மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 7 ஜூலை 2020

காஷ்மீரில் தடை மூன்று மாதம் நீடிக்கும்? - மத்திய அரசு சூசகம்!

காஷ்மீரில் தடை மூன்று மாதம் நீடிக்கும்? - மத்திய அரசு சூசகம்!

காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள தடைச் சட்டங்களை உடனே நீக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கை இரு வாரங்களுக்கு ஒத்தி வைத்திருக்கிறது நீதிமன்றம்.

வழக்கறிஞரும் அரசியல் விமர்சகருமான டெசின் பூனவாலா உச்ச நீதிமன்றத்தில் கடந்த வாரம் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “காஷ்மீரில் கடந்த ஆகஸ்டு 4 ஆம் தேதி இரவு முதல் விதிக்கப்பட்டுள்ள தடைச் சட்டங்களை நீக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். ஆகஸ்டு 4 ஆம் தேதி முதல் காவலில் வைக்கப்பட்டிருக்கும் அரசியல் தலைவர்களை உடனடியாக விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். ஜம்மு காஷ்மீரின் தற்போதைய உண்மையான நிலைமை என்னவென்று அறிய நீதிவிசாரணைக் குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்திட வேண்டும்” என்று கோரிக்கை வைத்திருந்தார்.

அவரது மனு இன்று (ஆகஸ்டு 13) உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எம்.ஆர். ஷா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. பூனவாலாவுக்காக மூத்த வழக்கறிஞர் மேனகா குருசாமி வாதாடினார்.

“காஷ்மீரில் தகவல் தொடர்பு உள்ளிட்ட அத்தனை இயக்கங்களையும் தடை செய்ய சட்டத்தில் இடமுள்ளதா?” என்று கேள்வி எழுப்பினார்.

அப்போது நீதிபதி மிஸ்ரா, “அங்கே ஒரு அசாதாரண சூழல் நிலவுகிறது. அரசாங்கம் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை கையாள வேண்டியிருக்கிறதே?” என்று கேட்டார். மேலும் அரசுத் தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபாலைப் பார்த்து, “காஷ்மீரில் இன்னும் எத்தனை காலத்துக்கு இதுபோன்ற தடை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது?” என்று கேட்டார்.

அதற்கு பதிலளித்த கே.கே. வேணுகோபால், “காஷ்மீரில் அனைத்து வகையான அம்சங்களையும் அரசு கவனத்தில் கொண்டிருக்கிறது. 2016 இல் அசாதாரணமான ஒரு சூழலில் மூன்று மாதங்கள் வரை இதுபோன்ற தடை நீட்டிக்கப்பட்டிருந்தது. என்றாலும் கள நிலவரத்தைப் பொறுத்து இப்போதைய தடை விதிப்புகள் இன்னும் சில நாட்களில் கூட முடிவுக்கு வரலாம். காஷ்மீரில் நிலைமை ஒவ்வொரு நாளும் மாறிக் கொண்டிருக்கிறது. சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு தடைகளை படிப்படியாக விலக்கி வருகிறோம்” என்று பதிலளித்தார்.

அப்போது பூனவாலாவுக்காக வாதாடிய வழக்கறிஞர் மேனகா குருசாமி, “எல்லா வகையிலும் தடைச் சட்டங்களை நீக்க முடியாவிட்டாலும் மருத்துவமனைகள், பள்ளிகள், காவல் நிலையங்கள் போன்றவையாவது இயக்கப்படுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.

அப்போது நீதிபதி எம்.ஆர். ஷா, “அங்கே நிலைமை மிகவும் அசாதாரணமாக இருக்கிறது. மத்திய அரசுக்கு நாம் சிறிது கால அவகாசம் கொடுக்க வேண்டும்” என்று கூறினார்.

அப்போது அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால், “காஷ்மீரில் மனித உரிமைகளை நிலைநாட்ட மத்திய அரசு உறுதிபூண்டிருக்கிறது. இந்த கால கட்டத்தில் அங்கே ஓர் உயிர் கூட போவதற்கு மத்திய அரசு அனுமதிக்காது” என்று தெரிவித்தார்.

வாதங்களின் போக்கைப் பார்க்கையில் மத்திய அரசு வழக்கறிஞர் இந்த மனுவை மாதக் கணக்கில் ஒத்தி வைக்க கோருவதைப் போல் உணர்ந்த மனுதாரரின் வழக்கறிஞர் மேனகா குருசாமி, “அப்படியென்றால் மத்திய அரசுக்கு இரு வாரங்கள் அவகாசம் கொடுக்கலாம்” என்று நீதிபதியிடம் யோசனை தெரிவித்தார்.

அப்போது நீதிபதி ஷா, “ஏன் இதை நிலுவையில் வைக்க வேண்டும்?” என்று கேட்டார்.

இதற்கு மனுதாரரின் வழக்கறிஞர் மேனகா குருசாமி, “தங்களுக்கு பொறுப்பு இல்லை என்று மத்திய அரசு கூற முடியாது. காஷ்மீரிகளை இந்த நாட்டின் முழு குடிமகன்களாக மத்திய அரசு கருதினால், அவர்கள் மீது முழுமையான அளவு தடைகளை மத்திய அரசால் விதிக்க இயலாது” என்று கூறினார்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் இவ்வழக்கில் உத்தரவு ஏதும் பிறப்பிக்காமல் இரு வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.


மேலும் படிக்க


கதிர் ஆனந்துக்கு இளைஞரணியில் பதவி?


சிவகார்த்தி படத்தால் பாதிக்கப்படும் ஜெயம் ரவி!


டிவி கொடுக்கும் ஜியோ!


இரட்டைக் குழல் துப்பாக்கி!


டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நடத்திய பஞ்சாயத்து... வைகோ-அழகிரி காரசார மோதல்!


செவ்வாய், 13 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon