மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 12 ஆக 2019

மணிகண்டன் - உடுமலை ராதாகிருஷ்ணன் - வேலுமணி: எடப்பாடியின் கில்லாடி அரசியல்!

மணிகண்டன் - உடுமலை ராதாகிருஷ்ணன் - வேலுமணி:  எடப்பாடியின்  கில்லாடி அரசியல்!

அமைச்சர் மணிகண்டன் பதவி பறிக்கப்பட்டதன் பின்னாலும், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கழகத்தின் தலைவராக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டதன் பின்னாலும் இன்னுமொரு பின்னணி தலைமைச் செயலக வட்டாரங்களில் கசிகிறது.

அரசு கேபிளுக்கான வாடிக்கையாளர் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் கணிசமாகக் குறைந்ததும் அதனால் அரசுக்கு வரவேண்டிய வருவாயில் பெருமளவு இழப்பு ஏற்பட்டதும் மணிகண்டனின் பதவிப் பறிப்புக்குப் பல காரணங்களில் ஒன்றாகக் கூறப்பட்டன.

ஆனாலும், இந்த விவகாரத்தையும் இவற்றையும் தாண்டி எடப்பாடியின் பர்சனல் டச் இருப்பதுதான் இப்போது அதிகாரவர்க்கத்தின் பேச்சு.

“சில மாதங்களுக்கு முன் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்த மணிகண்டன் முதல்வரைச் சந்தித்து அரசு கேபிள் வாடிக்கையாளர்கள் என்ணிக்கை குறைவது பற்றி விவாதித்திருக்கிறார். அப்போது, ‘தமிழகத்தின் பல இடங்களில் நமது கட்சிக்காரர்களும், கட்சிக்காரர்களுக்கு வேண்டப்பட்டவர்களும் கேபிள் தொழில் செய்து வருகிறார்கள். அவர்களை அரசு கேபிளில் இணையுமாறு வற்புறுத்த முடியவில்லை. டாஸ்மாக் கடைகளை அரசு நடத்தினாலும், பார்களை எப்படி நமது கட்சிக்காரர்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்களோ, அதுபோல கேபிள் அரசிடம் இருந்தாலும் கனெக்‌ஷன்கள் பல நம் கட்சிக்காரர்களிடம்தான் இருக்கிறது. உதாரணத்துக்கு உங்கள் சேலம் மாவட்டத்திலேயே அரசு கேபிள் கனெக்‌ஷன் குறைந்திருக்கிறது என்று உங்களிடமே புகார் செய்ததாகக் கேள்விப்பட்டேன். சேலத்தில் உங்கள் மச்சான், அவருக்கு வேண்டியவர்களிடம்தான் கணிசமான கேபிள் கனெக்‌ஷன்கள் இருக்கின்றன. அவர்கள் அரசு கேபிளுக்குப் போட்டியாக நடத்தும்போது என்ன செய்வது?’ என்று முதல்வரின் முகத்துக்கு நேராகவே கேட்டிருக்கிறார் மணிகண்டன்.

எப்போதுமே மணிகண்டன் மனதில்பட்டதை சட்டெனக் கொட்டிவிடும் டைப். அப்படிப்பட்டவர் முதல்வரிடமும் அதே வேகத்தில் பேசிவிட இது அப்போதே எடப்பாடிக்குப் பிடிக்கவில்லை. பின் சமயம் கிடைத்ததும் இப்போது பதவி நீக்கிவிட்டார்” என்றவர்கள் தொடர்ந்தனர்.

“அதே நேரம் அரசு கேபிள் டிவி கழகத்தின் தலைவராக உடுமலை ராதாகிருஷ்ணனை நியமித்ததிலும் எடப்பாடியின் கூர்மையான அரசியல் வெளிப்பட்டிருக்கிறது. சமீபத்தில்தான் உடுமலை ராதாகிருஷ்ணனை மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கினார் எடப்பாடி. அப்புறம் எப்படி இப்போது கேபிள் கழகத் தலைவர் பதவியைக் கொடுத்தார் என்ற கேள்வி இயல்பாகவே எழும்.

மாசெ பதவியைவிட்டு நீக்கப்பட்டபோது உடுமலையின் ஆதரவாளர்கள், ‘கூவத்தூர் காலத்தில் எம்.எல்.ஏ.க்களுக்குக் கொடுப்பதற்காக பணம் ரெடி செய்ததெல்லாம் எடப்பாடிதான். அப்போது சிற்சில பற்றாக்குறை ஏற்படவே உடுமலை ராதாகிருஷ்ணனிடம் பெருந்தொகை ஒன்றைக் கடனாக கேட்டுப் பெற்றார் எடப்பாடி. ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்து எடப்பாடி முதல்வராகிவிட்டார். ஆனபோதும் உடுமலைக்குத் திருப்பித் தரப்படவேண்டிய தொகையைத் தரவே இல்லை. உடுமலையும் தொடர்ந்து இதை வற்புறுத்தி வந்தார். இந்த நேரத்தில் லோக்கல் அரசியலில் உடுமலை ராதாகிருஷ்ணனுக்குக் கடுமையான செக் வைத்து வந்தார் அமைச்சர் வேலுமணி. உடுமலைக்கும் எடப்பாடிக்கும் இப்படி ஒரு ஃப்ளாஷ் பேக் இருப்பதை அறிந்தும்கூட உடுமலையை மாசெ பதவியிலிருந்து நீக்க வைத்தவர் வேலுமணிதான்’ என்று கூறினார்கள்.

அது உண்மைதான் என்பதை உடுமலையின் நியமனம் மூலம் உறுதி செய்திருக்கிறார் எடப்பாடி. தன் ஆட்சி அமைந்த முக்கியமான நேரத்தில் நிதி உதவி செய்த உடுமலையை மாசெ பதவியிலிருந்து வேலுமணியின் நிர்பந்தத்தால் நீக்குகிறோமே என்ற நெருடல் எடப்பாடிக்கு உறுத்திக் கொண்டே இருந்தது.

இந்த நிலையில்தான் அரசு கேபிள் டிவிக்குப் புதிய தலைவர் நியமிக்கப்படவேண்டும் என்று முடிவெடுத்தபோது கேபிள் தொழிலில் அனுபவமுள்ள உடுமலையை நியமித்தார் எடப்பாடி. இது ஒரு வகையில் தன்னோடு தொடர்ந்து உரசி வரும் வேலுமணிக்கு செக் வைத்தது போலவும் ஆயிற்று... உடுமலைக்கு ஏற்கனவே தான் பட்ட கடனை தீர்த்தது போலவும் ஆயிற்று.

ஆக... மணிகண்டனை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியதாகட்டும், உடுமலை ராதாகிருஷ்ணனை அரசு கேபிள் டிவி கழகத் தலைவராக நியமித்ததாகட்டும்... எடப்பாடியின் அக்மார்க் அரசியல் டச் இருக்கிறது. எடப்பாடி பாலிடிக்ஸில் பலே கில்லாடியாக இருக்கிறார்” என்கிறார்கள்.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நக்கல்-துரைமுருகன் அப்செட்!


சிவகார்த்தி படத்தால் பாதிக்கப்படும் ஜெயம் ரவி!


என்டிடிவி விவகாரம்: பின்னணியில் சுப்பிரமணியன் சாமி?


வேலூர்: தேர்தல் முடிவை மாற்றிய சீமான்


தினகரன் உத்தரவு: புலம்பும் பழனியப்பன்

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்! ...

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்!

சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு!

5 நிமிட வாசிப்பு

சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு!

டிஜிபி ராஜேஷ் தாஸ் சஸ்பெண்ட்?

5 நிமிட வாசிப்பு

டிஜிபி ராஜேஷ் தாஸ் சஸ்பெண்ட்?

திங்கள் 12 ஆக 2019