மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 21 ஜன 2020

பிக் பாஸ் 50: சின்னச் சின்ன அன்பில்தானே ஜீவன் இருக்கு..!

பிக் பாஸ் 50: சின்னச் சின்ன அன்பில்தானே ஜீவன் இருக்கு..!

- ஸ்பிளாக்கர்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 50ஆவது நாள் கொண்டாடப்பட்ட அடுத்த தினமே, கமல்ஹாசனின் 60 ஆண்டுக்கால திரையுலக வாழ்க்கையைக் கொண்டாடி, அதில் இந்தியன் 2 திரைப்படத்தைப் பற்றியும் கமலைப் பற்றியும் பேசிய நல்ல தருணங்களே இந்தக் கட்டுரையின் டைட்டிலை வைக்கக் காரணமாகிவிட்டது. இதையும் தாண்டி பலவிதங்களில் இந்த டைட்டிலையும் பிக் பாஸ் வீட்டையும், அதிலுள்ள கேரக்டர்களையும் தொடர்புபடுத்தலாம். தற்போது பிக் பாஸ் வீட்டிலிருக்கும் ஒவ்வொரு கேரக்டரும் அன்பு எனும் உணர்வினை அடிப்படையாகக் கொண்டவர்களாக இருக்கின்றனர்.

சேரன்

தனக்கான தேவைகளைப் பற்றிக் குறிப்பிடாமல், தமிழக மக்களின் மனதில் தன் நினைவுகளை மீண்டும் பதிவு செய்ய வேண்டும் என்ற காரணத்தை முன்வைத்து பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த சேரன், அதில் முடிந்த மட்டும் ஓடுவோம் என ஒவ்வொரு டாஸ்கின்போதும் கடுமையான பங்களிப்பைக் கொடுப்பது விடாமுயற்சியின் மறு உருவம் எனலாம். ஆனால், இதையும் தாண்டி சேரன் ஈடுபட்டுள்ள கடுமையான டாஸ்க் ஒன்று இருக்கிறது. அது அவருக்கான சீக்ரெட் டாஸ்க் எனலாம். அது, லாஸ்லியாவை எந்த பாதிப்பும் இன்றி, அவர் உள்ளே வந்த நோக்கத்தை நிறைவேற்றி இந்த பிக் பாஸ் வீட்டில் வாழவைப்பது. சேரப்பா... என லாஸ்லியா விளித்த வார்த்தைக்குத் தனது எல்லா திறமைகளையும் பயன்படுத்தி இப்போது வரை ஈடுகட்டிக் கொண்டிருக்கிறார். இதில் வெற்றி பெறுவது யாராக இருந்தாலும், தோற்பவர்களும் சிரிப்பையே பதிலாகக் கொடுப்பார்கள் என்பதால் இது ஒரு சுகமான போட்டியாகவே இருக்கிறது.

மதுமிதா

சரவணன், வனிதா போன்ற திறமையானவர்கள் தன்னை ஒதுக்கிச் சமைத்துக்கொண்டிருந்த இடத்தில், தன்னால் எதுவும் முடியும் என்று நிரூபித்துக் காட்டியிருக்கிறார் மதுமிதா. இங்கு மட்டுமல்ல, திரைத் துறையிலும் நான் வெறும் ஜாங்கிரியாக மட்டுமே பயன்படுத்தக்கூடிய நடிகை அல்ல என்பதையும் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த பிறகு நிரூபித்துக் காட்டியிருக்கிறார். பலர் பல காரணங்கள் சொல்லி நாமினேட் செய்யப்பட்ட இடத்தில், ‘அவர் கடுமையான போட்டியாளர்’ என்ற காரணத்தைச் சொல்லி நாமினேட் செய்யும் அளவுக்குத் தன்னை நிலைநிறுத்திக்கொண்ட விதத்தில் மதுமிதா ஏற்கனவே வென்றுவிட்டார்.

ஷெரின்

குறை சொல்லி நாமினேட் செய்யவும் காரணம் இல்லாமல், கடுமையான போட்டியாளர் என்றும் சொல்லமுடியாத வகையில் நடுநிலையோடு தன்னை வெளிப்படுத்திவரும் ஷெரின் இந்த பிக் பாஸ் டைட்டிலை வென்றாலும் ஆச்சர்யம் இல்லை. ஏனென்றால், எந்தத் தோழிக்காக சாய்ந்துகொள்ள தனது தோளை சாய்த்தாரோ, அதே தோழி தவறு செய்தபோது திட்டவும், தன்னைக் காயப்படுத்தியபோது நேராகக் கேள்வி கேட்கவும் தயங்கவில்லை ஷெரின். அந்த நேர்மைதான் அவரை நாமினேஷனுக்குள் கொண்டுவராமல் வைத்திருக்கிறது. எலைட் நாயகி போல தொடக்கத்தில் ஒதுங்கி இருந்தாலும் சாண்டி, மதுமிதாவுடன் பின்னாட்களில் ஷெரின் பழகும் விதம், அவருக்கு போதாமல் இருந்தது நேரமே ஒழிய, தகுதி இல்லை என்பது தெரியவந்ததால் பிக் பாஸ் வீட்டிலிருந்த ஒவ்வொருவரும் ஷெரினை ஆராதிக்கத் தொடங்கிவிட்டனர். யாருக்கும் மஸாஜ் செய்துவிடவும், முடி வெட்டிவிடவும் தயங்காமல் இதுவரை பார்த்திராத வேறொரு ஷெரினையும் பார்க்க நேர்ந்தது. (மைண்ட் வாய்ஸ்: போதும் போதும்...)

அபிராமி

அபிராமியின் செயல்களுக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால், அத்தனை காரணங்களையும் அவரே சொல்ல வேண்டும். காரணம், என் அன்பு இத்தகையது மட்டும்தான் என்று இதுவரை அவர் உறுதிப்படுத்தவில்லை. கிட்டத்தட்ட, வீட்டுக்குப் போய் முடிவு சொல்றோம் என சொல்லிவிட்டுச் சென்ற மாப்பிள்ளை வீட்டார் போல ஒருபக்கம் முகேன் இருக்க, இன்னொருபக்கம் பதபதப்புடன் அபிராமி இருக்கிறார். அவர் முகேனின் மீது மட்டுமல்ல, பிக் பாஸ் வீட்டிலிருக்கும் ஒவ்வொருவரின் மீதும் அன்பு கொண்டிருக்கிறார். லாஸ்லியா, சாக்‌ஷி, ஷெரின், முகேன், சரவணன் என அனைவருக்காகவும் அவரால் அழ முடிகிறது. ஆனால், இந்த அழுகையெல்லாம் அவருக்காக ஒரு சமயத்தில் திரும்பக் கிடைத்தால் மட்டுமே அவரது கண்ணீருக்கான மதிப்பு என்னவென்பது தெரியும். அதுவரை, இவரது கண்ணீர் துளிகள் அந்த பிக் பாஸ் லிவ்விங் ஏரியாவின் தரைக்கே சொந்தம்.

தர்ஷன்

ஒரு வீட்டின் செல்லப் பிள்ளையாக இருப்பது எவ்வளவு கஷ்டம் என்பது தர்ஷனுக்கு மட்டுமே தெரியும். எந்தப்பக்கம் போனாலும் யாராவது கண்காணித்துக்கொண்டே இருக்கிறார்கள். ஷெரினுடன் ஜெயிலுக்குப் போகிறேன் என்றாலும் பாட்டு போடுகிறார்கள், பிக் பாஸ் வின்னர் யார் என்று கருத்து கேட்டாலும் ஓட்டு போடுகிறார்கள், ஓரமாக உட்கார்ந்து ஒன் பை டூ பிளாக் டீ குடித்தாலும் பைனாகுலரில் பார்த்துவிடுகிறார்கள், தனக்குப் பிடித்தவர் ஹார்ட்டின் சப்பாத்தி செய்தால் கத்தியை விடுகிறார்கள் என தர்ஷனை திக்குமுக்காட வைக்கும் அன்பு பரிசுத்தமானது. அவர்களுக்கு தர்ஷன் தரும் அன்பு பரிபூரணமானதாகவும் இருக்கிறது. அது தொடர்பே இல்லாமல் வனிதாவுடன் சண்டைக்குப் போனதாக இருந்தாலும் சரி, ஷெரினுக்காக சாக்‌ஷியை பேசியதாக இருந்தாலும் சரி. முழு மனதுடனேயே தர்ஷன் செய்தார்.

முகேன்

‘அன்புக்காக ஏங்கிய பிள்ளை’, அதனால் எடுப்பார் கைப்பிள்ளையாக முகேன் இருக்கிறார் என தர்ஷன் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை. ஆனால், அந்த அன்பு அவரது ஆக்சிஜன் குழாயை அடைக்கும் என முகேன் எதிர்பார்க்கவில்லை. தொடக்கத்தில் ஒதுங்கியே இருந்தாலும் கவின், சாண்டி, அபிராமி, லாஸ்லியா, சேரன், மதுமிதா, தர்ஷன், ஷெரின் எனக் கொஞ்சம் கொஞ்சமாக முகேன் சேர்த்து வைத்த அன்பு சாதாரணமானதல்ல. அவரை அடிப்படையாக வைத்து ஒவ்வொரு வாரமும் அபிராமியை நாமினேட் செய்து அவரை மனதளவில் காலி செய்யும் அளவுக்கு முகேன் மீதான அன்பு வேலை செய்திருக்கிறது. நம் ஆட்களுக்கு அன்பு ஓவர் என்பதால், ஒன்று அபிராமி வெளியேற வேண்டும். இல்லையென்றால் நீ கிளம்பிவிடு என்று முகேனையும் சேர்த்து நாமினேட் செய்துவிட்டார்கள். இந்த அன்பு அவரை என்ன செய்யப் போகிறதெனப் பார்ப்போம்.

லாஸ்லியா

வீட்டிலுள்ள எல்லோரையும் அழைத்துவைத்து ‘இனி யாரும் என்னிடம் பேசாதீங்கள்’ என அவமதித்த பிறகும், லாஸ்லியாவை எல்லோரும் அரவணைத்துச் செல்கிறார்கள் என்றால் அந்தப் பெண்ணிடம் ஏதோ இருக்குப்பா என நினைக்க ஏதுமில்லை. வீட்டிலேயே லாஸ்லியா சின்னப்பெண். சுட்டித்தனமான அவரது செய்கைகளை ஒருபக்கம் ரசித்தாலும், இன்னொருபக்கம் அதுவே டைட்டிலை வெல்ல காரணமாக அமைந்துவிடுமோ என நாமினேட் செய்ய வைத்திருக்கிறது. அந்தந்த நேரத்துக்குத் தனக்கு தோன்றுவதே சரி என்று லாஸ்லியா செய்யும் செயல்களே அதற்கு உதாரணம். லக்‌ஷரி பட்ஜெட் டாஸ்க்கின்போது கீழே விழுந்த கவினின் முதுகில் இருந்த காயினைக்கொண்டு சென்று வேறு யார் மீதோ போடலாம் என்று ஓடிய வெள்ளந்தியான லாஸ்லியாவை தமிழக மக்கள் பலர் ரசிக்கிறார்கள் என்பது ஒவ்வொரு முறையும் முதல் ஆளாக அவர் காப்பாற்றப்படுவதில் இருந்தே தெரிகிறது.

சாண்டி

மகிழ்ந்து வாழ்; மகிழ்வித்து வாழ் என்பதையே தாரக மந்திரமாகக்கொண்டு செயல்படும் சாண்டிக்கு ஒரு கட்டுரை தான். அது அவர் டைட்டில் வெல்லும்போதோ அல்லது எ

லிமினேட் ஆகும்போதோ மட்டும் தான்.

கவின்

பிக் பாஸ் வீட்டுக்குள் வருவதற்கு முன்பே தமிழக மக்கள் பலரின் மனம் கவர்ந்த கவின் வீட்டுக்குள்ளும் அவர் நினைத்த அனைவரது மனத்தையும் கவர்ந்தார். அது, அவரது போலித்தனத்தைக் கூட உண்மையென நம்ப வைக்கும் அளவுக்கு அவர் வெளிப்படுத்திய ஆற்றல். ஆனால், அதுவே இன்று அவரை நாமினேஷன் லிஸ்டில் சேர்த்திருக்கிறது. அதேசமயம் அவரை டைட்டில் வின்னர் லிஸ்டிலும் சேர்த்திருக்கிறது. ஆறு வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்தாலே தன் கடனை எல்லாம் அடைத்துவிடுவேன் என்று சொன்னவர் ஏழு வாரங்கள் இருந்துவிட்டார். இனி இழக்க ஒன்றுமில்லை எனும்போது சுற்றியிருக்கும் ஒவ்வொருவரையும் பொழுதுபோக்க கவின் உருவாக்கும் திட்டங்களே அவரை அந்த வீட்டிலிருந்து அனுப்பிவிட வேண்டாம் என்று ஒவ்வொரு முறையும் காப்பாற்ற மக்களைத் தூண்டுகிறது.

மேலே குறிப்பிட்டுள்ள சிலவற்றில் பல மேட்டர்கள் இல்லாததால், தமிழ் மக்களால் சில நாட்களிலேயே தூக்கி வீசப்பட்ட வனிதாவை மீண்டும் வீட்டுக்குள் அனுப்பியிருப்பது பிக் பாஸின் மன்னிக்க முடியாத குற்றம். கண்டெண்ட் இல்லாத காரணத்தால் வனிதாவை உள்ளே அனுப்பப் போகிறோம் என ஒரு வார்த்தை சொல்லியிருந்தால், டிஆர்பி ரேட்டிங் இறங்காமல் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என சத்தியம் செய்துகொடுத்து நிறைவேற்றியிருப்பார்கள். ஆனால், 25 நாட்கள்கூட பார்க்க விரும்பாமல் மக்கள் வெளியேற்றிய ஒருவரை 50ஆவது எபிசோடில் 25 நிமிடங்கள் பார்க்க வைத்துவிட்ட பிக் பாஸுக்கு ஒரு கோப ஸ்மைலியை பரிசாகத் தர வேண்டியதிருக்கிறது.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நடத்திய பஞ்சாயத்து... வைகோ-அழகிரி காரசார மோதல்!


சிவகார்த்தி படத்தால் பாதிக்கப்படும் ஜெயம் ரவி!


துரைமுருகன் சொந்த ஊர் ரிசல்ட்!


மணிகண்டன் - உடுமலை ராதாகிருஷ்ணன் - வேலுமணி: எடப்பாடியின் கில்லாடி அரசியல்!


அத்திவரதர் மோதல் :பொன்னையா கலெக்ட்டரான பின்னணி!


செவ்வாய், 13 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon