மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 4 ஜூலை 2020

ஜெய் ஸ்ரீராம்: மிரட்டப்பட்ட இயக்குநர்!

ஜெய் ஸ்ரீராம்: மிரட்டப்பட்ட இயக்குநர்!

மத்திய அரசுக்கு எதிராக பதிவிட்டு வந்த பிரபல இயக்குநர் அனுராக் கஷ்யப், தன் குடும்பத்தினருக்கு வந்த தொடர் மிரட்டல்களால் டிவிட்டரிலிருந்து நிரந்தரமாக வெளியேறியுள்ளார்.

பாலிவுட்டில் முன்னணி இயக்குநராக வலம் வரும் அனுராக் கஷ்யப் தனது வெளிப்படையான கருத்துக்களால் அறியப்படுபவர். அதனாலேயே தொடர்ந்து விமர்சனங்களையும், மிரட்டல்களையும் சந்தித்து வருகின்றார். கடந்த ஜூலை 23 ஆம் தேதி, திரைப் பிரபலங்கள் பலர் பிரதமர் நரேந்திர மோடிக்கு வெளிப்படையாக ஓர் கடிதத்தை எழுதினார்கள். அதில், “கும்பல் வன்முறைக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள். ஜெய் ஸ்ரீ ராம் என்கிற கோஷம் வன்முறைக்காக பயன்படுத்தப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதில் அனுராக் கஷ்யப்பும் கையொப்பம் இட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 5ஆம் தேதி ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு வந்த 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதை கண்டித்து அனுராக் கஷ்யப், ‘ஒரு மனிதன் 120 கோடி மக்களின் நலனுக்காக செய்ய வேண்டிய சரியான விஷயம் என்னவென்று, தனக்குத் தெரியும் என்று நினைக்கிறான். இருப்பதிலேயே இது தான் அச்சமூட்டுவதாக இருக்கிறது’ என பதிவிட்டுள்ளார்.

இப்பதிவு மோடியை மறைமுகமாக தாக்கும் வகையில் அமைந்ததால் அனுராக் கஷ்யப் விமர்சிக்கப்பட்டார். இதனையடுத்து, பல்வேறு வகையில் அனுராக்கின் தாய், மகள், குடும்பத்தினர் ஆகியோர் மிரட்டலுக்கு உள்ளாகினர். இதனால் அனுராக் டிவிட்டரிலிருந்து வெளியேறுவதாக தனது கடைசி பதிவை இட்டுள்ளார்.

அதில், “உங்கள் பெற்றோருக்கு அழைப்புகள் வரத் தொடங்கும் போதும், உங்கள் மகளுக்கு ஆன்லைனில் மிரட்டல் வரும் போதும் நீங்கள் பேசக் கூடாது என்பது புரியும். தர்க்கமான முறையில் உங்களால் எதுவும் பேச முடியாது. ரவுடிகள்தான் அதிகாரம் செலுத்துவார்கள். இந்த புதிய இந்தியாவுக்கு வாழ்த்துகள்”.

மேலும், “உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியும் வெற்றியும் குவியட்டும். நான் டிவிட்டரிலிருந்து வெளியேறுவதால் இதுவே எனது கடைசி பதிவாகயிருக்கும். பயம் இல்லாமல் என் மனதில் பட்டதைப் பேச முடியாது என்றால் நான் பேசவே போவதில்லை. குட் பை” என்று பதிவிட்டிருந்தார்.

அனுராக் குடும்பத்தினர் மிரட்டப்படுவது இது முதல் முறையல்ல. நடந்து முடிந்த லோக் சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி நாடு தழுவிய வெற்றியைக்கண்ட போது, சௌகிதார் ராம்சங்கி என்ற பாஜக தொண்டர் ஒருவர் அனுராக் மகளின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரை வன்புணர்வு செய்வேன் என்று மிரட்டியுள்ளார். இதனைக் குறிப்பிட்டு நரேந்திர மோடிக்கு டிவிட்டரில் பதிவிட்ட அனுராக், இதனை எவ்வாறு எதிர்கொள்வது எனக் கேள்வியெழுப்பியது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க


சிவகார்த்தி படத்தால் பாதிக்கப்படும் ஜெயம் ரவி!


துரைமுருகன் சொந்த ஊர் ரிசல்ட்!


அத்திவரதர் மோதல் :பொன்னையா கலெக்ட்டரான பின்னணி!


மணிகண்டன் - உடுமலை ராதாகிருஷ்ணன் - வேலுமணி: எடப்பாடியின் கில்லாடி அரசியல்!


டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நக்கல்-துரைமுருகன் அப்செட்!


திங்கள், 12 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon