மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 12 ஜூலை 2020

காஷ்மீரில் முதலீடு செய்யும் அம்பானி

காஷ்மீரில் முதலீடு செய்யும் அம்பானி

வரும் காலங்களில் ஜம்மு காஷ்மீரில் அதிக அளவு முதலீடு செய்யப்போவதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 42ஆவது ஆண்டுப் பொதுக் கூட்டம் மும்பையில் இன்று நடந்தது. இக்கூட்டத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் செயல்பாடுகள், எதிர்காலத் திட்டங்கள், ரிலையன்ஸ் ஜியோவின் வளர்ச்சி, செப்டம்பர் மாதத்தில் தொடங்கப்படும் ஜியோ பைபர் சேவை, ஜியோ போன் 3 விற்பனை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி பேசினார். இந்தியப் பொருளாதாரம் 2030ஆம் ஆண்டுக்குள் 10 லட்சம் கோடி டாலர் மதிப்பை எட்டிவிடும் எனவும், சவுதி அரேபியாவின் அராம்கோ நிறுவனம் மற்றும் இங்கிலாந்தின் பிபி நிறுவனத்துடனான பங்கு விற்பனை குறித்தும் பேசியிருந்தார். இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு அதிக முதலீடுகள் மேற்கொள்ளப்படும் என அம்பானி உறுதியளித்துள்ளார்.

இதுகுறித்து அம்பானி பேசுகையில், “ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதி மக்களுக்கான ஆதரவை வழங்க ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தயாராக உள்ளது. வரும் காலங்களில் ஜம்மு காஷ்மீருக்கான நிறைய அறிவிப்புகள் வெளியிடப்படும். அங்குள்ள மக்களின் மேம்பாட்டுக்காகவும் முதலீடுகள் செய்வது குறித்து ஆலோசிக்கவும் சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார். சில தினங்களுக்கு முன்னர் ஜம்மு காஷ்மீரில் முதலீடு செய்ய முன்வர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டிருந்தார். அதைத் தொடர்ந்து அமுல், மைண்ட் ட்ரீ, ஸ்டீல் பேர்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் முதலீடு செய்வதாக உறுதியளித்திருந்தன. அதைத் தொடர்ந்து தற்போது ரிலையன்ஸ் நிறுவனமும் தனது முதலீட்டுத் திட்டத்தைத் தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரின் சுற்றுலா, தகவல் தொழில்நுட்பம், வேளாண்மை, சுகாதாரம் ஆகிய துறைகளில் முதலீடு செய்ய வேண்டும் என்று நரேந்திர மோடி கேட்டிருந்தார். அதன் விளைவாகத் தற்போது அம்பானியின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் ஏற்கெனவே லூபின், கோக கோலா, சன் பார்மா, கடிலா பார்மா, ரேடிசன், டாபர், பெர்கர் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனத்தின் 370வது பிரிவை ஆகஸ்ட் 6ஆம் தேதி மத்திய அரசு நீக்கியது. இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ஜம்மு காஷ்மீரில் முதலீடு செய்ய தொழில் துறையினர் முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். மோடியின் இந்த அழைப்பை ஏற்று முதலீடு செய்வதாக முகேஷ் அம்பானி தனது உரையில் கூறியுள்ளார்.


மேலும் படிக்க


சிவகார்த்தி படத்தால் பாதிக்கப்படும் ஜெயம் ரவி!


துரைமுருகன் சொந்த ஊர் ரிசல்ட்!


அத்திவரதர் மோதல் :பொன்னையா கலெக்ட்டரான பின்னணி!


மணிகண்டன் - உடுமலை ராதாகிருஷ்ணன் - வேலுமணி: எடப்பாடியின் கில்லாடி அரசியல்!


டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நக்கல்-துரைமுருகன் அப்செட்!


திங்கள், 12 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon