மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 21 ஜன 2020

சிதம்பரம் குறித்த விமர்சனம்: முதல்வருக்கு காங்கிரஸ் பதில்!

சிதம்பரம் குறித்த விமர்சனம்: முதல்வருக்கு காங்கிரஸ் பதில்!

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குறித்த விமர்சனத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பதிலளித்துள்ளார்.

மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்துவைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். மத்திய அரசு நாளை தமிழகத்தை யூனியன் பிரதேசம் ஆக்கினாலும் அதனை அதிமுக தலைவணங்கி ஏற்றுக்கொள்ளும் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளாரே என்று நிருபர் எழுப்பிய கேள்விக்கு, “ப.சிதம்பரத்தால் தமிழகத்துக்கும் நாட்டுக்கும் என்ன கிடைத்தது. அவரால் பூமிக்கு பாரம்தான்” என்று கடுமையாக விமர்சித்திருந்தார். இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய ப.சிதம்பரம் மகனும், மக்களவை உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் இதற்கு பதிலளித்துள்ளார். “முதல்வர் சொல்ல வேண்டிய வாசகமா இது? அவரைப் பற்றி ஒரு வீடியோ பார்த்துள்ளேன். அதனைப் பற்றி கூற விரும்பவில்லை. 9முறை இந்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தவர், ஆசியாவிலேயே சிறந்த நிதியமைச்சர் என்று பட்டம் பெற்றவரைப் பற்றி சரித்திர விபத்தால் முதல்வரானவர் இப்படி சொல்லலாமா? இதுதான் அரசியல் நாகரீகமா? அவர் சாமி கும்பிடுபவர் என்று நன்றாக எனக்குத் தெரியும். சாமி கும்பிடும்போது அவருக்கு மனசாட்சி உறுத்தும்” என்று தெரிவித்தார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அமைச்சராக பொறுப்பு வகித்தபோது ப.சிதம்பரம் நிகழ்த்திய சாதனைகள் ஏராளம். புதிய பொருளதாரக் கொள்கை அமலுக்கு வந்த போது, அதை நிறைவேற்றுகிற வகையில் வர்த்தகத் துறையில் புரட்சிகரமான சீர்திருத்தங்களை கொண்டு வந்தவர். கடுமையான கட்டுப்பாடுகளுக்கு இடையே சிக்கிக் கொண்டிருந்த ஏற்றுமதி, இறக்குமதி கொள்கையில் பல சீர்திருத்தங்களை நிறைவேற்றினார்.1996 இல் ஐக்கிய முன்னணி ஆட்சி அமைந்த போது, கனவு பட்ஜெட்டை தாக்கல் செய்தவர். இவரோடு இணைந்து பணியாற்றியவர்களில் அவரது செயல் திறனை பாராட்டாதவர்களே இல்லை. புதிய சிந்தனைகளை ஏற்றுக் கொள்ள தயங்காதவர். கூர்மையான சிந்தனை கொண்ட சீர்திருத்த மேதை என்று அவரை பல பொருளாதார அறிஞர்கள் பாராட்டியிருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் சிதம்பரம் ஆற்றியுள்ள சாதனைகளையும், அதனால் ஏற்பட்ட பயன்கள் குறித்து தனது அறிக்கையில் தெரிவித்திருக்கும் அழகிரி, “முதலமைச்சர் எடப்பாடி அவர்களே, ப. சிதம்பரம் பதவியிலிருந்த போது நிறைவேற்றிய திட்டங்கள் என்ன என்று நா கூசாமல் கேட்கிறீர்களே, நிறைவேற்றிய திட்டங்களின் பட்டியல் போதுமா ? இன்னும் வேண்டுமா ? நிதியமைச்சராக இருந்து சாதித்த சாதனைகளை மறைக்கும் வகையில் பேசுவதன் மூலம் முழுபூசணிக்காயை சோற்றில் மறைக்கலாமா ? பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியவரை இந்தியாவின் சாதனைச் செல்வர் என்று மகுடம் சூட்டி தமிழகமே பாராட்ட வேண்டிய ப. சிதம்பரம் அவர்களை, விபத்தின் மூலம் முதலமைச்சராக பதவிக்கு வந்த எடப்பாடி அவர்களே, உங்களுக்கு பாராட்ட மனம் இல்லை என்றாலும், சிறுமைப்படுத்தாமல் இருக்கலாமே” என்று கேள்வி எழுப்பியுள்ளவர்,

“சிதம்பரம் அவர்கள் படிப்படியாக பல்வேறு பொறுப்புகளை எப்படிப் பெற்றார் என்பதை வரலாறு அறியும். தனது திறமையான அணுகுமுறையின் காரணமாகவே, அவரை நோக்கி பதவிகளும், பொறுப்புகளும் வந்தன. என்றைக்கும் இவர் பதவிகளை தேடிப் போனதே இல்லை. பதவிகள் தான் இவரை தேடி வந்திருக்கின்றன. ஆனால், எடப்பாடி பழனிச்சாமி எப்படி பதவிக்கு வந்தார் என்பதும், பதவிக்கு வந்த போது அவர் யார் காலில் விழுந்து விசுவாசத்தை வெளிப்படுத்தினார் என்பதும் தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். எனவே, எடப்பாடி அவர்களே, கண்ணாடி வீட்டிற்குள் இருந்து கொண்டு கல்லெறிய வேண்டாம்” என்று எச்சரித்துள்ளார்.


மேலும் படிக்க


கதிர் ஆனந்துக்கு இளைஞரணியில் பதவி?


சிவகார்த்தி படத்தால் பாதிக்கப்படும் ஜெயம் ரவி!


டிவி கொடுக்கும் ஜியோ!


இரட்டைக் குழல் துப்பாக்கி!


டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நடத்திய பஞ்சாயத்து... வைகோ-அழகிரி காரசார மோதல்!


செவ்வாய், 13 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon