மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 12 ஜூலை 2020

கொள்ளையர்களை விரட்டியடித்த முதியவர்கள்!

கொள்ளையர்களை விரட்டியடித்த முதியவர்கள்!

நெல்லை அம்பாசமுத்திரத்தில் துணியால் கழுத்தை நெரித்துக் கொள்ளையடிக்க முயன்றவர்களை தம்பதியர் அடித்துவிரட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் கடையம் அருகே இருக்கும் ஊர் கல்யாணிபுரம். அங்கு சண்முகவேல் என்பவர் அவரது மனைவி செந்தாமரையுடன் தோப்பிற்குள் இருக்கும் தங்கள் வீட்டில் தனித்து வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி இரவு சண்முகவேல் தனது வீட்டின் வெளியில் அமர்ந்திருந்தபோது முகமூடி அணிந்த கொள்ளையன் ஒருவன் பின்பக்கமாக வந்து அவரது கழுத்தை துணியால் நெரித்துள்ளார். சண்முகவேல் கூச்சலிட அங்கு வந்த அவரது மனைவி, கொள்ளையர்கள் கையில் இருக்கும் கூரிய ஆயுதங்களையும் பொருட்படுத்தாமல் தன் கணவரைக் காப்பாற்றும் தீவிர முயற்சியில் இறங்கினார்.

தொடர்ந்து இருவரும் இணைந்து அங்கு இருந்து சேர்களைப் பயன்படுத்தி கொள்ளையர்களை விரட்டியடிக்க முயன்றனர். கையில் கூரிய அரிவாளுடன் வந்த கொள்ளையர்கள் அந்த தம்பதியைத் தாக்க முயன்றும் அவர்கள் தொடர்ந்து மிகக் கடுமையாகப் போராடி கொள்ளையர்களை விரட்டியடித்தனர். இவர்களின் குழந்தைகள் வெளியூர்களில் தங்கி வேலை செய்வதாகவும், வீட்டில் வயது முதிர்ந்த இருவர் மட்டுமே இருப்பார்கள் என்பதை அறிந்து அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கொள்ளையர்கள் அங்கு வந்ததாகவும் தெரிகிறது.

தொடர்ந்து இதுகுறித்து கடையம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காண்போர் நெஞ்சைப் பதைபதைக்க வைக்கும் இந்த சிசிடிவி வீடியோ காட்சிகள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் இருக்கும் கொள்ளையர்கள் குறித்த ஏதேனும் விவரங்கள் தெரியவந்தால் காவல்நிலையத்தில் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

திங்கள், 12 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon