மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 4 ஜுன் 2020

காஞ்சி கலெக்டருக்கு ஆதரவும் எதிர்ப்பும்!

காஞ்சி கலெக்டருக்கு  ஆதரவும் எதிர்ப்பும்!

அத்திவரதர் கோயில் பாதுகாப்புப் பணியிலிருந்த காவல்துறை ஆய்வாளர் ஒருவர் விஐபி வரிசையில் பொதுமக்களை அனுப்புகிறார் என்று ஒருமையில் பேசியதை அடுத்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவுக்கு எதிராகப் பலதரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் அதிகரித்து வந்தன. தற்போது காவல்துறையினர் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி விஐபி, விவிஐபி வரிசையில் தங்களுக்குத் தெரிந்தவர்களை அனுப்புவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த நிலையில் காவல்துறையினர் நோ பென்ஷன், நோ டென்ஷன், வேலை போனாலும் பரவாயில்லை அடிபணிந்து போகமாட்டோம் என்று மாவட்ட ஆட்சியருக்கு எதிராக வாட்ஸ் அப்பில் செய்திகள் பரப்பி வருகிறார்கள். மாவட்ட ஆட்சியர் குடும்பத்தினர் விவிஐபி பாதையில் சென்றதை வீடியோ எடுத்து வெளியிட்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் நமது மின்னம்பலம்.காம் தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிகை அலுவலகத்தைத் தொடர்புகொண்ட காஞ்சி வருவாய்த் துறை அதிகாரி ஒருவர், மாவட்ட ஆட்சியர் திட்டியதைப் பற்றி மட்டும் பெருசாக செய்திகள் வெளியிடுறிங்க, காவல் துறையினரும் பெருசு படுத்துராங்க காஞ்சியில் என்ன நடக்கிறது? என்று விசாரித்து பாருங்கள் என்று பேசினார்.

அவர் பேசுகையில், ”விஐபி, விவிஐபி என பிரிக்கச்சொன்னது யார்?, அறநிலையத் துறை அதிகாரிகள் என்ன செய்கிறார்கள், கோயிலுக்கு வரும் வருமானத்தை மாவட்ட ஆட்சியருக்கா அள்ளி கொடுக்கிறார்கள், திருப்பதியில் அனைத்தும் அறநிலையத் துறைதான் கவனித்துக்கொள்கிறது, இங்கே அறநிலையத் துறை ஒன்று இருக்கிறதா? என்று தெரியவில்லை. நகராட்சி ஊழியர்கள், மருத்துவத் துறை ஊழியர்கள் இரவும் பகலுமாக மாடாக உழைக்கிறார்கள் அவர்கள் அடையாள அட்டையுடன் கோயிலுக்குச் சென்றால் பாதுகாப்பில் இருக்கும் போலீஸார் திருப்பி அனுப்புகிறார்கள் அவமானப்படுத்துகிறார்கள், அவர்கள் உழைப்பு வெளியில் வருவதில்லை, போலீஸ் மட்டும்தான் வேலை செய்வதாகச் சித்தரிக்கிறார்கள்.

பாதுகாப்புப் பணிக்கு வரும் இரண்டாம் நிலை காவலர்கள், தலைமைக் காவலர்கள் முதல் அதிகாரிகள் வரையில் தினம்தோறும் தெரிந்தவர், அறிந்தவர், குடும்பத்தார்கள் என்று கும்பல் கும்பலாக விவிஐபி பாதையில் போலீசார் அனுப்பிவைக்கிறார்கள் அவர்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி. அதுமட்டுமல்ல தினம்தோறும் காவல்துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் பாஸ்கேட்டு வருகிறார்கள் இதையெல்லாம் மாவட்ட ஆட்சியர் வெளியில் சொல்லித் தூற்றுகிறாரா என்ன?

எஸ்.பி,ஆஃபிஸிலிருந்தும், டிஐஜி ஆபிஸிலிருந்தும் அதிகமான பாஸ்களை வாங்கி சென்றுள்ளார்கள் இதையெல்லாம் நாங்கள் வெளியில் சொல்லவா. விஐபி, விவிஐபி பாதையில் செல்பவர்கள் அரை மணிநேரம், ஒரு மணி நேரத்தில் தரிசனம் செய்துவிட்டு திரும்புவார்கள். தற்போது மணிக்கணக்கில் காத்திருந்து சாமி கும்பிடுகிறார்கள் என்று புகார் தெரிவிக்கிறார்கள், இதற்கு யார் பதில் சொல்வது?. விஐபி, விவிஐபி பாதையில் அதிகமாகச் செல்லக்கூடியவர்கள் பாதுகாப்புப் பணியில் உள்ள காவல் துறையினரால் அனுப்பப்படும் கூட்டம்தான் அதிகம்” என்கிறார்.

தற்போது காவல் துறைக்கு எதிரான செய்திகளை வாட்ஸ் அப், முகநூல் பகுதியில் பரப்பி வருகிறார்கள் உள்ளாட்சித் துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள். மாவட்ட ஆட்சியர், காவல் துறை ஆய்வாளர் இருவர் பிரச்சினை, தற்போது காவல்துறை, வருவாய்த் துறை மோதலாக உருவெடுத்து வருவதை உயர்மட்டத்தில் இருப்பவர்கள் உடனே தலையிட்டு சமரசம் செய்துவைப்பது ஆட்சிக்கும் நிர்வாகத்துக்கும் சிறப்பு என்கிறார்கள் வருவாய்த் துறை அதிகாரிகள்.

செவ்வாய், 13 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon