மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 1 ஜுன் 2020

நெருங்கும் தீபாவளி: தொடரும் பட்டாசு விபத்து!

நெருங்கும் தீபாவளி: தொடரும் பட்டாசு விபத்து!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சிவகாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரக்கணக்கான பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. பட்டாசுத் தொழிலை மட்டுமே நம்பி ஏராளமான குடும்பங்கள் இருக்கின்றன. பட்டாசு ஆலைகளில் கவனக் குறைவாலும் போதிய பாதுகாப்பு அம்சங்கள் இல்லாமலும் வெடி விபத்துகளும், அதனால் உயிரிழப்புகளும் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றன. வெடி மருந்து தயாரிப்பில் ரசாயனக் கலப்பின் போது ஏற்படும் வெடி விபத்துகள் ஏராளம். இந்நிலையில் சிவகாசிக்கு அருகே பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி பணியாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் முத்துலாபுரம் கிராமத்தில் ஸ்ரீராம் என்பவருக்கு சொந்தமான லாரா பயர் வொர்க்ஸ் என்ற பட்டாசு ஆலை உள்ளது. நாக்பூர் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அனுமதியின் கீழ் செயல்படும் இந்த ஆலையில் சுமார் 50 அறைகளில் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆலையைத் தற்போது சிவகாசியை சேர்ந்த கமல் என்பவர் குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். இந்த ஆலையில் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். தினசரி காலை 9 மணிக்கு வேலைக்காகப் பணியாளர்கள் வருவார்கள். பட்டாசு மருந்து கலவைப் பணி செய்பவர்கள் மட்டும் காலை 6 மணிக்கே வேலைக்கு வந்துவிடுவார்கள்.

இன்று (ஆகஸ்ட் 13) காலையில் மத்தியசேனை கிராமத்தைச் சேர்ந்த 5 பேர் பட்டாசு மருந்து கலவைப் பணிக்கு வந்துள்ளனர். ரசாயனக் கலப்பு பணியின் போது எதிர்பாராத விதமாக ரசாயனத்தில் தீப்பிடித்து வெடித்துள்ளது. இதனால் அந்த அறை உட்பட மூன்று அறைகள் வெடித்துச் சிதறி தரைமட்டமாகியுள்ளன. பணியில் ஈடுபட்டிருந்த 5 பேரில் நால்வர் அங்கிருந்து தப்பியோடிய நிலையில், மாயழகு (வயது 45) என்பவர் மட்டும் இடிபாட்டில் சிக்கிவிட்டார். தகவலறிந்த தீயணைப்புப் படையினர் அங்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். அப்போது இடிபாட்டில் சிக்கியிருந்த மாயழகுவின் உடல் மீட்கப்பட்டுள்ளது. வெடிவிபத்தில் சிக்கிய மற்ற நால்வரும் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வெடி விபத்து குறித்து ஆமத்தூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகாசியைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெடி விபத்துகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தீபாவளிக்கு முன்னர் பட்டாசுக்கான தேவை மற்றும் அதற்கான ஆர்டர்கள் அதிகமாக இருப்பதால் ஆலைகள் மும்முரமாக இயங்கும். சில பட்டாசு ஆலைகளில் இரவு நேரங்களிலும் வேலை நடக்கும். இதுபோன்ற சூழலில் ஏற்படும் விபத்துகள் பட்டாசுத் தொழிலையும் அதை நம்பியிருக்கும் குடும்பங்களையும் பாதிக்கின்றன. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 10க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் விபத்துக்குள்ளாகியுள்ளன. சிவகாசி அருகே காக்கிவாடன்பட்டியிலுள்ள இரண்டு பட்டாசு ஆலைகளில் ஏற்பட்ட விபத்துகளில் 5 பேர் பலியாகினர். வெம்பக்கோட்டையை அடுத்த ராமுத்தேவன்பட்டியில் இயங்கிவரும் ஏ.ஆர்.வி. பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் இருவர் பலியாகினர். குகன்பாறையில் இயங்கிவந்த குணா பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர்.


மேலும் படிக்க


டிவி கொடுக்கும் ஜியோ!


கதிர் ஆனந்துக்கு இளைஞரணியில் பதவி?


சிவகார்த்தி படத்தால் பாதிக்கப்படும் ஜெயம் ரவி!


இரட்டைக் குழல் துப்பாக்கி!


டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நடத்திய பஞ்சாயத்து... வைகோ-அழகிரி காரசார மோதல்!


செவ்வாய், 13 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon