மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 21 ஜன 2020

காஷ்மீர்: உலக அரங்கில் உயரும் இந்தியாவின் கை!

காஷ்மீர்:  உலக அரங்கில் உயரும் இந்தியாவின் கை!

ஜம்மு காஷ்மீரில் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் பதற்றமும் பாதுகாப்பு கெடுபிடிகளும் நீடித்து வரும் நிலையில் 370ஆவது சட்டப்பிரிவை ரத்து செய்த இந்திய அரசின் செயல்பாடுகளுக்கு சர்வதேச அளவில் ஆதரவு அதிகரித்து வருகிறது.

காஷ்மீர் மாநிலத்தை யூனியன் பகுதிகளாக அறிவித்ததற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பாகிஸ்தான் இந்த விவகாரத்தை சர்வதேச பிரச்சினையாக பிம்பப்படுத்த, தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன்படி காஷ்மீரை இந்தியா மறு வரையறை செய்த விவகாரத்தை ஐநா பாதுகாப்பு கவுன்சில் வரை எடுத்துச்செல்லும் என்று பாகிஸ்தான் அறிவித்தது.

“நாங்கள் இந்த விவகாரத்தை ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு எடுத்துச் செல்கிறோம். இதற்கு சீனாவின் உதவி எங்களுக்குத் தேவைப்படுகிறது. சீனா எங்களுக்குத் தேவையான ஆதரவை வழங்குவதாக உறுதி அளித்துள்ளது” என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மசூத் குரேஷி கடந்த வாரம் சீனப் பயணத்தை முடித்து இஸ்லாமாபாத் திரும்பியதும் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கினார்.

ஆனால், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தற்போதைய தலைவராக இருக்கும் போலந்து நாடு, இந்தப் பிரச்சினையில் இந்தியாவும் பாகிஸ்தானும் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று முதன்முதலாக தன் கருத்தை வெளிப்படையாகக் கூறியிருக்கிறது. இதனால் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீரை சர்வதேச பிரச்சினையாக மாற்றும் பாகிஸ்தானின் முயற்சி எடுபடுமா என்று கேள்விக்குறி வலிமையாக எழுந்துள்ளது.

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் விதிமுறைகளின்படி அதில் உறுப்பினராக இருக்கும் ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு மாதமும் கவுன்சிலுக்குத் தலைமை வகிக்கும். இந்த வகையில் ஆகஸ்ட் மாதம் ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு போலந்து தலைமை வகிக்கிறது.

இந்த நிலையில் பாகிஸ்தான் இப்பிரச்சினையை நிச்சயமாக போலந்து நாட்டிடம் எடுத்துச் செல்லும் என்று உணர்ந்த நமது வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதியே போலந்து நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜேக்குடன் தொலைபேசியில் உரையாடி காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் இந்திய அரசியல் சாசனத்துக்கு உட்பட்டது என்றும் இந்திய ஆளுகைக்குட்பட்ட நிலப்பரப்பின் மீதுதான் என்றும் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.

வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் போலந்து நாட்டுடன் மட்டுமல்ல, பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடுகளான ஐந்து நாடுகள் தற்காலிக உறுப்பு நாடுகளான 10 நாடுகள் என 15 நாடுகளுடனும் கடந்த வாரமே தொடர்பு கொண்டு பிரச்சினையின் தன்மை குறித்தும் இதில் இந்தியா எடுத்துள்ள நடவடிக்கை குறித்தும் விளக்கியுள்ளார்.

இந்தப் பின்னணியில் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில ஊடகத்திடம் இதுகுறித்து பேசியுள்ள இந்தியாவுக்கான போலந்து தூதர் ஆடம் புரோகாவ்ஸ்கி, “இந்தப் பிரச்சினையில் இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் தங்களுக்குள் பரஸ்பர சாதக பாதகங்கள் கருதி விவாதித்து தீர்வு காண வேண்டும் என்று போலந்து நம்புகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார். அமைதிப் பேச்சுவார்த்தையின் மூலம் ஆகவே இதை தீர்க்க முடியும் என்றும் ஐரோப்பிய யூனியன் போலவே தாங்களும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தையை விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் தற்போது இந்திய அரசால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் மறுசீரமைப்பு நடவடிக்கை இந்திய அரசியல் சட்டத்துக்குட்பட்டது என்று ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினரான ரஷ்யா ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்த நிலையில் பாதுகாப்பு கவுன்சிலில் ஆகஸ்ட் மாத தலைவர் போலந்து நாட்டின் இந்தக் கருத்து சர்வதேச அரங்கில் இந்தியாவின் கரத்தை வலுப்படுத்தி உள்ளது.

காஷ்மீர் மாநிலத்தில் இந்திய அரசால் அடக்குமுறைகள் ஏவப்படுகின்றன என்றும் அங்கே போராட்டம் கடுமையாக நடக்கிறது என்றும் பிபிசி, கார்டியன், அல் ஜசீரா போன்ற சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுவரும் நிலையில், காஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச அளவில் இந்தியாவின் கை ஓங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த மாதம் எப்படியாவது ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீர் விவகாரத்தை அலுவலக ரீதியாக விவாதப்படுத்த வேண்டும் என்ற பாகிஸ்தானின் முயற்சியை இந்தியா தனது சர்வதேசத் தொடர்புகள் மூலம் முறியடிக்க ஆரம்பித்திருக்கிறது.


மேலும் படிக்க


டிவி கொடுக்கும் ஜியோ!


கதிர் ஆனந்துக்கு இளைஞரணியில் பதவி?


சிவகார்த்தி படத்தால் பாதிக்கப்படும் ஜெயம் ரவி!


இரட்டைக் குழல் துப்பாக்கி!


டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நடத்திய பஞ்சாயத்து... வைகோ-அழகிரி காரசார மோதல்!


செவ்வாய், 13 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon