மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 28 ஜன 2021

முகாம்களில் 5,000 பேர்: நீலகிரி துயரம்!

முகாம்களில் 5,000 பேர்: நீலகிரி துயரம்!வெற்றிநடை போடும் தமிழகம்

நீலகிரி மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகள் அதிகமாக இருக்கும் நிலையில், பாதிப்பு விவரங்கள் மதிப்பிடப்பட்ட பின்னர் மத்திய அரசிடம் நிதி கோரப்படும் என்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் ஏராளமான வீடுகளும் சாலைகளும் பாலங்களும் சேதமடைந்துள்ளன. கன மழையின் காரணமாக இதுவரையில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். தேசியப் பேரிடர் மீட்பு படை, ராணுவம், தீயணைப்புத் துறை, காவல் துறை, வனத் துறை என அனைத்து துறை அதிகாரிகளும் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சீரமைத்து வருகின்றனர். கனமழை பாதிப்பால் 1,200 வீடுகளுக்கு மேல் சேதமடைந்துள்ள நிலையில் சுமார் 5,000 பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

பலத்த மழை காரணமாக தோவாலா அடுத்துள்ள வாழமூலா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாலம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது. அதை ஊர்மக்கள் சேர்ந்து சீர் செய்தனர். நீலகிரியின் எமரால்டு பள்ளத்தாக்கிலிருந்து அவலாஞ்சி செல்லும் வழி முழுக்க சேதமடைந்துள்ளது. மண் சரிவால் சாலைகள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன. கூடலூர் வட்டத்துக்கு உட்பட்ட தேன் வயல் பழங்குடி கிராம மக்கள் மிக மோசமான பாதிப்புகளைச் சந்தித்துள்ளனர். ஆற்றங்கரை ஓரத்திலும் தாழ்வான பகுதியிலும் இந்த கிராமம் அமைந்திருப்பதால் வருடந்தோறும் ஏற்படும் வெள்ளப் பெருக்கில் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

அவலாஞ்சி உள்ளிட்ட பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நீலகிரி, கோவையில் நாளை கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில் சீரமைப்புப் பணிகள் முடங்க வாய்ப்புள்ளது. பல இடங்களில், மரங்கள் சாய்ந்து விழுந்து, மண் சரிவுகள் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் மழை குறைந்து சீரமைப்புப் பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுக்காக்களில் மழை தொடர்வதால் பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் மழை வெள்ள மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய துணை முதல்வர் பன்னீர் செல்வம் இன்று செல்வதாகவும், வெள்ள சேத விபரங்கள் மதிப்பீடு செய்யப்பட்ட பிறகு மத்திய அரசிடம் நிதியுதவி கோரப்படும் எனவும் தெரிவித்தார்.


மேலும் படிக்க


டிவி கொடுக்கும் ஜியோ!


கதிர் ஆனந்துக்கு இளைஞரணியில் பதவி?


சிவகார்த்தி படத்தால் பாதிக்கப்படும் ஜெயம் ரவி!


இரட்டைக் குழல் துப்பாக்கி!


டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நடத்திய பஞ்சாயத்து... வைகோ-அழகிரி காரசார மோதல்!


செவ்வாய், 13 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon