மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 4 ஜுன் 2020

ப.சிதம்பரம் பூமிக்கு பாரம்: அணை திறப்பு விழாவில் எடப்பாடி

ப.சிதம்பரம் பூமிக்கு பாரம்: அணை திறப்பு விழாவில் எடப்பாடி

டெல்டா விவசாயிகள் பாசனத்துக்காகத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேட்டூர் அணையிலிருந்து இன்று காலை தண்ணீர் திறந்து வைத்தார். இதனால் இந்த ஆண்டு சம்பா சாகுபடி செய்யலாம் என டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதன் காரணமாக கபினி அணையிலிருந்து காவிரிக்குத் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அதிகளவிலான தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதுபோன்று மேட்டூர் அணையின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது. இன்று காலை 6 மணியளவில் அணைக்கு நீர் வரத்து 2.3லட்ச கன அடியாக இருந்தது. அதன்படி அணையின் நீர் மட்டம் 65ஆவது முறையாக 100 அடியை எட்டியது. அணையில் நீர் இருப்பு 67 டிஎம்சியாக உள்ளது. முன்னதாக மேட்டூர் அணையிலிருந்து சம்பா சாகுபடிக்காகத் தண்ணீர் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

அதன்படி இன்று காலை 8.30 மணியளவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாசனத்திற்காக மேட்டூர் அணையைத் திறந்துவைத்தார். அணையைத் திறந்து வைத்துப் பேசிய முதல்வர், “2.3 லட்ச கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால் மேட்டூர் அணையின் முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே டெல்டா விவசாயிகளுக்குத் தேவையான தண்ணீர் திறக்கப்படும். டெல்டா விவசாயிகள் மட்டுமின்றி சேலம், ஈரோடு, கரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளும் பயன்பெறுவர். தற்போது நமக்கு 330 டிஎம்சி தண்ணீர் தேவைப்படுகிறது. மேட்டூர் அணையிலிருந்து 220 டிஎம்சியும், மீதமுள்ளவை வட கிழக்கு பருவ மழை மூலமும் பூர்த்தி செய்யப்படும். முதற்கட்டமாக அணையிலிருந்து விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுகிறது. இது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு விநாடிக்கு 10 ஆயிரம் அடியாக உயர்த்தப்படும். 137 நாட்களுக்கு அணை திறக்கப்பட்டிருக்கும். அணை திறக்கப்பட்டுள்ளதால் 16லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர் “பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான 14 ஆயிரம் ஏரிகளும், உள்ளாட்சி அமைப்புகளுக்குச் சொந்தமான 39 ஆயிரம் குளம், குட்டைகள் தூர்வாரப்படும். காவிரியின் குறுக்கே 2 தடுப்பணைகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது, மத்திய அரசின் உதவியுடன் டெல்டாவில் உள்ள அனைத்து கால்வாய்களும் கான்கிரீட் கால்வாய்களாக மாற்றப்படும். மேலும் 3 தடுப்பணைகள் கட்டப்படும். கோதாவரி - காவிரி நதிகள் இணைக்கப்படுவது உறுதி. நதிகள் இணைக்கப்பட்டால் 125 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும்” எனவும் குறிப்பிட்டார்.

பின்னர் தமிழகத்தைப் பிரித்தால் கூட அதனை அதிமுக தலை வணங்கி ஏற்கும் என்று ப.சிதம்பரம் பேசியிருக்கிறாரே என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்துப் பேசிய முதல்வர், ”ப.சிதம்பரம் எத்தனை ஆண்டுக் காலம் மத்திய அமைச்சராக இருந்தார். அவரால் நாட்டுக்கு என்ன பயன் பூமிக்குத்தான் பாரம். அவருடைய பேச்சைப் பொருட்படுத்த வேண்டியதில்லை” என்று தெரிவித்தார்.


மேலும் படிக்க


டிவி கொடுக்கும் ஜியோ!


கதிர் ஆனந்துக்கு இளைஞரணியில் பதவி?


சிவகார்த்தி படத்தால் பாதிக்கப்படும் ஜெயம் ரவி!


இரட்டைக் குழல் துப்பாக்கி!


டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நடத்திய பஞ்சாயத்து... வைகோ-அழகிரி காரசார மோதல்!


செவ்வாய், 13 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon