மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 4 ஜுன் 2020

நீலகிரியில் கனமழை அச்சம்: முகாம்களில் தஞ்சம்!

நீலகிரியில் கனமழை அச்சம்: முகாம்களில் தஞ்சம்!

கோவை, நீலகிரி மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள் தங்களது இருப்பிடங்களுக்குச் செல்லாமல் முகாம்களிலேயே தஞ்சமடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தொடர்ந்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து வருகிறது. மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி வீடுகளையும் உடைமைகளையும் இழந்த மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 5,000க்கும் மேற்பட்டோர் 150க்கும் மேற்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தின் பிற இடங்களிலிருந்தும் நிவாரண உதவிகள் வந்துகொண்டிருக்கின்றன.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3ஆம் தேதி துவங்கிய பருவமழை தொடர்ந்து படிப்படியாக அதிகரித்து கடந்த வாரம் முழுக்க கொட்டித் தீர்த்தது. ஆகஸ்ட் 7 முதல் 9 வரையிலான மூன்று நாட்கள் மட்டும் நீலகிரி மாவட்டத்தில் வரலாறு காணாத மழை பெய்தது. 1,000 மி.மீ. மழை பதிவானது. இந்த மழையால், ஊட்டி, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய நான்கு தாலுகாக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. மழை சற்று ஓய்ந்து இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில், முகாம்களில் உள்ள மக்கள் இன்னும் வெளியேற்றப்படவில்லை.

சென்னை வானிலை மையம் மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டியுள்ள கேரள மாநிலம் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்து வருகிறது. இதனால், மாவட்ட நிர்வாகம் முகாம்களில் தங்கியுள்ளவர்களை வெளியேற்றாமல் தொடர்ந்து அவர்களை நிவாரண முகாம்களில் தங்க வைத்துத் தேவையான உதவிகளைச் செய்து வருகிறது. ஒரு சிலர் மட்டும் தாங்களாகவே முன்வந்து முகாம்களில் இருந்து தங்களது வீடுகளுக்கு சென்றனர்.

முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள இடங்களைத் தவிர மற்ற இடங்களில் பள்ளிகளும் கல்லூரிகளும் இன்று திறக்கப்பட்டன. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ”நீலகிரி மாவட்டத்தில் மழை நீடிக்கும் என்று வானிலை மையம் எச்சரித்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொடர்ந்து நிவாரண முகாம்களில் பாதிக்கப்பட்ட மக்களை தங்கவைத்துள்ளோம். மழை எச்சரிக்கை கைவிடப்பட்ட பின்னர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை அவர்களது வீடுகளுக்கு அனுப்பும் பணிகள் மேற்கொள்ளப்படும். தற்போது ஒரு சிலர் முகாம்களிலிருந்து சென்றுவிட்டனர். 5,000க்கும் மேற்பட்டவர்கள் இன்னும் முகாம்களில்தான் இருக்கின்றனர்” என்றனர்.

தமிழகத்தில் நிலைமை இப்படி இருக்க, கேரள மாநிலத்திலும் மழை வெள்ள பாதிப்பு மிக மோசமாக உள்ளது. கேரள மாநிலம் கவலப்பாராவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 60க்கும் மேற்பட்டோர் சிக்கிக் கொண்ட நிலையில் இதுவரை 20 உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. எஞ்சிய 40 பேரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுமார் 1,500 முகாம்களில் 2.5 லட்சம் பேர் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட இடங்களை ஹெலிகாப்டர் மூலம் முதல்வர் பினராயி விஜயன் பார்வையிட்டு, முகாம்களில் தங்கியிருக்கும் மக்களை நேரில் சந்தித்தார். கேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 88 ஆக உயர்ந்திருக்கிறது.

கர்நாடக மாநிலத்திலும் மழை வெள்ள பாதிப்பு மிக மோசமாக உள்ளது. பெலகாவி, பாகல்கோட்டை, உப்பள்ளி தார்வார், குடகு, சிக்கமகளூரு உள்ளிட்ட 17 மாவட்டங்களில் பெய்த தொடர் மழையால் அந்த மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. சாலைகள், பாலங்கள், மேம்பாலங்கள் வெள்ளத்தில் சேதமடைந்துள்ளதால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பல கிராமங்களில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்கள் தங்களது வீடுகளுக்குத் திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

கர்நாடக மாநிலத்தில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளது. 12 பேர் காணாமல் போயுள்ளனர். தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், துணை ராணுவப் படைவீரர்கள், தீயணைப்பு படை வீரர்கள் தொடர்ந்து மக்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


மேலும் படிக்க


கதிர் ஆனந்துக்கு இளைஞரணியில் பதவி?


சிவகார்த்தி படத்தால் பாதிக்கப்படும் ஜெயம் ரவி!


டிவி கொடுக்கும் ஜியோ!


இரட்டைக் குழல் துப்பாக்கி!


டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நடத்திய பஞ்சாயத்து... வைகோ-அழகிரி காரசார மோதல்!


செவ்வாய், 13 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon