மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 21 ஜன 2020

ஜெயிலுக்கு அனுப்பிய வீடியோ மோகம்!

ஜெயிலுக்கு அனுப்பிய வீடியோ மோகம்!

ஓடும் ரயிலின் நடுவே சிலிண்டரை வைத்து சாகசம் செய்து, இப்போது ஜெயிலில் இருக்கும் ராம் ரெட்டி, வேலையில்லாத இளைஞர். என்ன செய்வதெனத் தெரியாமல் ஸ்மார்ட்போனை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தவருக்கு குறைந்த விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போனும், இன்டர்நெட் கனெக்‌ஷனும் புதிய புதிய ஐடியாக்களைக் கொடுத்தன. அவற்றில் ஒன்று, Experimental Videoக்கள் எனப்படும் செயல்முறை விளக்க வீடியோக்கள்.

ஒரு மலையைத் தனி ஒருவரால் தூக்க முடியுமா என்ற கேள்விக்கு “எல்லாரும் வந்து தூக்கி என் மேல வைங்க” என்று செந்திலின் காமெடியை வைத்து விவரித்தார்கள் அல்லவா! அதுபோன்ற கேள்விகளை, அவற்றின் இயற்பியல் தன்மை மாறாத விளக்கங்களுடன் செய்து காட்டுவது அல்லது செய்ய முடியாது என்று விளக்குவதே Experimental Videoக்களாக வீடியோ உலகில் சக்கை போடு போடுகின்றன. அதனால் ஈர்க்கப்பட்ட ராம் ரெட்டி நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தது தவறல்ல. ஆனால், அதற்கான இடமாக ரயிலைத் தேர்ந்தெடுத்தது மிகப்பெரிய தவறு. ஆயிரக்கணக்கான பயணிகள் பயணிக்கும் ரயிலை, ஒரு வீடியோவுக்கான சோதனைக் கருவியாகப் பயன்படுத்தியதே தவறு எனும்போது, அதன் பாதையில் சிலிண்டரை வைத்தது மிகப்பெரிய குற்றம்.

ராம் ரெட்டி வைத்த சிலிண்டர் நல்ல வேளையாக வெடித்துச் சிதறவில்லை. ரயிலின் வேகத்தில் தூக்கிவீசப்பட்டதோடு அந்த வீடியோ முடிந்தது. ஆனால், அதை பல்வேறு கோணங்களில் பதிவு செய்து, பிறகு எடிட் செய்து யூடியூபில் போஸ்ட் செய்தார் ராம் ரெட்டி. அந்த வீடியோவுக்குக் கிடைத்த வரவேற்பால், அடுத்ததாக தனது பைக்கையே கொண்டு சென்று நிறுத்தியபோது, அங்கே பதுங்கியிருந்த ரேணிகுண்டா காவலர்கள் ராம் ரெட்டியை கையும் களவுமாக கைது செய்தனர்.

ராம் ரெட்டி சிலிண்டர் வைத்த ரயிலை ஓட்டிவந்த ஓட்டுநர் நரசிம்ம சுவாமி, அவர் கண்ட நிகழ்ச்சிகளை ரேடியோ மூலம் ரேணிகுண்டா ரயில் நிலையத்துக்குத் தெரிவித்தார். இதனால், உடனே சம்பவ இடத்துக்கு வந்த ரயில்வே காவல் துறையினர் ராம் ரெட்டியை கைது செய்தனர்.

இதுபற்றி ராம் ரெட்டி கொடுத்த வாக்குமூலத்தில் “என் பெயர் ராம் ரெட்டி. அப்பா பெயர் சங்கர் ரெட்டி. சித்தூர் ஜில்லாவில் இருக்கும் ஏற்பேடு மண்டல் எனும் ஊரில் வசித்து வருகிறேன். எந்த வேலையும் இல்லாமல் இருந்த நான் யூடியூபில் வீடியோ பார்ப்பதையே வேலையாகக் கொண்டேன். அதனால் ஈர்க்கப்பட்டு பல லட்சக்கணக்கான வீடியோக்களை பார்த்தபோது, ரயில் வீடியோக்களால் மிகவும் ஈர்க்கப்பட்டேன். ரயில் வீடியோக்கள் மக்களையும் அதிகம் கவர்ந்ததால் அதைத் தொடர்ந்து செய்தேன். பொம்மைகள், பழங்கள் போன்றவற்றை ரயிலுக்கு அடியில் வைத்து, அதன்மீது ரயில் ஏறிச்செல்வதை வீடியோவாக எடுத்து ஃபேஸ்புக், யூடியூப், டிக்டாக் போன்றவற்றில் அப்லோடு செய்வேன். ரயில் வீடியோக்களை அதிகம் பார்ப்பதால் அப்படி செய்தேன். பைக்கை தண்டவாளத்தில் வைத்ததுபோன்ற வீடியோ பொய்யானது” என்று கூறியிருக்கிறார்.

பொம்மைகள், பழங்கள், சிலிண்டர் ஆகியவற்றை தண்டவாளத்தில் வைத்ததை ஒப்புக்கொண்ட ராம் ரெட்டி, பைக் வைத்ததை ஒப்புக்கொள்ளவில்லை. ஒருவேளை அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஐந்து ஆண்டுகள் வரையிலும் சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நடத்திய பஞ்சாயத்து... வைகோ-அழகிரி காரசார மோதல்!


சிவகார்த்தி படத்தால் பாதிக்கப்படும் ஜெயம் ரவி!


துரைமுருகன் சொந்த ஊர் ரிசல்ட்!


மணிகண்டன் - உடுமலை ராதாகிருஷ்ணன் - வேலுமணி: எடப்பாடியின் கில்லாடி அரசியல்!


அத்திவரதர் மோதல் :பொன்னையா கலெக்ட்டரான பின்னணி!


செவ்வாய், 13 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon