மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 24 பிப் 2020

மேட்டூர் அணை இன்று திறப்பு!

மேட்டூர் அணை இன்று திறப்பு!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஆகஸ்ட் 13) மேட்டூர் அணையைத் திறந்து வைக்கிறார்.

தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் கேரளம், கர்நாடகம், தமிழ்நாட்டில் நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் இந்தக் கனமழையைத் தொடர்ந்து மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துவருகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 90 கன அடியாக உள்ளது.

ஆண்டுதோறும் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட வேண்டும். ஆனால், கர்நாடகம் தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய நீரை முறைப்படி தர மறுப்பதால் இந்த அணை திறப்பு என்பது கர்நாடகத்தில் பெய்யும் கனமழையைப் பொறுத்தே அமைகிறது. பொதுவாக அணையின் நீர்மட்டம் 90 அடியாக இருந்தால் அணையைத் திறக்கலாம். இந்த ஆண்டு ஜூன் 12ஆம் தேதியும் குறிப்பிட்ட அந்த அளவு நீர் எட்டப்படவில்லை.

தற்போது நீர் 90 அடியை நெருங்கிவிட்டது. விநாடிக்கு 2.40 லட்சம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 62 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. இதனால் இன்று (ஆகஸ்ட் 13) தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேட்டூர் அணையை காலை 8.30 மணிக்கு நேரில் சென்று திறந்து வைக்கிறார்.

இதற்கு முன்பாக அணை திறப்புக்குத் தமிழக முதல்வர்கள் நேரில் செல்வதில்லை. அந்த மாவட்ட அமைச்சர்கள் சென்று திறந்து வைப்பர். எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதால் கடந்த முறையும் அவரே நேரில் சென்று திறந்து வைத்தார்.

அணை திறப்பு குறித்து நேற்று முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி படுகையில் உள்ள 700 ஏரி, குளங்களில் நீர் நிரப்பப்பட்டு அதன் மூலம் பாசனத்துக்குப் பயன்படுத்திக் கொள்வதோடு மட்டுமல்லாமல், நிலத்தடி நீர் உயர்ந்து குடிநீர்த் தேவைக்கும் பயன்படுத்த இயலும். வேளாண் பெருமக்கள் நீரை அனைத்து கால்வாய்கள் மற்றும் தடுப்பணைகள் மூலம் நீர் மேலாண்மை செய்து நீரைப் பாசனத்துக்குப் பயன்படுத்துமாறும் கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

வழக்கம்போல் இந்த முறையும் தண்ணீர் திறப்பு இரண்டு மாதங்கள் தாமதமானதால், டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடி செய்யப்படவில்லை. இதையடுத்து, சம்பா சாகுபடி செய்வதற்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர். இந்த உபரிநீர், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி மாவட்டங்கள் வழியாக தஞ்சையில் உள்ள கல்லணையை மூன்று நாட்களில் சென்றுசேரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 13 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon