மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 21 ஜன 2020

வாகனத் துறையில் தொடரும் பணியிழப்புகள்!

வாகனத் துறையில் தொடரும் பணியிழப்புகள்!

இந்திய ஆட்டோமொபைல் துறையில் இதே நிலை நீடித்தால் இன்னும் 10 லட்சம் பேர் வரையில் தங்களது வேலையை இழக்கக்கூடும் என்று இந்திய ஆட்டோமொபைல் பாகங்கள் உற்பத்தியாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

வாகன விற்பனையில் ஏற்பட்டுள்ள மந்தநிலை காரணமாக இந்திய ஆட்டோமொபைல் துறையில் கடந்த நான்கு மாதங்களில் மட்டும் 3.50 லட்சம் பேர் தங்களது வேலைகளை இழந்துள்ளனர். கார் மற்றும் மோட்டார் சைக்கிள் உற்பத்தி ஆலைகளில் 15,000 பேரும், உதிரிப் பாகங்கள் உற்பத்தித் துறையில் ஒரு லட்சம் பேரும், வாகன விற்பனை மையங்களில் லட்சக்கணக்கானோரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அரசு தரப்பிலிருந்து எலெக்ட்ரிக் வாகனப் பயன்பாடு ஊக்குவிக்கப்பட்டு வருவதால் பெட்ரோல் - டீசல் வாகனங்களை வாங்க வாடிக்கையாளர்கள் தயக்கம் காட்டுகின்றனர். இதனுடன் உற்பத்திச் செலவுகள் உயர்வு, வாகன உற்பத்தி மந்தம் போன்ற காரணிகள் இந்திய ஆட்டோமொபைல் துறையையே ஆட்டம்காண வைத்துள்ளது.

இதுகுறித்து இந்திய ஆட்டோமொபைல் பாகங்கள் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் தலைவரான ராம் வெங்கடரமணி ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “வாகன பாகங்களுக்கான உற்பத்தியில் ஈடுபடும் பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது வேலை நாட்கள் மற்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்து வருகின்றன. பணியிழப்புகள் இப்போது அதிகரித்துள்ளன. நிறுவனங்கள் தங்களது உற்பத்தியை 15 முதல் 20 சதவிகிதம் வரையில் குறைத்துவிட்டால் இந்தத் துறையில் கடுமையான நெருக்கடி ஏற்படும். இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் சுமார் 10 லட்சம் பேர் தங்களது வேலையை இழப்பார்கள்” என்றார்.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆட்டோமொபைல் பாகங்கள் துறையின் பங்களிப்பு 2.3 சதவிகிதமாக இருக்கிறது. இந்தத் துறையை நம்பி 50 லட்சம் பேர் வரையில் வேலைவாய்ப்புப் பெற்றுள்ளனர். 2017-18ஆம் ஆண்டில் இந்தத் துறையின் விற்பனை மதிப்பு 14.5 சதவிகித வளர்ச்சியுடன் ரூ.3.95 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டில் விற்பனை வளர்ச்சி மிக மந்தமாகவே இருக்கும் என்று வெங்கடரமணி கூறுகிறார்.

ஆட்டோமொபைல் சார்ந்த நிறுவனங்கள் அதிகமாக உள்ள சென்னையிலும் பணியிழப்புகள் அதிகமாக இருக்கும் என்று வெங்கடரமணி தெரிவித்துள்ளார். அவர் கூறுவதை உறுதி செய்யும் வகையில் இந்திய வர்த்தகக் கூட்டமைப்பு மையத்தின் காஞ்சிபுரம் மாவட்டத் தலைவரான எஸ்.கண்ணன் பேசுகையில், “வாகன உற்பத்தி நிறுவனங்களும், வாகன உதிரிப் பாகங்கள் உற்பத்தி நிறுவனங்களும் தங்களது ஒப்பந்த ஊழியர்களை வேலையை விட்டு நிறுத்தி வருகின்றன. செலவுகளைக் குறைக்கும் வகையில் உற்பத்தி குறைக்கப்பட்டு நிறுவனங்களுக்கு விடுமுறையும் அளிக்கப்படுகிறது. சென்னையில் ஆயிரக்கணக்கான பணியாட்கள் தங்களது வேலையை இழந்துள்ளனர். இதே நிலை நீடித்தால் அதிக பணியிழப்புகள் ஏற்படும்” என்று தெரிவித்துள்ளார்.

போஸ்ச் நிறுவனம் கங்கைகொண்டானில் உள்ள தனது உற்பத்தி ஆலைக்கு ஐந்து நாட்கள் விடுமுறை அறிவித்துள்ளது. ஃபோர்டு உள்ளிட்ட சில நிறுவனங்களில் இரவு நேரப் பணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது. சென்னையை மையமாகக் கொண்ட அசோக் லேலண்ட் நிறுவனம் தனது செலவை ரூ.500 கோடி வரையில் குறைக்க முடிவெடுத்துள்ளது.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நடத்திய பஞ்சாயத்து... வைகோ-அழகிரி காரசார மோதல்!


சிவகார்த்தி படத்தால் பாதிக்கப்படும் ஜெயம் ரவி!


துரைமுருகன் சொந்த ஊர் ரிசல்ட்!


மணிகண்டன் - உடுமலை ராதாகிருஷ்ணன் - வேலுமணி: எடப்பாடியின் கில்லாடி அரசியல்!


அத்திவரதர் மோதல் :பொன்னையா கலெக்ட்டரான பின்னணி!


செவ்வாய், 13 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon