500 வரையிலும், பெண்களுக்கு ரூ.250 வரையிலும் கிடைக்கிறது. சிறிய கட்டுமானத் திட்டங்களில், திருமணமான தம்பதியர்களும் கூட்டாகப் பணிக்குச் செல்வதுண்டு. கட்டுமானப் பணியில் ஆண்கள் செய்யும் பெரும்பாலான வேலைகள் பெண்களால் செய்ய முடிவதில்லை. இதனால் அவர்களுக்குக் குறைவான சம்பளமே கிடைக்கிறது.

சில பெண்கள் ஆண்களுக்கு நிகரான மேசன் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு அதிக சம்பளம் பெறவும் முயற்சி செய்கின்றனர். பிலாஸ்பூர் பகுதியில் கட்டுமானப் பணியில் ஈடுபடும் பெண் ஒருவர் தனது திறனை வளர்த்துக்கொண்டு மேசன் பணி பார்ப்பதாகக் கூறுகிறார். மத்தியப் பிரதேச மாநிலம் ஹர்பால்பூர் பகுதியைச் சேர்ந்த ராம் தேவி என்ற பெண் இதுகுறித்துப் பேசுகையில், “சிமென்ட் கலவை தயாரிக்க இப்போது இயந்திரங்கள் வந்துவிட்டன. எனவே எங்களை அந்த வேலைக்கு அழைப்பதில்லை” என்கிறார். நிறைய கட்டடப் பணிகளில் பெண்களுக்கு வேலை கிடைப்பதே இல்லை. இயந்திரங்கள் வாயிலாகவே பெரும்பாலான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஆல்வார் பகுதியைச் சேர்ந்த லாலா ராம் என்பவர் கட்டடப் பணியில் ஒரு கூலிப் பணியாளராகத் தனது வேலையைத் தொடங்கியுள்ளார். பின்னர் மற்றவர்களிடமிருந்தும் ஆன்லைன் வீடியோக்கள் மூலமாகவும் பெயின்டிங் செய்வது எப்படி என்று கற்றுக்கொண்டு அப்பணியில் ஈடுபட்டுள்ளார். இதில் ரூ.1,000 முதல் ரூ.10,000 வரையில் கிடைப்பதாக அவர் கூறுகிறார். கட்டுமானப் பணியில் உயரிய வேலை கிடைப்பதென்பது சாதி, இடம், இனம் ஆகியவற்றைப் பொறுத்து இருப்பதாகக் கூறும் ஸ்ரீவஸ்தவா, இதில் திறனை வளர்த்துக்கொண்டு மேலே முன்னேறிச் செல்ல, வேலை கற்றுக்கொடுக்க யாராவது இருக்க வேண்டும் என்கிறார். இவரது கருத்துப்படி, இத்துறையில் பட்டியலின வகுப்பு மக்கள் வளர்ச்சி காண்பது மிகவும் கடினமாகும்.

இதைவிட மோசமான நிலை, இடம்பெயர்ந்து கட்டுமானப் பணியில் ஈடுபடும் கூலித் தொழிலாளர்களுக்கு உள்ளது. கட்டுமானத் திட்டங்கள் நிறைவடைந்தவுடன் வேறு பகுதிக்குச் சென்று அங்கு கூடாரம் அமைத்துத் தங்கியிருந்து அங்குள்ள கட்டுமானத் திட்டத்தில் அவர்கள் வேலைபார்க்க வேண்டும். இவர்களை வேலைக்கு அமர்த்த காண்ட்ராக்டர், துணைநிலை காண்ட்ராக்டர், சர்தார் எனப் பெரிய சங்கிலித் தொடரே உள்ளது. இப்படிப்பட்ட வேலையாட்களுக்கு முன்கூட்டியே அட்வான்ஸ் கொடுத்து வேலைக்கு அழைத்துச் செல்கின்றனர். இத்தொழிலாளர்களின் குழந்தைகள் பலர் பள்ளிக்கு அனுப்பப்படுவதில்லை என்கிறார் மொபைல் கிரேச்சஸ் என்ற தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த சுனிதா. கட்டுமானப் பணியாளர்களின் நலனில் இந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

கட்டுமானப் பணிகளுக்கென சட்டங்கள் இருக்கின்றன. கட்டடம் மற்றும் பிற கட்டுமானப் பணியாளர்கள் சட்டம் 1996இன்படி, பணியாளர்களின் பாதுகாப்பு, குழந்தைகளின் கல்வி, மருத்துவச் சேவை போன்ற உதவிகளை வலியுறுத்துகிறது. 2006ஆம் ஆண்டில் இச்சட்டத்தின் அமலாக்கம் குறித்து உச்ச நீதிமன்றம் கண்காணிக்கத் தொடங்கியது. இச்சட்டங்களின் கீழ் நலத்திட்ட உதவிகள் பெறுவதில் குறிப்பாகப் பெண்களுக்கு துவாரகா பகுதியைச் சேர்ந்த நிர்மன் மஸ்தூர் பஞ்சாயத்து சங்கத்தின் சுனிதா ஷர்மா உதவிவருகிறார். 2005ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இச்சங்கம் பதிவுகளைப் புதுப்பிப்பது, விண்ணப்பிப்பது ஆகியவற்றில் உதவி வருகிறது.

ஆனால், மத்திய அரசின் புதிய தொழிலாளர் கொள்கையால் இதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புதிய சட்டத்தின் தொழிலாளர் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து தொழிலாளர் அமைப்புகளுக்குப் போதிய தெளிவு இல்லாததால் நிலைகுலைந்துள்ளன. தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்புக்கு அவர்களே பங்களிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. நலத்திட்ட உதவிகளைப் பெறக் கட்டுமானத் தொழிலாளர்கள் தங்களது சம்பளத்தில் 12.5 சதவிகிதத்தைச் செலுத்தும் அளவுக்கு அவர்களுக்கு மாதம் முழுவதும் வேலை கிடைப்பதில்லை என்கிறார் சுபாஷ் பட்நாகர். இவர் நிர்மான் மஸ்தூர் பஞ்சாயத்து சங்கத்தைச் சேர்ந்தவர். 36 நலத்திட்ட வாரியங்களின் கீழ் சுமார் 4 கோடி கட்டுமானத் தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். புதிய நடைமுறை செயல்பாட்டுக்கு வந்தால் தொழிலாளர்களுக்கான நலத்திட்ட உதவிகள் கிடைக்காது என்று அவர் அச்சம் தெரிவித்துள்ளார்.

ஒருசில மாநிலங்களில் மட்டுமே தொழிலாளர் அமைப்புகள் சரியாகச் செயல்பட்டு வருகின்றன. பல அமைப்புகள் பெரிய நிறுவனங்களாலும் காண்ட்ராக்டர்களாலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. பாபு லால் பேசுகையில், “இப்போது வேலைக்கான தேவை அதிகமாக இருக்கிறது. வேலையைச் செய்து முடிக்க உங்களுக்குக் கட்டாயமாக ரூ.500 வேண்டும் என்று கேட்டால், அதே வேலையை ரூ.400 கொடுத்து மற்றொரு நபரை வைத்து செய்து முடித்துவிடுவார்கள்” என்று கூறுகிறார்.

நிரந்தரமான வேலையில் உள்ள தொழிலாளர்களுக்குக்கூட இப்போதைய பணிச்சூழல் மிக மோசமாக உள்ளது. “முன்பெல்லாம் 100 ரூபாய் சம்பளம் கிடைத்தால் அதை உணவுப் பயன்பாடு போக மீதி வைத்திருப்போம். ஆனால், இப்போது அது சாத்தியமல்ல. ரூ.1,000 கிடைத்தாலும் அது போதுமானதாக இல்லை. வரவு செலவை ஈடு செய்யவே முடியவில்லை. உணவு, சமையல் எரிவாயு, வீட்டு வாடகை ஆகியவற்றுக்கே போதாமல் உள்ளது” என்று வருத்தம் தெரிவிக்கிறார் சம்பத் ராம் என்ற தச்சர்.

ஒருசிலர் வேறு வழியில்லாமல் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். லாலா ராம் பேசுகையில், “தினமும் உடம்பெல்லாம் புழுதியுடன் இருக்க எனக்கு விருப்பமில்லை. ஆனால், இதுதான் வேலை என்றாகிவிட்டது. வேலை முடிந்து மாலை நேரத்தில்தான் எங்களுக்கு நிம்மதி” என்கிறார்.

நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா

தமிழில்: செந்தில் குமரன்


மேலும் படிக்க


டிவி கொடுக்கும் ஜியோ!


கதிர் ஆனந்துக்கு இளைஞரணியில் பதவி?


கணக்கு கேட்கும் சங்கீதா... கடுப்பில் வேலூர் திமுகவினர்!


இரட்டைக் குழல் துப்பாக்கி!


டிஜிட்டல் திண்ணை: அமித் ஷா விழா- ரஜினி வந்தது எப்படி?


கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்! ...

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்!

ஓட்டுக்கு பணம்: மக்களிடம் சத்தியம் வாங்க முடியாது!

2 நிமிட வாசிப்பு

ஓட்டுக்கு பணம்: மக்களிடம் சத்தியம் வாங்க முடியாது!

ரிலாக்ஸ் டைம்: கேழ்வரகு இனிப்பு அடை!

2 நிமிட வாசிப்பு

ரிலாக்ஸ் டைம்: கேழ்வரகு இனிப்பு அடை!

புதன் 14 ஆக 2019