மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 31 மா 2020

என்னை ஜீரோவாக்கிவிட்டனர் : முன்னாள் ரூட் தல!

என்னை ஜீரோவாக்கிவிட்டனர் : முன்னாள் ரூட் தல!

சென்னையில் கல்லூரி மாணவர்களின் ’ரூட் தல’ மோதலை தடுக்கும் வகையில் காவல்துறையினர் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், ரூட் தல உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்ட முன்னாள் மாணவர்களைக் கண்டுபிடித்து அவர்களின் தற்போதைய நிலை குறித்த உருக்கமான வீடியோவை சென்னை சிட்டி போலீஸ் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

சென்னை ரூட் தல பெயரில் கல்லூரி மாணவர்கள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் வன்முறைகளில் ஈடுபட்டு வருவது பேருந்து ஓட்டுநர்களுக்கும் , பொதுமக்களுக்கும் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மாதம் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், பட்டாக்கத்திகளுடன் வன்முறையில் ஈடுபட்டதை அடுத்து, ரூட் தல பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க போலீசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்குவது உள்ளிட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் முன்னாள் ரூட் தல மாணவர்களைக் கண்டுபிடித்து அவர்களின் தற்போதைய நிலை என்ன என்று அவர்களே கூறுவதை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர்.

சென்னை சிட்டி போலீஸ் முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் பேசும் நபர், ”2011 - 2014 வரை பச்சையப்பன் கல்லூரியில் படிச்சேன். அம்பத்தூரிலிருந்து மந்தைவெளி போகும் 41டி பஸ் ரூட்டில் ரூட் தலயாக இருந்தேன். ரூட் தலயாக இருந்தபோது 3 வருஷம் ஹீரோவாக என்னை சித்தரிச்சாங்க. அந்த கெத்துலயே மாணவர்களைத் திரட்டிக்கிட்டு பேருந்தில் எப்போதும் பாட்டுப்பாடுவது, கண்டக்டர், டிரைவர் பேச்சலாம் கேட்காமல் இருந்தேன். இது ஜாலியாகவும், கெத்தாகவும் இருந்துச்சு.

போகப்போக அந்த ரூட்ல நாங்கதான் மாஸாக இருக்கணும்னு எதிர்பார்த்தோம். எங்களைத் தாண்டி எந்தக் கல்லூரி மாணவர்களும் இருக்கக் கூடாது என நினைத்தோம்.. நாங்கள் பயணம் செய்யும் பஸ்ல மாநில கல்லூரி, நந்தனம் கல்லூரி மாணவர்கள் வந்தால் அவர்களை அடித்து உதைத்து மாஸ் காட்டினோம். இது ஹீரோ மாதிரியே இருந்துச்சு.

அப்பா, அம்மா பேராசிரியர்கள் சொன்ன எதையும் கேட்கல. 3ஆவது வருஷம் ரூட் தலயாக இருந்தபோது காலேஜ் பக்கத்துலயே 3 மாணவர்கள அடிச்சதால என் மீது கேஸ் ஆச்சு. இது எனக்கு பவர்புல்லா, ஹீரோ மாதிரி இருந்துச்சு.

சிறையில் இருக்கும்போது மாணவர்கள் யாரும் என்னைப் பார்க்க வரல. உதவிக்கும் வரல. என் அம்மாதான் எனக்காக அழு தாங்க. நான் சிறைக்குப் போகும் போது வேறு யாரும் என்னுடன் வரல. ரூட் தலயா 3 வருஷம் மாஸ் காட்டிகிட்டு ஹீரோவாக இருந்தேன். அப்போ அது பெரிய விஷயமாக இருந்தது. காலேஜ் முடிச்சு வெளியே வந்த பிறகுதான் அது பெரிய விஷயம் இல்லை என புரிந்தது. என் மீது பதியப்பட்ட வழக்குகள் மட்டுமே என்னைப் பின் தொடர்ந்தன.

போலீஸ் தேர்வுக்காகத் தயாரானேன். அனைத்து தேர்விலும் பாஸ் ஆனாலும், என் மீதான வழக்குகளால் எனக்கு வேலை தடைப்பட்டது. அதிகாரியாக இருக்க வேண்டிய நேரத்தில் அக்யூஸ்டாக நிற்கிறேன். எங்க அப்பா ஒரு மாற்றுத் திறனாளி. நான் 9 நாள் சிறையிலிருந்தபோது என்னை ஜாமீனில் எடுக்கக் கூட பணம் இல்ல.. இத நினைச்சு ஜெயில்ல இருக்கும் போதே ஃபீல் பண்ணேன். என் கூட இருந்த 50 பேரில் ஒருவர்கூட அப்போ என்கூட இல்ல. எங்க அம்மா அப்பா மட்டும்தான் என் கூடவே இருந்தனர். 3 வருஷமா என்னை ஹீரோவாக பார்த்தவர்கள் எல்லாமே இப்போ எங்கோ போய்ட்டாங்க. என்னை ஜீரோவாக்கி விட்டு விட்டு அவர்கள் ஹீரோவாக எங்கோ இருக்காங்க. அதை நினைச்சு தினம் தினம் ஃபீல் பண்ணிக்கிட்டு இருக்கிறேன் ஓர் அதிகாரியாக இருக்க வேண்டிய நான் இப்போ தண்ணீர் கேன் போட்டுட்டு இருக்கேன்’ என்று பேசியுள்ளார் கண்ணீர் மல்க.

முன்னதாக ரவுடிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, குற்றச்செயல்களில் ஈடுபட்ட முன்னாள் ரவுடிகளிடம் வீடியோ எடுத்து போலீசார் பதிவிட்டு வந்தனர். தற்போது அதே ஃபார்முலாவை ரூட் தல மாணவர்களுக்காகக் கையில் எடுத்துள்ளனர்.


மேலும் படிக்க


சிவகார்த்தி படத்தால் பாதிக்கப்படும் ஜெயம் ரவி!


துரைமுருகன் சொந்த ஊர் ரிசல்ட்!


அத்திவரதர் மோதல் :பொன்னையா கலெக்ட்டரான பின்னணி!


மணிகண்டன் - உடுமலை ராதாகிருஷ்ணன் - வேலுமணி: எடப்பாடியின் கில்லாடி அரசியல்!


டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நக்கல்-துரைமுருகன் அப்செட்!


திங்கள், 12 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon