மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 15 ஜன 2021

நேர்கொண்ட பார்வை நிதானமான வசூல்!

நேர்கொண்ட பார்வை நிதானமான வசூல்!

பெரும் எதிர்பார்ப்புக்கிடையே ஆகஸ்ட் 8ஆம் தேதியன்று அஜீத் நடிப்பில் வெளியான நேர்கொண்டபார்வை எதிர்மறையான விமர்சனங்களை எதிர்கொண்டது.

போட்டிக்கு பெரிய நடிகர்கள் நடித்த படம் எதுவும் வெளியாகாத நிலையில் தனி ஆவர்த்தனத்துடன் 500க்கும் மேற்பட்ட திரைகளில் அதிகமான காட்சிகள் திரையிடப்பட்டன. முதல் நாள் இப்படத்திற்கு இருந்த வசூல் இரண்டாம் நாள் இல்லை பல மால் தியேட்டர்களில் காட்சிகள் குறைக்கப்பட்டன.

இவ்வருட தொடக்கத்தில் வெளியான விஸ்வாசம், விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படங்களின் வசூலை நேர் கொண்ட பார்வை முறியடித்ததாக சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தினார்கள். இப்படத்தின் தமிழக வினியோகஸ்தர் ராகுல், நேர்கொண்ட பார்வை வெளியான முதல் இரண்டு நாட்களில், தமிழகத்தில் முப்பது கோடி ரூபாய் மொத்தமாக வசூல் செய்ததாக தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்து பரபரப்பு ஏற்படுத்தினார் .

வழக்கமாக ஓடாத படங்களைக் கூட மாபெரும் வசூல் சாதனை என்று பத்திரிக்கைகளில் விளம்பரம் கொடுப்பது, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் போக்காக மாறிவிட்டது . வெள்ளிக்கிழமை(ஆக. 9) சுமாரான வசூலை பெற்றநேர்கொண்ட பார்வை வாரத்தின் இறுதி நாட்களான சனி,ஞாயிறு, பக்ரீத் விடுமுறை நாளான திங்கட்கிழமை என மூன்று நாட்களும் நகர்புறங்களில் பெரும்பாலான திரையரங்குகள் அரங்கு நிறைந்து காணப்பட்டன.

புறநகர் பகுதிகளில் 50 முதல் 70 சதவிகித இருக்கைகள் நிரம்பியிருந்தன. ஐந்து நாட்களில் தமிழகம் முழுவதும் நேர்கொண்ட பார்வை 45 கோடியே 70 லட்சம் ரூபாய் மொத்த வசூல் செய்துள்ளது.

சாதாரண நாட்களில் வெளியாகும் முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் இந்த அளவிற்கு வசூல் செய்வது அபூர்வமான விஷயம். அந்த வகையில் நேர்கொண்ட பார்வை படத்தின் ஐந்து நாள் வசூல் என்பது முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது

இதற்கு காரணம் அமைப்பு ரீதியாக இல்லை என்றாலும் அஜித் என்ற தனிப்பட்ட நடிகருக்கு இளைஞர்களிடம் இருக்கக்கூடிய ஈர்ப்பு தன்மையும் செல்வாக்கும் இந்த வசூல் சாதனையை நிகழ்த்துவதற்கு காரணமாக உள்ளது என்கின்றனர் தியேட்டர் உரிமையாளர்கள்.

கடந்த 5 நாட்களாக நேர்கொண்ட பார்வை படத்திற்கு இருந்த முன்பதிவு வேகம், பார்வையாளர் வருகை இன்று காலை காட்சியிலும் அடுத்தடுத்த காட்சிகளிலும் குறைவாகவே இருக்கிறது என்று திரையரங்கு வட்டாரம் தெரிவிக்கிறது.

கடந்த ஐந்து நாட்களைப் போலவே, அடுத்து வரும் நாட்களும் நேர்கொண்ட பார்வை வசூலைக் குவிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டி உள்ளது.

இராமானுஜம்


மேலும் படிக்க


கதிர் ஆனந்துக்கு இளைஞரணியில் பதவி?


சிவகார்த்தி படத்தால் பாதிக்கப்படும் ஜெயம் ரவி!


டிவி கொடுக்கும் ஜியோ!


இரட்டைக் குழல் துப்பாக்கி!


டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நடத்திய பஞ்சாயத்து... வைகோ-அழகிரி காரசார மோதல்!


செவ்வாய், 13 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon