மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 18 நவ 2019

காஷ்மீர் களையிழந்த பக்ரீத்!

காஷ்மீர் களையிழந்த பக்ரீத்!

நாடுமுழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் காஷ்மீரில் கட்டுப்பாடுகளை ராணுவத்தினர் மீண்டும் அதிகரித்துள்ளனர். அங்கு பெரும்பாலான பகுதிகளில் தொழுகைக்கு பொது மக்கள் அனுமதிக்கப்படவில்லை என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அங்குச் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திலும் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. கடந்த 5 ஆம் தேதி முதல் ராணுவத்தினர் கையிலிருந்த காஷ்மீரில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வந்தன. இதற்கிடையே சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிராகப் போராடிய மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு மறுப்புத் தெரிவித்திருக்கிறது.

கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் நேற்று முதல் காஷ்மீரில் கடைகள் திறக்கப்பட்டன. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, புத்தாடைகள் உட்படத் தேவையான பொருட்களை வாங்க மக்கள் அதிகளவு கடைகளில் குவிந்தனர். எனினும் கடைகள் திறக்கப்பட்டு சில மணி நேரத்திலேயே கடைகளை அடைக்க காவல்துறையினரால் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாகக் காஷ்மீர் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. ராணுவத்தினரும், போலீசாரும் தொடர்ந்து ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் இன்று (ஆகஸ்ட் 12) கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக ஸ்ரீநகரில் உள்ள பெரும்பாலான மசூதிகளில் பக்ரீத் சிறப்புத் தொழுகைக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அங்குக் கலவரம் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக ஊரடங்கு உத்தரவு போன்ற தடைகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளன.

ஓரிடத்தில் அதிகமானோர் கூடுவதற்கு அனுமதி மறுக்கப்படுவதால், மக்கள் தங்களின் வீடுகளுக்கு அருகே இருக்கும் மசூதிகளுக்கு சென்று தொழுகை செய்து வருகின்றனர், இந்த சூழ்நிலையிலும் பொதுமக்கள் உடனடியாக வீடுகளுக்கு திரும்புமாறு ஒலிபெருக்கியில் போலீசார் அறிவித்து வருகின்றனர். முக்கிய தலைவர்களான மெகபூபா முஃப்தி, பரூக் அப்துல்லா உள்ளிட்டோரும் அருகில் உள்ள மசூதிக்குச் சென்று உடனடியாக வீடு திரும்பியதாக என்.டி.டி.வி தெரிவித்துள்ளது.

பக்ரீத் பண்டிகை முன்னெப்போதும் காஷ்மீரில் இப்படி இருந்ததில்லை என்று உள்ளூர் மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். 2016ல் புர்கான் வாணி கொலை செய்யப்பட்ட போதும், 19ஆம் நூற்றாண்டில் பயங்கரவாதிகள் பிடியில் காஷ்மீர் இருந்த போதும் இவ்வாறு பக்ரீத் பண்டிகை களையிழந்து காணப்பட்டதில்லை என்று வேதனை தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையே பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பக்ரீத் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை, நெல்லையில், மேலப்பாளையம் பஜார் திடல், மாநகராட்சி மைதானம், ஜின்னா திடல் உள்ளிட்ட இடங்களில் ஒன்று கூடிய இஸ்லாமியர்கள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். நாகையில் சுமையா கார்டனில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.


மேலும் படிக்க


சிவகார்த்தி படத்தால் பாதிக்கப்படும் ஜெயம் ரவி!


துரைமுருகன் சொந்த ஊர் ரிசல்ட்!


மணிகண்டன் - உடுமலை ராதாகிருஷ்ணன் - வேலுமணி: எடப்பாடியின் கில்லாடி அரசியல்!


டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நக்கல்-துரைமுருகன் அப்செட்!


என்டிடிவி விவகாரம்: பின்னணியில் சுப்பிரமணியன் சாமி?


திங்கள், 12 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon