மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 13 ஆக 2019

இந்திக்குச் செல்லும் விஜய் சேதுபதி

இந்திக்குச் செல்லும் விஜய் சேதுபதி

ஆமிர் கான் நடிக்கவுள்ள புதிய படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் தான் இணைந்து நடிக்கவுள்ளதாக மெல்போர்ன் இந்தியத் திரைப்பட விழாவில் விஜய் சேதுபதி கூறியுள்ளார்.

விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் 2017ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் விக்ரம் வேதா. புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் உருவான இந்தத் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. படம் வெளியானபோதே தமிழ்த் திரையுலகினரை மட்டுமல்லாமல் பாலிவுட் கலைஞர்களையும் ஈர்த்த இந்தத் திரைப்படம் ஷாரூக் கான் உள்ளிட்டவர்களைப் படம் குறித்து பேசச் செய்தது.

படத்தைத் தயாரித்த ஒய் நாட் ஸ்டூடியோஸ் இந்தி ரீமேக் உரிமையைப் பிற நிறுவனங்களுக்கு விற்க மறுத்து தாமே தயாரிப்பதாகக் கூறியது. அந்தவகையில் முதலில் ஷாரூக் கான் நடிப்பதாக இருந்து அவர் விலக, தற்போது ஆமிர் கான் நடிக்கிறார்.

புஷ்கர் காயத்ரி இணையர் இந்தப் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் இயக்குநராக அறிமுகமாகின்றனர். விஜய் சேதுபதி நடித்த வேதா கதாபாத்திரத்தில் ஆமிர் கான் நடிக்க, மாதவன் நடித்த விக்ரம் கதாபாத்திரத்தில் சாய்ஃப் அலி கான் நடிக்கிறார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து ஆமிர் கான் 1994ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான ஃபாரஸ்ட் கம்ப் படத்தின் ரீமேக்கில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்துக்கு லால் சிங் சாதா எனப் பெயரிடப்பட்டுள்ளது. சீக்ரெட் சூப்பர் ஸ்டார் படத்தை இயக்கிய அத்வைத் சந்தன் இயக்கவுள்ளார்.

இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். கடந்த மாதம் ஆமிர் கான் பொள்ளாச்சி சென்றிருந்தபோது, விஜய் சேதுபதியைச் சந்தித்து பேசினார். ‘சங்கத் தமிழன்’ படத்தின் படப்பிடிப்பிலிருந்த விஜய் சேதுபதியிடம் ‘லால் சிங் சாதா’ படம் பற்றி பேசி நடிக்க கேட்டுள்ளார். விஜய் சேதுபதியும் இந்தப் படத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறியுள்ளார்.

மார்கோனி மாத்தாயி படத்தின் மூலம் இந்த ஆண்டு மலையாளத்தில் அறிமுகமான விஜய் சேதுபதி, சைரா நரசிம்மா ரெட்டி படத்தின் மூலம் தெலுங்குத் திரையுலகிலும் கால் பதிக்கவுள்ளார். இந்த நிலையில் ‘லால் சிங் சாதா’ மூலம் பாலிவுட்டுக்கு அழைத்துச் செல்கிறார் ஆமிர் கான்

வியாகம் 18 மோஷன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில் அக்டோபர் மாதம் படப்பிடிப்புப் பணிகளைத் தொடங்க திட்டமிட்டுள்ளனர். 2020ஆம் ஆண்டு இந்தப் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃபாரஸ்ட் கம்ப் படத்தின் ரீமேக்கில் முதலில் ஷாரூக் கான் நடிப்பதாக இருந்து, பின் விலகியது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நடத்திய பஞ்சாயத்து... வைகோ-அழகிரி காரசார மோதல்!


சிவகார்த்தி படத்தால் பாதிக்கப்படும் ஜெயம் ரவி!


துரைமுருகன் சொந்த ஊர் ரிசல்ட்!


மணிகண்டன் - உடுமலை ராதாகிருஷ்ணன் - வேலுமணி: எடப்பாடியின் கில்லாடி அரசியல்!


அத்திவரதர் மோதல் :பொன்னையா கலெக்ட்டரான பின்னணி!


உலக டாப் 100 பட்டியலில் சென்னை ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம்!

3 நிமிட வாசிப்பு

உலக டாப் 100 பட்டியலில் சென்னை ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம்!

பிளாட்பாரம் டிக்கெட் கட்டண உயர்வு ஏன்?

3 நிமிட வாசிப்பு

பிளாட்பாரம் டிக்கெட் கட்டண உயர்வு ஏன்?

லலிதா ஜூவல்லரி: கணக்கில் வராத ரூ.1000 கோடி!

3 நிமிட வாசிப்பு

லலிதா ஜூவல்லரி: கணக்கில் வராத ரூ.1000 கோடி!

செவ்வாய் 13 ஆக 2019