மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 1 டிச 2020

மது அருந்தி கல்லூரிக்கு வந்த மாணவர்கள் :நூதன தண்டனை!

மது அருந்தி கல்லூரிக்கு வந்த மாணவர்கள் :நூதன தண்டனை!

மது அருந்திவிட்டு கல்லூரிக்கு வந்த மாணவர்களுக்குச் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நூதன தண்டனையை வழங்கியிருக்கிறது.

அருப்புக்கோட்டை கலைக் கல்லூரியில் பிஎஸ்சி மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் 8 பேர் மது போதையில் கல்லூரிக்கு வந்ததாக அவர்களை, மூன்றாம் ஆண்டில் தொடர கல்லூரி நிர்வாகம் அனுமதிக்கவில்லை. இதை எதிர்த்துச் சம்பந்தப்பட்ட மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். அதில், இனி மதுபோதையில் கல்லூரிக்கு வரமாட்டோம். எங்களை மூன்றாம் ஆண்டில் அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தனர்.

இந்த மனுவை இன்று (ஆகஸ்ட் 13) விசாரித்த நீதிபதி சுரேஷ் குமார், மாணவர்கள் தவறை உணர்ந்து மன்னிப்பு கடிதம் அளித்துள்ளனர். இறுதி ஆண்டில் மட்டும் பிற கல்லூரிகளில் மாணவர்கள் சேர்வது கடினம். எனவே மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு கல்லூரி நிர்வாகம் மீண்டும் மாணவர்களைச் சேர்த்து கொள்ள வேண்டுமென உத்தரவிட்டார். தொடர்ந்து மதுபோதையில் கல்லூரிக்கு வந்த மாணவர்களுக்கு நூதன தண்டனையும் வழங்கியுள்ளார்.

”சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ஆம் தேதி விருதுநகரில் காமராஜர் பிறந்த இடத்தில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட வேண்டும். அங்கு வருபவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து கொடுக்க வேண்டும். மாலை 4 மணி முதல் 6 மணி வரை மதுவுக்கு எதிராக விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி பிரச்சாரம் செய்ய வேண்டும்” என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த தண்டனையை மாணவர்கள் செய்கிறார்களா இல்லையா என்பதை கண்காணிக்கக் கல்லூரி நிர்வாகம் உதவி பேராசிரியர் ஒருவரை நியமிக்க வேண்டும். பின்னர் மாணவர்களின் செயல்பாடுகள் குறித்து உதவி பேராசிரியர் கல்லூரி முதல்வரிடம் அறிக்கை கொடுக்க வேண்டும். இந்த அறிக்கையைப் பெற்ற பிறகு மாணவர்களை மூன்றாம் ஆண்டில் தொடர அனுமதிக்கலாம் என்று நீதிபதி தெரிவித்துள்ளார். மாணவர்கள் தண்டனையை நிறைவேற்றுகிறார்களா இல்லையா என்பது குறித்து விருதுநகர் டவுன் காவல் ஆய்வாளர் கண்காணித்து நீதிமன்றத்தில் அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டும். மேலும் இந்த உத்தரவு நிறைவேற்றப்பட்டது குறித்து ஆகஸ்ட் 19ஆம் தேதி கல்லூரி முதல்வர் மற்றும் சம்பந்தப்பட்ட மாணவர்கள் அறிக்கை அளிக்கவேண்டும். இந்த உத்தரவைப் பின்பற்றவில்லை என்றால் கல்லூரி ஒழுங்கு நடவடிக்கை குழுவின் முடிவைச் செயல்படுத்தக் கல்லூரிக்கு அனுமதி வழங்கப்படுகிறது என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.


மேலும் படிக்க


கதிர் ஆனந்துக்கு இளைஞரணியில் பதவி?


சிவகார்த்தி படத்தால் பாதிக்கப்படும் ஜெயம் ரவி!


டிவி கொடுக்கும் ஜியோ!


இரட்டைக் குழல் துப்பாக்கி!


டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நடத்திய பஞ்சாயத்து... வைகோ-அழகிரி காரசார மோதல்!


செவ்வாய், 13 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon