மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 1 ஜுன் 2020

உலகக் கோப்பை யாருக்கு சொந்தம்: நீடிக்கும் ‘ஒரு ரன்’ சர்ச்சை!

உலகக் கோப்பை யாருக்கு சொந்தம்: நீடிக்கும் ‘ஒரு ரன்’ சர்ச்சை!

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி டிரா செய்யக் காரணமாக இருந்த அந்த ஒரு ரன் உண்டா, இல்லையா என்ற விவாதம் அடுத்தகட்டத்தை எட்டியுள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதின. இரு அணிகளும் சம ரன்களை எடுத்ததால் சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. சூப்பர் ஓவரிலும் இரு அணிகளும் சம அளவிலான ரன்கள் எடுக்க அதிக பவுண்டரி அடித்த அணியான இங்கிலாந்தை வெற்றி பெற்ற அணியாக அறிவித்தனர்.

இங்கிலாந்து அணியின் கடைசி ஓவர் நான்காவது பந்தில் ’ஓவர் த்ரோ’ முறையில் இங்கிலாந்து அணிக்கு ஆறு ரன்கள் வழங்கப்பட்டது. ’டீப் மிட் விக்கெட்’ திசையில் பென் ஸ்டோக்ஸ் அடித்த பந்தைப் பிடித்த மார்ட்டின் கப்தில் அதை கீப்பர் ஜோஸ் பட்லரை நோக்கி வீச முற்படும்போது பென் ஸ்டோக்ஸும் ஆதில் ரஷித்தும் கிராஸ் ஆகவில்லை.

கப்தில் எறிந்த அந்தப் பந்து ஸ்டோக்ஸின் பேட்டில் பட்டு பவுண்டரிக்குச் சென்றது. அப்போது நடுவராக இருந்த குமார் தர்மசேனா அதற்கு ஆறு ரன்கள் வழங்கினார். ஓடிய இரண்டு ரன்களுடன் ’ஓவர் த்ரோ’வில் கிடைத்த பவுண்டரியுடன் சேர்த்து ஆறு ரன்கள் கணக்கில் சேர்க்கப்பட்டது. ’ஓவர் த்ரோ’ அல்லது பீல்டரின் ’த்ரோ’ நடவடிக்கை மீதான விதி 19.8-இன் படி அந்தப் பந்துக்கு ஐந்து ரன்கள் மட்டுமே வழங்கியிருக்க வேண்டும். பேட்ஸ்மேன்கள் இருவரும் கிராஸ் ஆகாததால் ஒரு ரன் மட்டுமே கணக்கில் சேரும்.

இந்த ரன் கணக்கில் சேர்த்துக்கொள்ளப்படாமல் இருந்திருந்தால் இங்கிலாந்து அணியால் டிரா செய்ய முடியாமல் போயிருக்கும். கோப்பையை நியூசிலாந்து அணி கையிலேந்தியிருக்கும்.

இந்த விவகாரம் சர்வதேச அளவில் சர்ச்சையைக் கிளப்பியது. ஆட்டம் முடிந்த சில நாள்களுக்குப் பின்னர் களத்தில் இருந்த நடுவர் தர்மசேனா தான் தவறுதலாக ஆறு ரன்கள் கொடுத்துவிட்டதாக கூறினார்.

இலங்கை சண்டே டைம்ஸ் ஊடகத்திடம் பேசிய அவர், "தொலைக்காட்சியில் ரீப்ளேவை பார்த்தபோது, என்னுடைய தீர்ப்பு தவறானது என்பதை அறிந்துகொண்டேன். ஆனால், மைதானத்தில் நான் நடுவர் பணி செய்யும்போது, என்னால் டிவி ரீப்ளையை பார்க்க முடியாது. களத்தில் நான் கொடுத்த முடிவுக்காக, வருத்தப்படப் போவதில்லை. நான் லெக் அம்பயருடன் வாக்கிடாக்கியில் பேசி கலந்தாலோசித்தேன். அதை மற்ற அம்பயர்களும், ரெஃப்ரியும் கேட்டனர். அப்போது அவர்கள் டிவி ரீப்ளேவை பாரக்க முடியவில்லை; அவர்கள் அனைவரும் பேட்ஸ்மேன்கள் 2 ரன்களை முழுமையாக ஓடிவிட்டார்கள் என்றுதான் முடிவுசெய்திருந்தனர். அந்த வகையில் நானும் என்னுடைய முடிவை வெளிப்படுத்தினேன்" என்று தெரிவித்தார்.

இந்நிலையில் எம்சிசி-யின் ஓவர் த்ரோவ் விதியை மறுபரிசீலனை செய்யும்படி முன்னாள் வீரர்கள் உட்பட பலர் வலியுறுத்தினர். இந்நிலையில் ஆகஸ்ட் 11 மற்றும் 12 என இரண்டு நாட்கள் லார்ட்ஸில் முன்னாள் இங்கிலாந்து ஆட்டக்காரரான மைக் கேட்டிங் தலைமையில் எம்சிசி உலக கிரிக்கெட் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஷேன் வார்னே, இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கர்கரா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்திற்கு பின் வெளியிடப்பட்ட அறிக்கையில், “ ஐசிசி உலக கோப்பை இறுதிப் போட்டியின் போது நடந்த ஓவர் த்ரோவ் சர்ச்சை தொடர்பான விதி 19.8 பற்றி முழுவதுமாக விவாதிக்கப்பட்டது. சட்டம் தெளிவாக உள்ளது, ஆனால் இந்த நிகழ்வு குறித்து வரும் செப்டம்பர் மாதம் சட்டத் துணைக்குழுவால் மறுஆய்வு செய்யப்படும்” என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும் இந்தக் கூட்டத்தில் பந்துவீச்சாளர்கள் பேட்ஸ்மேன்களின் இடுப்புக்கு மேல் பந்து வீசும் போது அதை தொழில்நுட்ப உதவியால் கண்டறிந்து ‘நோ பால்’ என அறிவிக்கும் முறையைக் கொண்டுவருவது குறித்து விவாதிக்கப்பட்டது.

இது தொடர்பாக அந்த அறிக்கையில், “பந்தை டிராக் செய்யும் மென்பொருளை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என இந்தக் குழு பரிந்துரைத்துள்ளது. இதனால் பேட்ஸ்மேன்களின் இடுப்புக்கு மேல் வரும் பந்துகளை நோ பாலாக அறிவிக்கவும், தலைக்கு மேல் வருவதை வைடாக அறிவிக்கவும் களத்திலிருக்கும் நடுவருக்கு உதவியாக இருக்கும். சில நேரங்களில் நடுவர்கள் முடிவெடுக்க கடினமாக இருக்கும் போது தொழில்நுட்பம் அவர்களுக்கு உதவி புரியும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க


கதிர் ஆனந்துக்கு இளைஞரணியில் பதவி?


சிவகார்த்தி படத்தால் பாதிக்கப்படும் ஜெயம் ரவி!


டிவி கொடுக்கும் ஜியோ!


இரட்டைக் குழல் துப்பாக்கி!


டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நடத்திய பஞ்சாயத்து... வைகோ-அழகிரி காரசார மோதல்!


செவ்வாய், 13 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon