மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 27 மே 2020

மாட்டுக் கறி டெலிவரி : ஜோமேட்டோ ஊழியர்கள் போராட்டம்!

மாட்டுக் கறி டெலிவரி : ஜோமேட்டோ ஊழியர்கள் போராட்டம்!

மாட்டுக் கறி, பன்றிக் கறி டெலிவரி செய்யக் கட்டாயப்படுத்துகிறது ஜோமேட்டோ என அதன் ஊழியர்கள் கொல்கத்தாவில் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

2017 ஆம் ஆண்டில் பாஜக தலைமையிலான அரசாங்கம் பசுக்களைக் கொல்வதற்கு நாடு தழுவிய தடையை அறிவித்ததையடுத்து, மாட்டிறைச்சி இந்தியாவில் ஒரு பரபரப்பான விஷயமாக மாறியது. பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்கள் பசுவை பாதுகாக்க மாட்டிறைச்சி சாப்பிடுவதை தொடர்ந்து எதிர்த்து வருகின்றன.

இந்நிலையில், கொல்கத்தா மாநிலத்திலுள்ள ஹவுரா நகரில் நேற்று காலை முதல் ஜோமேட்டோ டெலிவரி ஊழியர்கள், மாட்டுக் கறி, பன்றிக் கறி டெலிவரி செய்யக் கட்டாயப்படுத்துகிறது ஜோமேட்டோ என வீதியில் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். மேலும், இந்த விவகாரம் தொடர்ந்தால், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் கூறியுள்ளனர். ‘ஜோமேட்டோவின் கொடுமையை ஏற்றுக்கொள்ள முடியாது’ என தங்கள் கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

இப்போராட்டம் குறித்து மவுசின் அக்தர் என்கிற ஜோமேட்டோ ஊழியர் செய்தியாளர்களிடம் தெரிவித்த போது, “எங்களது கோரிக்கையை ஜோமேட்டோ மதிக்கவில்லை. எங்கள் விருப்பத்தை மீறி மாட்டுக்கறி, பன்றிக்கறியை டெலிவரி செய்யச் சொல்கிறார்கள். மாட்டிறைச்சியை டெலிவரி செய்வதில் இந்துக்களுக்கு பிரச்சனை உள்ளது. பன்றிக் கறியை டெலிவரி செய்வதில் முஸ்லிம்களுக்குப் பிரச்னை உள்ளது. அதைப் போன்ற உணவுகளை எந்த வித சூழலிலும் டெலிவரி செய்ய நாங்கள் விரும்பவில்லை. ஆனால், ஜோமேட்டோ கட்டாயப்படுத்துகிறது” என்று கூறியுள்ளார்.

இது குறித்து ஜோமேட்டோ நிறுவனம், “இந்தியா போன்ற பன்முகத் தன்மை வாய்ந்த ஒரு நாட்டில், சைவம் அசைவத்தைப் பிரித்து டெலிவரி செய்யும் வேலைகளை வகுக்க முடியாது. டெலிவரி ஊழியர்கள், தங்களது பணி குறித்து புரிந்து செயல்பட வேண்டும். இது குறித்து அனைவரும் புரிந்து கொண்டனர். ஹவுராவில் இருக்கும் ஒரு சிறிய குழு மட்டும்தான் இதில் விலகியிருக்கிறார்கள். அதை சரி செய்ய பார்த்து வருகிறோம்” என்று விளக்கம் கொடுத்துள்ளது.

சென்ற மாதம், மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆர்டர் செய்திருந்த உணவை இந்து அல்லாத ஒருவரிடம் ஜோமேட்டோ நிறுவனம் கொடுத்தனுப்பியதனால் உணவை மறுத்ததுள்ளார். இது குறித்து பதிலளித்துள்ள ஜோமேட்டோ நிறுவனம் “உணவுக்கு மதம் கிடையாது. உணவு என்பதே மதம் தான்” என்று பதிலளித்துள்ளது. அதனால், ஜோமேட்டோ நிறுவனத்திற்கு தேசம் முழுவதுமிருந்து ஆதரவுக் குரல்களும், எதிர்ப்புக் குரல்களும் எழுந்தன. இவ்விவகாரம் சமூக வலைதளங்களில் விவாதமானது.

அதனைத் தொடர்ந்து தற்போது இவ்விவகாரம் ஜோமேட்டோவிற்கு எதிராக எழுந்து வருகின்றது.

திங்கள், 12 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon