மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 27 மே 2020

பாகிஸ்தான் திருமண நிகழ்ச்சியில் இந்திய பாடகர்!

பாகிஸ்தான் திருமண நிகழ்ச்சியில் இந்திய பாடகர்!

பாகிஸ்தான் கராச்சியில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் பிரபல பாலிவுட் பாடகரான மிக்கா சிங், கலந்து கொண்டு பாடியதற்கு இந்தியாவிலிருந்து கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கு, காஷ்மீர் தலைவர்கள் உட்பட எதிர்க்கட்சியினர் அனைவரும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். இஸ்லாமியர்கள் பண்டிகையான பக்ரீத்தை கூட மகிழ்ச்சியாகக் கொண்டாட முடியாமல் காஷ்மீர் மக்கள் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டிருக்கின்றனர். சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாகிஸ்தான், இந்தியா உடனான உறவு மிகவும் மோசமாக உள்ளது. இந்தியப் படங்களுக்குத் தடை, கலைஞர்களுக்குத் தடை, வான்வழி போக்குவரத்து மற்றும் வர்த்தகம் எனப் பலவற்றுக்கும் பாகிஸ்தான் தடை விதித்திருக்கிறது.

இவ்வாறு இரு நாடுகளுக்கும் மத்தியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில் பஞ்சாபைச் சேர்ந்த பிரபல பாலிவுட் பாடகரான மிக்கா சிங், முன்னாள் பாகிஸ்தான் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரஃப்புக்கு நெருக்கமான கோடீஸ்வரர் ஒருவரது மகளின் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாடியது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஆகஸ்ட் 8ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் மிக்கா சிங் கலந்துகொண்டு பாடியுள்ளார். விழாவில் கலந்துகொண்ட சில விருந்தினர்கள் சமூக வலைதளங்களில் திருமண விழாவில் நடைபெற்ற கச்சேரி வீடியோக்களை பதிவேற்றம் செய்ததில், இந்தியா பாகிஸ்தான் இடையேயான இந்த பதற்றமான வேளையில் மிக்கா சிங் தனது குழுவினருடன் கராச்சி சென்றது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் சையத் குர்ஷித் ஷா, இந்தியாவுடனான வர்த்தக உறவுகளை நாடு நிறுத்தியிருந்த நேரத்தில் பாகிஸ்தானுக்கு வருகை தர இந்தியப் பாடகர் மற்றும் அவரது 14 பேர் கொண்ட குழுவுக்குப் பாதுகாப்பு அனுமதி மற்றும் விசா வழங்கியது யார் என்பதை அரசு கண்டுபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இந்திய திரைப்படங்கள், நிகழ்ச்சிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நேரத்தில், பாகிஸ்தான் தனது கருத்துக்களை இந்திய அரசுக்கு தெளிவுபடுத்தியுள்ளது. இந்த இசைக் குழுவினருக்கு ஆரம்பத்தில் விசா வழங்கப்பட்டிருந்தாலும் அவை ரத்து செய்யப்பட்டிருக்க வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் பாடகரின் தீவிர ரசிகரான மணமகன், மிக்கா சிங் இசை நிகழ்ச்சியை நேரில் காண விரும்பியுள்ளார். அவரது விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக பெண் வீட்டார் தங்களுக்கான செல்வாக்கைப் பயன்படுத்தி மிக்கா சிங்கை பாகிஸ்தானுக்கு வரவழைத்துள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன, இந்நிகழ்ச்சிக்காக மிக்கா ரூ.1.06 கோடி சம்பளமாகப் பெற்றுள்ளார்.

மிக்கா பாகிஸ்தான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு அவரது இந்திய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிருப்தியும், கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர். ட்விட்டரில் அவரை பின் தொடர்ந்த பலரும் தற்போது பிளாக் செய்து வருகின்றனர்.

“மிக்கா சிங் இந்தியர்கள் உங்களுக்கு எவ்வளவு அன்பைக் கொடுத்தார்கள். தற்போதைய சூழ்நிலையில் பாகிஸ்தான் நமது நாட்டுடனான வர்த்தகம் உள்ளிட்டவற்றைத் தடை செய்திருக்கிறது. எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிக்கிறது. இந்தியாவில் பதற்றங்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் ஒரு நிகழ்ச்சிக்காக நீங்கள் ஏன் பாகிஸ்தான் சென்றீர்கள்?. இந்தியாவை விட சில பணம் உங்களுக்குப் பெரிதாகிவிட்டதா?” என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


மேலும் படிக்க


சிவகார்த்தி படத்தால் பாதிக்கப்படும் ஜெயம் ரவி!


துரைமுருகன் சொந்த ஊர் ரிசல்ட்!


அத்திவரதர் மோதல் :பொன்னையா கலெக்ட்டரான பின்னணி!


மணிகண்டன் - உடுமலை ராதாகிருஷ்ணன் - வேலுமணி: எடப்பாடியின் கில்லாடி அரசியல்!


டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நக்கல்-துரைமுருகன் அப்செட்!


திங்கள், 12 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon