மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 12 ஆக 2019

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நடத்திய பஞ்சாயத்து... வைகோ-அழகிரி காரசார மோதல்!

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நடத்திய பஞ்சாயத்து...   வைகோ-அழகிரி காரசார மோதல்!

மொபைல் டேட்டா ஆன் செய்ததும் வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது.

“காஷ்மீர் விவகாரத்தில் பேச்சுவார்த்தைதான் பலன் தரும் என்பதை திமுக தலைவர் ஸ்டாலின் நிரூபித்திருக்கிறார்.

மதிமுக பொதுச் செயலாளர் நாடாளுமன்ற மாநிலங்களவையில் காஷ்மீர் விவகாரம் பற்றி ஆற்றிய உரையில் காங்கிரசை கடுமையாகத் தாக்கியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆகஸ்டு 8 ஆம் தேதி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்ட அறிக்கையில், வைகோவை கடுமையாகத் தாக்கியிருந்தார். அமித் ஷாவின் பேச்சைக் கேட்டே வைகோ காங்கிரசைத் தாக்கிப் பேசுகிறார் என்றும் கூறினார். அப்போது நீதிமன்றத்தில் இருந்த வைகோ வெளியே வந்து, ‘நான் காங்கிரஸ் காரர்கள் ஓட்டில் ஜெயிக்கவில்லை. நான் காஷ்மீர் விவகாரத்தில் பேசியதெல்லாம் உண்மைதான். இந்தத் தீர்மானத்தை ஆதரித்த 12 காங்கிரஸ் எம்.பி.க்கள் எவ்வளவு காசு வாங்கினார்கள். ஈழத்தை அழித்த பாவிகள் காங்கிரஸார். அவர்களுக்கு மன்னிப்பே இல்லை’ என்றெல்லாம் அழகிரிக்கு பதில் கொடுத்தார். இதனால் கோபமான அழகிரி, ‘பிரபாகரன் சாவுக்கே வைகோதான் காரணம்’ என்று அனல் கக்கினார். உடனே ஊடகங்களில் திமுக கூட்டணியில் விரிசல், வெளியே போவது மதிமுகவா, காங்கிரசா என்றெல்லாம் விவாதங்கள் ஆரம்பித்தன.

இந்த நெருப்புப் பிழம்புகளுக்கிடையேதான் காஷ்மீர் குறித்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தை 10 ஆம் தேதி அறிவாலயத்தில் கூட்டினார் திமுக தலைவர். அக்கூட்டத்தில் மதிமுக சார்பாக வைகோ கலந்துகொண்ட நிலையில், காங்கிரஸ் சார்பாக அழகிரி கலந்துகொள்ளவில்லை. தேசிய தலைவர் தொடர்பான ஆலோசனைக்காக தமிழக காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் டெல்லிக்கு சென்றுவிட்டதால் அழகிரி அறிவாலயத்துக்கு வரமுடியவில்லை. அழகிரிக்கு பதில் முன்னாள் தலைவரான கே.வி.தங்கபாலுவும் கோபண்ணாவும் கலந்துகொண்டனர். ஸ்டாலினுக்கு வலது பக்கம் காங்கிரஸ் தலைவர்களும், இடது பக்கம் திமுக தலைவர்களுக்கு அடுத்து வைகோவும் அமர்ந்திருந்தனர். அழகிரி அந்தக் கூட்டத்துக்கு வந்திருந்தால் வைகோவுக்கும் அவருக்கும் காரசார வாக்குவாதம் நடக்க வாய்ப்புகள் இருந்த நிலையில் அவர் டெல்லி சென்றுவிட்டதால் அந்த சூழல் வாய்க்கவில்லை.

அனைத்துக் கட்சிக் கூட்டம் முடிந்தபிறகு வைகோவை தனியாக அழைத்துப் பேசியிருக்கிறார் ஸ்டாலின். ‘நீங்க பார்லிமென்ட்ல காஷ்மீர் விவகாரம் பத்தி பேசினீங்க. அது ஒரு வகையில போகட்டும். ஆனா அதுக்குப் பிறகும் இங்க எதுக்கு காங்கிரசைத் தாக்கிப் பேசிக்கிட்டிருக்கணும். ஈழத் தமிழர்களை அழித்த பாவிகள் அதுஇதுனு காங்கிரசை பேசியிருக்கீங்க. இப்ப நாமல்லாம் ஒரே கூட்டணியில இருக்கோம். கூட்டணிக்குள்ள குழப்பம் விளைவிக்கிற மாதிரி பேச வேணாம்’ என்று வைகோவிடம் கூறியிருக்கிறார் ஸ்டாலின்.

அதற்கு வைகோ, ‘நான் பார்லிமென்ட்ல பேசினதோடு சரி... ஆனா அழகிரி விட்ட நீண்ட அறிக்கையை பாத்தீங்களா? இந்தக் கூட்டணியில இருக்கிற என்னை அமித் ஷாவோட ஆளுனு அவர் வெளிப்படையா சொல்றாரு. ஈவிகேஎஸ் இளங்கோவனும் தனக்கு ஈரோடு தொகுதி கிடைக்காமல், எம்பி ஆகாமல் போனதுக்கு நான் தான் காரணம்குற கோபத்தை காஷ்மீர் பிரச்சினைய சாக்கா வச்சி என் மேல விஷம் கக்குறாரு. நானா எதுவும் பேசல. அழகிரி விட்ட அறிக்கைக்குதான் நான் பதில் சொன்னேன். அவர் பேசினார்னா நான் மறுபடியும் பேசுவேன்’ என்று ஸ்டாலினிடம் நேருக்கு நேர் சொல்லியிருக்கிறார் வைகோ. அதையடுத்து ஸ்டாலின் சொன்னதுதான் வைகோவை ரொம்பவும் யோசிக்க வைத்துவிட்டது. ‘உங்களால கூட்டணி உடைஞ்சிதுனு இருக்க வேணாம்னு நான் ஆசைப்படுறேன்’ என்று ஸ்டாலின் சொன்னதைக் கேட்ட வைகோ, அந்த அளவுக்கு போகவிடமாட்டேன் என்று சொல்லிவிட்டு புறப்பட்டுள்ளார்.

இதேபோல அழகிரியிடமும் ஸ்டாலின் போனில் பேசியிருக்கிறார். அப்போது அழகிரி, ‘வைகோவோட பேச்சுக்கெல்லாம் டெல்லி காங்கிரஸ் தலைவர்கள் யாரும் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. ஆனா தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் என்ற முறையிலதான் நான் அவருக்கு விளக்கம் கொடுத்தேன்’ என்று ஸ்டாலினிடம் சொல்லியிருக்கிறார். அதற்கு ஸ்டாலின், ‘ரெண்டு பேரும் மாத்தி மாத்தி பேசிட்டீங்க. இதனால பலன் எதிர் கூட்டணிக்குதான். அதனால இத்தோட விட்டுருங்க. இனி அவரும் இதுபத்தி பேசமாட்டார்’ என்று அழகிரியை சமாதானப்படுத்தியிருக்கிறார் ஸ்டாலின்.

அதை ஏற்றுக்கொண்ட அழகிரி, ‘இந்த கூட்டணியை நீங்க அற்புதமான சிற்பம் போல கொண்டுபோக நினைக்கிறீங்கனு பிரஸ்லயே நான் சொன்னேன். இப்ப சொல்றேன். நீங்க என்ன வேணும்னாலும் நினைச்சுக்கங்க. வைகோ பாஜகவோட சமாதானமாகிவிட்டார். அத்வானி வீட்டுக்கு போயி பட்டு சால்வை போர்த்தி குடும்பத்தோட அத்வானி காலில் விழுந்திருக்கிறார். மூணு மணி நேரம் கழிச்சு அத்வானி வீட்டில் இருந்து மறுபடியும் வைகோ குடும்பத்தினரை கூப்பிட்டு பட்டு வேட்டி, பட்டுப் புடவைனு பதில் மரியாதை செஞ்சு அனுப்பியிருக்காங்க. இதை தப்புனு நான் சொல்ல வரலை. ஆனால், அவர் அதிகமாக அவங்கக்கிட்டதான் பழகுறாரு. வைகோவுக்கு காங்கிரசை திட்டணும்னு நோக்கம் கிடையாது. திமுக கூட்டணியை உடைக்கணும்னுதான் அவர் அஜெண்டா. இதை நீங்க ஞாபகம் வச்சுக்கங்க’ என்று ஸ்டாலினிடம் கூறியிருக்கிறார் அழகிரி. அதை தான் பார்த்துக் கொள்வதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதன் பின் டெல்லியில் இருந்து சென்னை வந்தபோது மீண்டும் வைகோ பற்றி கேள்விகள் எழுந்த நிலையில் சிரித்த கே.எஸ். அழகிரி, ‘அவரும் பேசினார். நாங்களும் பேசினோம். அத்தோடு அந்த எபிசோடு முடிந்துவிட்டது’ என்று சாமர்த்தியமாக முற்றுப்புள்ளி வைத்தார். இது ஸ்டாலின் நடத்திய பஞ்சாயத்தின் விளைவுதான்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.


மேலும் படிக்க


சிவகார்த்தி படத்தால் பாதிக்கப்படும் ஜெயம் ரவி!


துரைமுருகன் சொந்த ஊர் ரிசல்ட்!


அத்திவரதர் மோதல் :பொன்னையா கலெக்ட்டரான பின்னணி!


மணிகண்டன் - உடுமலை ராதாகிருஷ்ணன் - வேலுமணி: எடப்பாடியின் கில்லாடி அரசியல்!


டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நக்கல்-துரைமுருகன் அப்செட்!


வேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா? ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா?

இன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்!

4 நிமிட வாசிப்பு

இன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்!

திங்கள் 12 ஆக 2019