மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 15 ஜன 2021

காஷ்மீர் செல்ல விமானம் வேண்டாம்: ராகுல்

காஷ்மீர் செல்ல விமானம் வேண்டாம்: ராகுல்

காஷ்மீருக்கு வந்து பார்வையிட வேண்டுமென்ற ஆளுநர் சத்ய பால் மாலிக்கின் அழைப்பை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஏற்றுக்கொண்டுள்ளார்.

ஆகஸ்ட் 5 ஆம் தேதி காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது. காஷ்மீரும் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இதையடுத்து காஷ்மீர் முழுக்க இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. இணையம், தொலைபேசி இணைப்புகள் காஷ்மீருக்குள் துண்டிக்கப்பட்ட நிலையில் அங்கு என்ன நடக்கிறது என்பதை வெளியில் யாரும் அறிந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் மத்திய அரசின் முடிவை எதிர்த்து காஷ்மீர் பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்துவது போலவும் அவர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவது போலவும் வீடியோ ஒன்றை பிபிசி வெளியிட்டது. இதுதொடர்பாக கடந்த 10ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “காஷ்மீரில் இருந்து வரும் தகவல்கள் கவலை அளிக்கின்றன. இதுதொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார்.

ராகுலின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக், ராகுலை காஷ்மீருக்கு வந்து பார்வையிடுமாறும் கோரியுள்ளார். “காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை காஷ்மீருக்கு வருமாறு அழைக்கிறேன். உங்களுக்காக தனி விமானமும் ஏற்பாடு செய்து தருகிறேன். முதலில் காஷ்மீருக்கு வந்து இங்குள்ள சூழ்நிலைகளை கவனித்துவிட்டு அதன்பிறகு பேசுங்கள். பொறுப்பான நபராக நீங்கள் நடந்துகொள்ள வேண்டும். வெறுமனே குற்றச்சாட்டுக்களைக் கூறக் கூடாது” என்று தெரிவித்திருந்தார்.

மேலும், வெளிநாட்டு பத்திரிகை ஒன்று காஷ்மீரில் சூழ்நிலைகள் சரியில்லை என்று நிறுவ முயல்கிறது, அவர்களை எச்சரித்துள்ளோம் என்றும் குறிப்பிட்ட ஆளுநர், “உங்களுக்கு அனைத்து மருத்துவமனைகளும் திறந்தே இருக்கின்றன. எவரேனும் ஒருவராவது குண்டடிபட்ட காயங்களுக்கு சிகிச்சை பெற்று வருகிறாரா என்பதை நிரூபியுங்கள். வன்முறையில் ஈடுபட்டதற்காக நான்கு நபர்கள் பெல்லட் குண்டு காயம் ஏற்பட்டுள்ளது. வேறு யாருக்கும் இங்கு பலமான காயம் எதுவும் இல்லை” என்று பதிலளித்துள்ளார்.

ஆளுநரின் அழைப்புக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ள ராகுல் காந்தி, “காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக் அவர்களுக்கு... ஜம்மு காஷ்மீர் மட்டும் லடாக்கை பார்வையிடுவதற்கான உங்களுடைய அழைப்பினை நானும் எதிர்க்கட்சித் தலைவர்கள் அடங்கிய குழுவும் ஏற்கிறோம். எங்களுக்கு எந்தவித விமானமும் தேவையில்லை. ஆனால், சுதந்திரமாக பயணம் செய்து பொதுமக்கள், முக்கிய தலைவர்கள் மற்றும் ராணுவ வீரர்களை சந்தித்து பேச அனுமதிக்க வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.


மேலும் படிக்க


கதிர் ஆனந்துக்கு இளைஞரணியில் பதவி?


சிவகார்த்தி படத்தால் பாதிக்கப்படும் ஜெயம் ரவி!


டிவி கொடுக்கும் ஜியோ!


இரட்டைக் குழல் துப்பாக்கி!


டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நடத்திய பஞ்சாயத்து... வைகோ-அழகிரி காரசார மோதல்!


செவ்வாய், 13 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon