மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 4 டிச 2020

திரை தரிசனம் 14: லெமன் ட்ரீ

திரை தரிசனம் 14: லெமன் ட்ரீ

நிலமே எங்கள் உரிமை!

முகேஷ் சுப்ரமணியம்

அரசின் பூட்ஸ் கால்கள் உங்கள் நிலத்தில் பதியும்போது, எறும்புகளுடன் சேர்ந்து, உங்கள் சுதந்திரமும் நசுங்கத் தொடங்கினால் உங்களால் எந்த எல்லை வர போராட முடியும்? உங்கள் ஒரே ஆதாரமான நிலத்தை, அதிகாரம் அச்சுறுத்தலாகச் சிந்திக்கத் தொடங்கினால், உங்கள் நிலம் அதிகாரத்தின் வசமாகலாம். அப்போதும் உங்கள் நிலம் அதே கனிகளைத் தரக்கூடுமா?

பழைய ஏற்பாட்டில் ஆகாப் என்ற இஸ்ரவேல் ராஜா, தனது அண்டை வீட்டாரான நாபோத் என்பவனுடைய திராட்சைத் தோட்டத்தை வாங்கிக்கொள்ள விரும்பினான். ஆனால், நாபோத் தன் நிலத்தை ராஜாவுக்குத் தர மறுக்கிறான். இதனால் ஆத்திரமடைந்த ஆகாப்பின் மனைவியும் ராணியுமான யேசபேல், நாபோத் கடவுளுக்கும் ராஜாவுக்கும் எதிராகப் பேசினான் என பழி சுமத்துகிறாள். தனது நிலத்திலிருந்து வெளியேற மறுத்த நாபோத்தை, சாகும் வரை கல்லால் அடித்துக் கொல்கிறார்கள். நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தை தன் அதிகாரத்தால் கைப்பற்றுகிறான் ராஜா.

இக்கதையை சமகால அரசியலோடு பாலஸ்தீன - இஸ்ரேல் எல்லையில் சினிமாவாக மாற்றுகிறார் எரான் ரிக்லிஸ். பாலஸ்தீன எல்லையில், ஓர் அழகிய எலுமிச்சைத் தோட்டம். ஒவ்வொரு எலுமிச்சைப் பழங்களும் ஆப்பிள் அளவுக்குப் பழுத்துத் தொங்கிக் கொண்டிருக்கிறது. தோட்டத்தின் உரிமையாளரான சல்மா அவற்றைச் சீராக நறுக்கி, பதப்படுத்தி ஊறுகாயாய் மாற்றி கண்ணாடி ஜாடிகளுக்குள் வைக்கிறாள். நாற்பது வயதுக்கு மேல் தோற்றமளிக்கும் சல்மா கணவனை இழந்து தன் குடும்பத்தின் பாரம்பரிய தோட்டமான அதைக் காப்பாற்றி வருகிறார். தோட்டத்துப் பழங்கள் தரும் சொற்ப வருமானத்தில் தன் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறாள். தந்தையின் நண்பரான முதியவர் ஒருவர் மட்டும் அவளது தோட்டதைப் பராமரிக்க உதவி செய்கிறாள். மகன் அமெரிக்காவில் இருக்க, மகள்கள் திருமணம் செய்து வேறு நகரத்தில் வாழ்கின்றனர்.

ஒரு நாள் அவளது அருகில் உள்ள வீட்டுக்கு இஸ்ரேலின் பாதுகாப்புத் துறை அமைச்சர் புதிதாக குடிவருகிறார், உடன் அவரது மனைவி மிராவும். அவர்கள் குடியேறிய முதல் நாளே, பாதுகாப்பு அமைச்சருக்குத் தீவிரவாதிகளிடம் உயிர் ஆபத்திருக்கிறது என்ற காரணத்தைச் சொல்லி ராணுவ வீரர்கள் தோட்டத்தில் நுழைகிறார்கள். சல்மாவின் அனுமதியின்றி, தோட்டத்தைச் சுற்றி வேலி அமைக்கிறார்கள். காவல் கோபுரங்கள், கண்காணிப்பு கேமராக்கள் ஆகியவையும் தோட்டத்தினுள்ளே நுழைகின்றன.

சல்மா இந்த எதிர்பாராத நெருக்கடியால் அல்லலுறுகிறாள். சில நாட்களில், நோட்டீஸ் ஒன்று வருகின்றது. எலுமிச்சைத் தோட்டம் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவி விடக்கூடும் என்பதனால் சல்மாவின் தோட்டத்தை முழுமையாக வெட்டி எறிய போவதாகவும் அதற்கு உரிய ஈட்டுத் தொகையைப் பெற்றுக் கொள்ளும்படியும் அதில் இருக்கிறது. 60 வருடங்களுக்கும் மேல், தனது குடும்பத்தின் சொத்தாக இருக்கும் தோட்டத்தைச் சில நாட்கள் முன் குடியேறிய அமைச்சரின் பாதுகாப்புக்காக அழிக்க நேரிடுவதை சல்மாவால் எப்படி ஏற்றுக் கொள்ளமுடியும்?

பாதுகாப்பு அமைச்சரின் வீடு இருக்கும் நிலம் இஸ்ரேலுக்கு சொந்தமானது. அதனாலேயே, சல்மா இவ்விவகாரத்தில் உதவிக்கு அழைத்த மகன், மகள், ஊர் பெரியவர் என அனைவரும் ஒருமித்த குரலாக எலுமிச்சைத் தோட்டத்துக்காக அரசாங்கத்தை எதற்காக பகைத்துக் கொள்ள வேண்டும் என்றே பதிலளிக்கிறார்கள். சல்மா தரப்பிலிருக்கும் அடிப்படை நியாயத்தையும், உரிமையையும் எவரும் புரிந்துகொள்ள முன்வரவில்லை. அதனால், வக்கீல் ஒருவரை சந்திக்கும் சல்மா தனது வாதத்தை முன் வைத்து வழக்கு தொடருகிறாள்.

வழக்கு தோல்வியில் முடிய, உயர் நீதிமன்றத்தை நாடுகிறாள். பாதுகாப்பு அமைச்சர், ஒரு விதவைப் பெண் தனக்கு எதிராக வழக்கு தொடர்வதா என்ற நோக்கத்திலேயே இதைப் பார்க்கிறார். அவரது மனைவி மிரா, அவர்களது இருப்பால் தான் இச்சிக்கல் சல்மாவுக்கு ஏற்படுகிறது எனப் புரிந்துகொள்கிறாள். பத்திரிகையாளர் ஒருவர் மிராவிடம் எடுக்கும் பேட்டியில் அவளது நியாயத்தைக் கூற மீடியா கவனம் இவ்வழக்குக்குக் கூடுகிறது. இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சினையாக இவ்விவகாரம் மாறுகிறது. முடிவில் சல்மா தனது எலுமிச்சைத் தோட்டத்தை மீட்டெடுத்தாளா என்பதே மீதிக் கதை.

ஒரு மரம் எவ்வாறு படிப்படியாக வளர்கிறதோ அதே போல, ஒவ்வோர் அடியாக மெல்ல வளர்ந்து உச்சத்தை அடைகிறது இந்தப் படம். 2008ஆம் ஆண்டு வெளியான லெமன் ட்ரீ(Lemon Tree) படத்தை இயக்கியவர் எரான் ரிக்லி. தி சிரியன் பிரைட், டான்சிங் அராப் போன்ற படங்களை இயக்கியவர். செயல்பாட்டு ரீதியாக நான் அரசியலில் இல்லை. என் செயல்பாடாக நான் கருதுவது எனது படங்களைத் தான் எனக் கூறுபவர் எரான் ரிக்லி.

இந்தப் படத்தை விரிவான தளத்தில் பார்க்கும்போது, நேரிடையாக அரசியல் கருத்துகளை வலிந்து கூறாவிட்டாலும், எளிமையான காட்சிகளால் எலுமிச்சை மரத்தை வைத்து பெரும் அரசியல் பார்வையை இந்தப் படம் நம்மிடம் கடத்துகிறது. சல்மாவுக்கும் மிராவுக்குமான உறவு படத்தில் நுட்பமாக அணுகப்பட்டிருக்கும். நேரிடையாக அவர்கள் பேசிக்கொள்ளாவிட்டாலும் உணர்வு ரீதியான பிணைப்பு நேர்த்தியாகக் கையாளப்பட்டிருக்கும். அவர்கள் மொழியால், வேலியால் பிரிக்கப்படுகிறார்கள்.

குறியீடாக, கதாபாத்திரங்களுக்கிடையிலான அந்த இடைவெளி அவசியத்தை. இங்கே நிலவுவது இந்த இரண்டு பெண்களின் உறவல்ல, மாறாக அவர்களைப் பிளவுபடுத்தும் சக்திகள் என உணரலாம். மிரா எவ்வளவோ முயன்றும்கூட, சல்மாவை அவளால் பார்க்கவே முடியாத அளவுக்குச் சிக்கல்கள் ஏற்படுகின்றன. கதையின் முடிவில் பாலஸ்தீனியர்களின் அவலநிலையை மட்டுமல்ல, அதன் பெண்களின் நிலையையும் பிரதிபலிக்கிறது.

சல்மாவிற்கு அரசியல் ரீதியாகவும் மத ரீதியாகவும் ஏற்படும் நெருக்கடி விவாதிக்கப்பட வேண்டியது. சல்மாவுக்கும் வக்கீலுக்குமான உறவை பற்றி ஊரார் தவறாக பேசுவதாகக் கூறி, சல்மாவின் மறைந்த போன கணவரின் நண்பர் வீட்டிற்கு வந்து பேசும் காட்சியில் சல்மாவின் பார்வை பல கேள்விகளை உள்ளடக்கி வைத்திருக்கும். சல்மா உதவி என முதலில் கேட்ட அந்த நபர், அப்போதெல்லாம் வராமல், அவளது தனிப்பட்ட வாழ்க்கையை கட்டுபடுத்த ஓடி வருவதன் பின்னுள்ள சமூக மனம் யதார்த்தமாக கட்டமைக்கப்பட்டிருக்கும்.

எவ்வளவோ சிக்கல்கள் வந்தாலும் சல்மா தனது நிலத்தைக் கொஞ்சம்கூட விட்டுத்தர இடம்கொடுக்காத அந்தப் போராட்டம் நம்பிக்கையூட்டக்கூடியது. துணிச்சலுடன் கூடிய பிடிவாத குணத்தைக் கடைசி வரை காப்பாற்றியே வருகிறார் சல்மா. அனைத்து நிலங்களுக்கும், நாடுகளுக்கும் பொருந்தக்கூடிய சமகால அரசியல் குறித்த ஆழமான படைப்பாக இருக்கிறது லெமன் ட்ரீ. அரசியல் காரணங்களுக்காக எளிமையான, அழகான ஒரு உலகத்தின் குரல் வளை எவ்வாறெல்லாம் நெறிக்கப்படுகிறது என வெளிப்படுத்துகிறது இப்படம்.

லச்சோ ட்ரோம்

லோலா மவுன்டஸ்

மார்கெட்டா லாசரோவா

பாரிஸ், டெக்சாஸ்

பிளைண்ட் பீஸ்ட்

கம் அண்ட் சீ

டாக் டே ஆஃப்டர்னூன்

24 ஃப்ரேம்ஸ்

நைஃப் இன் தி கிளியர் வாட்டர்

அவ் ஹசர்ட் பேல்தஸார்

துவிதா

பேலட் ஆப் நரயாமா

திங்கள், 12 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon