மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 14 நவ 2019

18 ஆண்டுகளில் முதல் விடுமுறை: மோடி

18 ஆண்டுகளில் முதல் விடுமுறை: மோடி

டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் 'மேன் வெர்சஸ் வைல்டு' நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சாகசம் செய்தார்.

வனம் மற்றும் விலங்குகள் தொடர்பான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வரும் டிஸ்கவரி சேனலில் 'மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. இந்நிகழ்ச்சியை பிரிட்டனின் முன்னாள் ராணுவ வீரரான பியர் கிரில்ஸ் தொகுத்து வழங்குகிறார். ஆள் நடமாட்டம் இல்லாத அடர்ந்த வனப் பகுதிக்குள் சென்று அங்குள்ள சவால்களைச் சமாளித்து உயிர் பிழைத்து வாழ்வது எப்படி என்பதை விளக்கும் இந்நிகழ்ச்சிக்கு இந்தியா உட்பட உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பது குறித்து இந்திய மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். நேற்று (ஆகஸ்ட் 12) இரவு 9 மணிக்கு இந்நிகழ்ச்சி உலகம் முழுவதும் ஒளிபரப்பானது. உத்தராகண்ட் மாநிலம் ஜிம் கார்பெட் பூங்காவில் வனவிலங்கு பாதுகாப்பை மையக் கருத்தாகக் கொண்டு இந்நிகழ்ச்சி எடுக்கப்பட்டு ஒளிபரப்பப்பட்டது. ஜூலை 29ஆம் தேதியன்று இந்நிகழ்ச்சிக்கான டீஸர் வெளியிடப்பட்டிருந்தது.

இமயமலையில் ஹெலிகாப்டரில் பறந்து செல்லும் பியர் கிரில்ஸ், ஜிம் கார்பெட் பூங்காவில் தரையிறங்கியவாறு நிகழ்ச்சி தொடங்குகிறது. அதன் பின் கிரில்ஸ் ஆறு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று அந்த இடத்தை அடைகிறார். ”உத்தராகண்ட்டில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியான ஜிம் கார்பெட் பூங்கா 520 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இங்கு யானை, மான்கள், வங்கப் புலிகள் உள்ளிட்ட பல உயிரினங்கள் வாழ்கின்றன. 250 புலிகள் பாதுகாக்கப்படுகின்றன” என்று பேசியவாறு கிரில்ஸ் நடந்து செல்கிறார் . 15 நிமிடங்களுக்குப் பின் மோடி காரில் வந்து இறங்குகிறார்.

பியர் கிரில்ஸுடனான மோடியின் உரையாடலில், “வெல்கம் கிரில்ஸ். இப்பயணம் நன்றாக உள்ளது. இப்பூங்கா ஒரு சிறந்த சுற்றுலாப் பகுதி. இங்கு நதி, காடுகள், தாவரங்கள் எனப் பார்க்க வேண்டிய இடங்கள் அதிகம் உள்ளன. இந்தியா என்பது ஒரு பன்முக நாடு. 100 மொழிகள் 1,100 வட்டார மொழிகள் உள்ளன. இந்த இடம் ஒன்றும் ஆபத்தானதல்ல. இயற்கையோடு ஒன்றிச் சென்றால் ஆபத்து இல்லை. வன விலங்குகள்கூட நமக்கு நல்லதுதான் செய்யும். எனது சொந்த ஊர் குஜராத்தில் உள்ள வாத்நகர். அங்குதான் நான் படித்தேன். அங்கிருந்துதான் எனது சமூக சேவையைத் தொடங்கினேன். எங்களது குடும்பம் ஏழ்மையானது. சிறிய வீட்டில்தான் வசித்தோம். அரசு பள்ளியில்தான் படித்தேன். இயற்கையோடு ஒன்றித்தான் எனது வாழ்க்கை இருந்தது.

எனது 17ஆவது வயதில் வாழ்க்கையின் தேடலுக்காக இமயமலைக்குச் சென்றேன். அதன் பின்னர் பலமுறை அங்கு சென்றுள்ளேன். சாதுக்களைச் சந்தித்துள்ளேன். அந்த அனுபவம் எனது வாழ்க்கைக்கு இன்றும் உதவுகிறது. நான் முதலில் குஜராத் மாநில முதல்வராக 13 ஆண்டுகள் இருந்தேன். தற்போது ஐந்து ஆண்டுகளாகப் பிரதமராக இருக்கிறேன். தற்போது 18 ஆண்டுகளுக்குப் பின், எனக்கு பிடித்த இடமான காட்டுக்கு வந்துள்ளேன். இந்த 18 ஆண்டுகளில் நான் எடுக்கும் முதல் விடுமுறை இதுதான். மக்களின் கனவுகளை நனவாக்குவதில்தான் எனக்கு மகிழ்ச்சி” என்று பேசினார்.

இந்நிகழ்ச்சி குறித்து பியர் கிரில்ஸ் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “நாங்கள் சென்ற உத்தராகண்டில் உள்ள ஜிம் கார்பெட் தேசியப் பூங்காவில் மோசமான காலநிலை உள்ளிட்ட பல்வேறு சூழல்கள் இருந்தும் அவற்றைத் தைரியமாக எதிர்கொண்டார் பிரதமர் மோடி. நெருக்கடியான சூழலில்கூட அவர் அமைதியாகவும் உற்சாகமாகவும் இருந்ததைக் காண முடிந்தது. எப்போதும் நீங்கள் அரசியல்வாதிகளை மேடையில்தான் பார்த்திருப்பீர்கள். ஆனால், காடுகளில் அனைவரும் ஒன்றுதான். அங்கு பயணிக்க தைரியமும் அர்ப்பணிப்பும் வேண்டும்.

நாங்கள் அங்கிருந்தபோது கடினமான சூழ்நிலை நிலவியது. கனமழை பெய்தது. ஆனால், அந்தப் பயணம் முழுவதும் அனைத்து நெருக்கடியிலும் நாங்கள் என்ன செய்தாலும் அமைதியாக இருந்தார் மோடி. நெருக்கடியின் போதுதான் ஒருவர் யார் என்று தெரியவரும். பயணம் முழுவதும் அவர் மிகவும் பணிவுடன் இருந்தார். கடுமையான மழை நேரத்திலும்கூட அவர் முகத்தில் புன்னகையை பார்க்க முடிந்தது” என்று தெரிவித்தார்.

நிகழ்ச்சி குறித்து மோடி பேசுகையில், “இந்த நிகழ்ச்சியை உலக மக்கள் பார்க்கும்போது இந்தியாவைச் சுற்றிப்பார்க்க விரும்புவார்கள். இது நாட்டின் சுற்றுலாவை மேம்படுத்த உதவும். இந்நிகழ்ச்சி குறித்தும் காடுகள் குறித்தும் அனைவரும் கருத்து தெரிவிக்க வேண்டும்” என்று கேட்டுள்ளார். சிறந்த கருத்து தெரிவிப்பவர்களுக்கு மோடியைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மோடியின் நமோ செயலில் கருத்துகள் பதிவிடப்பட்டு வருகின்றன.


மேலும் படிக்க


டிவி கொடுக்கும் ஜியோ!


கதிர் ஆனந்துக்கு இளைஞரணியில் பதவி?


சிவகார்த்தி படத்தால் பாதிக்கப்படும் ஜெயம் ரவி!


இரட்டைக் குழல் துப்பாக்கி!


டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நடத்திய பஞ்சாயத்து... வைகோ-அழகிரி காரசார மோதல்!


செவ்வாய், 13 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon