மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 1 ஜுன் 2020

நீட் மசோதா வழக்கில் உத்தரவு: மறுக்கும் நீதிமன்றம்!

நீட் மசோதா வழக்கில் உத்தரவு: மறுக்கும் நீதிமன்றம்!

நீட் மசோதாவுக்குக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறக் கோரி தொடரப்பட்ட வழக்கைச் சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைப்பதாக அறிவித்துள்ளது.

தமிழக சட்டமன்றத்தில் நீட் விலக்கு கோரி நிறைவேற்றப்பட்ட இரண்டு மசோதாக்களையும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, தமிழ்நாடு மாணவர் பெற்றோர் நலச்சங்கம் உள்ளிட்ட 4 தரப்புகளிலிருந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் 2017ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் மத்திய மாநில அரசுகள் தங்களது விளக்கங்களை அறிக்கையாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து இருக்கின்றன.

ஏற்கனவே இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது இரு மசோதாக்களும் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுவிட்டதாகவும், அதைத் தமிழக அரசு ஏற்றுக் கொண்டதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பில், எந்த காரணங்களும் தெரிவிக்காமல் மசோதாக்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால் நடைமுறை நிறைவடையவில்லை எனக் கருத வேண்டியுள்ளதாகவும். இவ்வழக்கில் நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. தமிழக அரசு தரப்பில், நீட் மசோதா விவகாரம் தொடர்பாகச் சட்டமன்றத்தில் நீண்ட விவாதம் நடத்தப்பட்டதாகவும், மசோதாக்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட காரணம் குறித்து விளக்கம் அளிக்கும்படி 2017 செப்டம்பர் முதல் கடந்த மே 5ஆம் தேதி வரை மத்திய அரசுக்கு 11 கடிதங்கள் அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து இன்று உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம், மத்திய அரசின் விளக்கத்தின் பேரில், மசோதாவுக்கு ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்கும்படி நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று தெரிவித்து வழக்கை முடித்து வைத்துள்ளது. மேலும் இவ்விவகாரத்தில் உரிய நடைமுறைகள் பின்பற்றவில்லை என்றால், அதுகுறித்து தனி வழக்கு தொடரலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.


மேலும் படிக்க


கதிர் ஆனந்துக்கு இளைஞரணியில் பதவி?


சிவகார்த்தி படத்தால் பாதிக்கப்படும் ஜெயம் ரவி!


டிவி கொடுக்கும் ஜியோ!


இரட்டைக் குழல் துப்பாக்கி!


டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நடத்திய பஞ்சாயத்து... வைகோ-அழகிரி காரசார மோதல்!


செவ்வாய், 13 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon