மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 27 மே 2020

பாஜகவில் சர்வதேச வீராங்கனை!

பாஜகவில் சர்வதேச வீராங்கனை!

சர்வதேச மல்யுத்த வீராங்கனை பபிதா போகத் தனது தந்தை மகாவீர் போகத்துடன் இன்று (ஆகஸ்ட் 12) பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார்.

தமிழகத்தைப் பொறுத்தவரை திரைத்துறையைச் சேர்ந்த கலைஞர்கள் அரசியலுக்கு வருவது வாடிக்கையானது. தேசிய அரசியலிலும் திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் நுழைந்து வந்தாலும் சமீபகாலத்தில் விளையாட்டு வீரர்கள் தொடர்ந்து அரசியலில் இறங்கிவருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கௌதம் காம்பீர் மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக பாஜகவில் இணைந்தார். உடனடியாக அவருக்கு டெல்லி கிழக்குத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் காம்பீர் வெற்றி பெற்று தற்போது எம்.பி.யாக உள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியும் ஓய்வுக்குப் பின் பாஜகவில் இணைவார் என ஜார்கண்ட் மாநில பாஜக தலைவர்கள் கூறிவருகின்றனர். இந்நிலையில் மல்யுத்த வீராங்கனை பபிதா போகத் தனது தந்தை மகாவீர் போகத் உடன் பாஜகவில் இணைந்துள்ளார்.

மகாவீர் போகத் தனது மகளை மல்யுத்த வீராங்கனையாக உருவாக்க எடுத்த முயற்சிகளில் ஊக்கம் பெற்றே ஆமிர் கான் நடிப்பில் வெளியான தங்கல் திரைப்படம் உருவானது.

விளையாட்டு மற்றும் இளையோர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜு, ஹரியான மாநில பாஜக கட்சியின் பொதுச்செயலாளராக பொறுப்பில் உள்ள அணில் ஜெயின் மற்றும் சுபாஷ் பரலா ஆகியோர் முன்னிலையில் இருவரும் இணைந்தனர். பின்னர் இருவரும் கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

ஹரியானா மாநிலத்துக்கு விரைவில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால் ஆளும் பாஜக பிரபலங்களை கட்சியில் இணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அந்தவகையில் பபிதாவை கட்சிக்குள் கொண்டுவந்துள்ளனர்.

கட்சியில் இணைந்த பின் செய்தியாளர்களை இருவரும் சந்தித்தனர். அப்போது பேசிய பபிதா போகத், “நான் நரேந்திர மோடியின் மிகப் பெரிய விசிறி. நாட்டிற்காக அவர் பல்வேறு சாதனைகளைச் செய்துவருகிறார். விளையாட்டில் தீவிரமாக இயங்கிவந்ததால் கட்சியில் இணைவது தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை பிரித்தது வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது. என்னைப் போல் பலரும் பாஜகவில் விரைவில் இணைவார்கள்” என்று கூறினார்.

காஷ்மீரிலிருந்து இனி பெண் எடுக்கலாம் என்று ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் சமீபத்தில் பேசியது சர்ச்சையைக் கிளப்பியது. அவரது பேச்சை பபிதா ஆதரித்து பேசியுள்ளார்.

"ஹரியாணா மாநிலத்தில் குறைந்துவரும் பாலின விகிதாச்சாரத்தைப் பற்றி பேசும்போதே முதல்வர் ஆண் - பெண் விகிதத்தை அதிகரிக்க இனி காஷ்மீரில் இருந்தும் பெண் எடுக்கலாம் என்று கூறினார். நம் காஷ்மீரின் மகள்களையும் சகோதரிகளையும் அவமதிக்கும் வகையில் அவர் ஏதும் கூறவில்லை. ஊடகங்கள்தான் அவரின் கருத்துகளைத் திரித்துவிட்டன" என்று கூறியுள்ளார்.

மகாவீர் போகத், ஜம்மு காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்பட்டதும், புல்வாமா தாக்குதலுக்கு அளித்த பதிலடியும் தன்னை வெகுவாக ஈர்த்ததாக கூறியுள்ளார்.


மேலும் படிக்க


சிவகார்த்தி படத்தால் பாதிக்கப்படும் ஜெயம் ரவி!


துரைமுருகன் சொந்த ஊர் ரிசல்ட்!


அத்திவரதர் மோதல் :பொன்னையா கலெக்ட்டரான பின்னணி!


மணிகண்டன் - உடுமலை ராதாகிருஷ்ணன் - வேலுமணி: எடப்பாடியின் கில்லாடி அரசியல்!


டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நக்கல்-துரைமுருகன் அப்செட்!


திங்கள், 12 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon