மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 30 மே 2020

வெள்ள நிவாரணம்: மோடிக்கு தேவ கவுடா கடிதம்!

வெள்ள நிவாரணம்: மோடிக்கு தேவ கவுடா கடிதம்!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கர்நாடக மாநிலத்துக்கு நிவாரண நிதியாக ரூ.5,000 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்னாள் பிரதமர் தேவ கவுடா கடிதம் அனுப்பியுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்பால் இதுவரையில் 17 மாவட்டங்களில் 2,694 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 42 பேர் உயிரிழந்துள்ளதோடு, 12 பேர் காணாமல் போயுள்ளனர். மீட்புப் பணிகளில் மொத்தம் 5.82 லட்சம் பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். வீடுகளையும் உடைமைகளையும் இழந்த 3.33 லட்சம் பேர் 1,181 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் வெள்ள பாதிப்புக்கு நிவாரணமாக கர்நாடக மாநிலத்துக்கு ரூ.5,000 கோடி நிவாரண நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று முன்னாள் பிரதமரும் ஜனதாதள கட்சியின் தேசியத் தலைவருமான தேவ கவுடா பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

“இயற்கை பேரிடர் மேலாண்மை நிதியாக கர்நாடக மாநிலத்துக்கு ரூ.5,000 கோடியை வழங்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். எனது அறுபது ஆண்டுக்கால அரசியல் வாழ்க்கையில் இதுபோன்ற மிகப் பெரிய பேரழிவை நான் கண்டதே இல்லை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கர்நாடக மக்களின் துயர் துடைக்க மத்திய அரசு முன்வரும் என்று நான் நம்புகிறேன். வாழ்வாதாரத்தை இழந்துள்ள மக்கள் மீண்டும் இயல்புநிலைக்குத் திரும்ப மத்திய, மாநில அரசுகள்தான் உதவ வேண்டும். இப்போது ஏற்பட்டுள்ள பாதிப்பானது மாநில அரசால் மட்டுமே சரிசெய்யப்படக் கூடியதாக இல்லை. இந்த மிகப் பெரிய பேரழிவைத் தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும். மாநிலத்தின் மூன்றில் ஒரு பகுதி மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

வெள்ள பாதிப்பால் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு நிவாரண உதவியாகத் தன் பங்குக்கு 2 லட்சம் ரூபாயை முதலமைச்சர் நிவாரண நிதியில் தேவ கவுடா செலுத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட இடங்களில் ஓரளவுக்கு இயல்புநிலை திரும்பியதும் அங்கு பார்வையிடச் செல்வதாகவும், ஒதுக்கப்படும் நிதி போதுமானதாக இல்லையென்றால் மோடியைச் சந்தித்துக் கூடுதல் நிவாரண நிதி கேட்கவிருப்பதாகவும் தேவ கவுடா ஆகஸ்ட் 12ஆம் தேதி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நடத்திய பஞ்சாயத்து... வைகோ-அழகிரி காரசார மோதல்!


சிவகார்த்தி படத்தால் பாதிக்கப்படும் ஜெயம் ரவி!


துரைமுருகன் சொந்த ஊர் ரிசல்ட்!


மணிகண்டன் - உடுமலை ராதாகிருஷ்ணன் - வேலுமணி: எடப்பாடியின் கில்லாடி அரசியல்!


அத்திவரதர் மோதல் :பொன்னையா கலெக்ட்டரான பின்னணி!


செவ்வாய், 13 ஆக 2019

chevronLeft iconமுந்தையது