மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 30 மே 2020

ரஜினியை பின்னுக்குத் தள்ளிய அஜித்

ரஜினியை பின்னுக்குத் தள்ளிய அஜித்

தமிழ்சினிமா 2019: சறுக்கியதும் சாதித்ததும் 4

இராமானுஜம்

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார்; ஆசியா கண்டத்தில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்; தமிழக அரசியலை தீர்மானிக்க கூடிய வல்லமை படைத்த நடிகர்; அரசியலில் இறங்கினால் அடுத்த தமிழக முதல்வர் என்று ஊடகங்களால் மட்டுமே உறுதி செய்யப்பட்டு வந்த ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படங்கள் வெளிவரும்போது வேறு எந்த படங்களும் அன்றைய தினம் ரிலீஸ் செய்வதில்லை. இந்த நடைமுறை 2007 ஆம் ஆண்டிலிருந்து தமிழ் சினிமாவின் எழுதப்படாத சட்டமாக இருந்தது. அதனை மாற்றி அமைத்தது அஜித் நடித்த விஸ்வாசம் திரைப்படம்.

தமிழகத்தில் திரையரங்குகள் ஒப்பந்தம் செய்வது நம்மிடம் இருக்கும் படங்களை பொறுத்து அல்ல. எந்த படத்திற்கு எந்த நிறுவனம் அல்லது ஏரியாவில் எந்த விநியோகஸ்தர் தியேட்டர் ஒப்பந்தம் செய்கிறார் என்பது முக்கியமான ஒன்று.

தொடர்ச்சியாக திரையரங்குகளுக்கு படங்கள் கொடுத்து வரும் விநியோகஸ்தர்கள் விருப்பங்களுக்கு மாறாக திரையரங்குகள் நடப்பதில்லை அதனால் தான் குறுகிய காலத்தில் பேட்ட படத்திற்கு 400க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிட ஒப்பந்தம் செய்ய முடிந்தது.

விஸ்வாசம், பேட்ட இரண்டு படங்களில் ஜெயிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு தமிழ் சினிமாவில் எழுந்தது.

பொங்கல் அன்று புதிய படங்கள் வந்தால் அப்படங்களுக்கு ஒரு மிகப்பெரிய ஓபனிங் கிடைக்கும் ஆனால் நான்கு நாட்கள் முன்னதாகவே ஜனவரி 10 அன்று பேட்ட, விஸ்வாசம் இரண்டு படங்களும் வெளியானது.

இதுபோன்ற பெரிய நடிகர்களுடைய படங்களுக்கு அதிகாலை காட்சி என்பது ஒரு மிகப்பெரும் வசூலை வாரிக் குவிக்க வழிவகுக்கும். ஆனால் இந்த இரண்டு படங்களுக்கும் அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லை. மிகப்பெரிய ஓப்பனிங் விஸ்வாசம் படத்திற்கு மட்டுமே இருந்தது.

பேட்ட படத்திற்கு அதற்கு இணையான ஓப்பனிங் கிடைக்கவில்லை. காரணம் ஏற்கனவே ரஜினி நடித்து வெளியான காலா படம் வந்தபோது அதற்கு முன்பும் பின்பும் ரஜினி பேசிய அரசியல் அப்படத்தின் வசூலை பெருமளவு பாதித்திருந்தது. அந்தப் பாதிப்பு நீங்காத சூழலில் குறுகிய கால தயாரிப்பாக பேட்ட வெளியானது .

இந்த படத்தை தமிழகம் தவிர்த்து மற்ற உரிமைகளை விற்பனை செய்ததன் மூலம் படத்தினுடைய மொத்த பட்ஜெட் செலவை சன் பிக்சர்ஸ் ஈடுகட்டி இருந்தது. அதனால் தமிழகத்தில் இப்படத்தின் மூலம் கிடைக்கக்கூடிய வருவாய் என்பது லாபத்தின் உபரியாக சன் பிக்சர்ஸ் கருதியது. .

அதனால் தான் குறைந்தபட்ச விநியோக உரிமையாக சுமார் 40 கோடி ரூபாய்க்கு ரெட் ஜெயண்ட் நிறுவனத்திற்கு சன் பிக்சர்ஸ் வழங்கியது.

விஸ்வாசம் படத்திற்கு அனைத்து தரப்பினரிடமும் வரவேற்பும் ஆதரவும் அதிகரித்ததால் முதல் இரண்டு நாட்கள் குறைவாக இருந்த வசூல் பொங்கலுக்கு பின்னர் அதிகரிக்கத் தொடங்கியது.

ஆனால் விஸ்வாசம் பட அளவிற்கு பேட்ட படத்தினுடைய வசூல் அதிகரிக்காததால் அப்படத்தின் வசூல் விவரங்களை அதிகபட்சமாக இருப்பது போன்ற ஒரு பிம்பத்தை பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் மூலம் பேட்ட படக்குழு உருவாக்கியது .

குறுகிய நாட்களில் இதுவரை ரஜினி நடித்த படங்களை 100 கோடி ரூபாய் வசூல் செய்ததாக பத்திரிக்கையாளர்களிடம் சுப்பிரமணி கூறினார். ஆனால் அது பொய்யான தகவல் என்று அப்படம் ஓடி முடிந்தபோது உலகத்திற்கு தெரிந்தது.

தமிழகம் முழுவதும் ஓடி முடிந்த போது அப்படத்தின் மூலம் சுமார் 50 கோடி ரூபாய் அளவுக்கு தான் தயாரிப்பாளருக்கான பங்கு தொகையாக தியேட்டர்கள் மூலம் கிடைத்தது.

ஆனால் அதைவிட அதிகபட்சமாக அஜித் தன்னுடைய திரையுலக வரலாற்றில் இப்படி ஒரு வசூலை இனியும் நமது படங்கள் மூலம் கிடைக்குமா என்று ஆச்சரியப்படத்தக்க வகையில் திரையரங்குகளில் கல்லா கட்டியது விஸ்வாசம்.

விஸ்வாசம் சாதித்தது எப்படி?

நாளை பார்க்கலாம்


மேலும் படிக்க


கதிர் ஆனந்துக்கு இளைஞரணியில் பதவி?


சிவகார்த்தி படத்தால் பாதிக்கப்படும் ஜெயம் ரவி!


டிவி கொடுக்கும் ஜியோ!


இரட்டைக் குழல் துப்பாக்கி!


டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நடத்திய பஞ்சாயத்து... வைகோ-அழகிரி காரசார மோதல்!


செவ்வாய், 13 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon