மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 27 மே 2020

விஜய் சேதுபதி யோசித்து பேச வேண்டும்: மாபா பாண்டியராஜன்

விஜய் சேதுபதி யோசித்து பேச வேண்டும்: மாபா பாண்டியராஜன்

காஷ்மீர் விவகாரம் ஜனநாயகத்துக்கு எதிரானது என விஜய் சேதுபதி தெரிவித்த கருத்துக்கு மாபா பாண்டியராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. பாஜக அரசின் இம்முடிவுக்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

அரசியல் ரீதியான கருத்துக்களை வெளிப்படையாக தொடர்ந்து பேசி வருபவர் விஜய் சேதுபதி. சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்திற்கு மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை ஆஸ்திரேலியாவில் பெற்ற அவர், அங்கு செயல்படும் எஸ்.பி.எஸ் தமிழ் செய்தி நிறுவனத்திற்கு காஷ்மீர் விவகாரம் குறித்து ஒலிமுறையில் பேட்டியளித்துள்ளார்.

அதில் “‘காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாடு ஜனநாயகத்துக்கு எதிரானது. முக்கியமாக பெரியார் அன்றே சொல்லிவிட்டார். அந்தந்த மக்கள் பிரச்னையை அந்தந்த மக்கள்தான் முடிவெடுக்க வேண்டும். நான், உங்கள் வீட்டு விஷயங்களில் தலையிட முடியுமா? நீங்கள்தான் அந்த வீட்டில் வாழ்கிறீர்கள். உங்கள் வீட்டு பிரச்சனை உங்களுக்குத்தான் தெரியும். நான் உங்கள் மீது அக்கறை செலுத்தலாம். ஆனால், ஆளுமை செலுத்த முடியாது. அங்கு வாழ்பவர்களுக்குத் தான் தெரியும் அங்கு என்ன பிரச்சனை நிகழ்கிறதென்று. காஷ்மீர் விவகாரம் முழுக்க முழுக்க மிகுந்த மன வேதனையைத் தருகிறது. பரூக் அப்துல்லா சிறைவைக்கப்பட்டதாக பேசியதை செய்திகளில் பார்த்தேன். பெரியார் சொன்னது தான் மீண்டும் நினைவுக்கு வருகிறது. அவர்கள் பிரச்னையை அவர்கள் தான் பார்க்கவேண்டும்” என்று தெரிவித்தார்.

இந்நிலையில், சென்னை கேளம்பாக்கத்தில் இன்று நடைபெற்ற நாட்டுப்புற கலை விழாவில் பங்கேற்ற அதிமுக அமைச்சர் மாபா பாண்டியராஜன் விஜய் சேதுபதியின் காஷ்மீர் தொடர்பான கருத்துக்கு தனது நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளார். “காஷ்மீர் மறுசீரமைப்பு தொடர்பான விவகாரத்தில் நடிகர் விஜய் சேதுபதி அதன் பின்புலத்தை சரியாக புரிந்து கொண்டு கருத்து தெரிவிக்க வேண்டும். விஜய் சேதுபதி போன்ற பிரபலங்கள் இந்த விவகாரத்தில் ஆழ்ந்து யோசித்து பேச வேண்டும்” எனக் கூறியுள்ளார்.


மேலும் படிக்க


சிவகார்த்தி படத்தால் பாதிக்கப்படும் ஜெயம் ரவி!


துரைமுருகன் சொந்த ஊர் ரிசல்ட்!


மணிகண்டன் - உடுமலை ராதாகிருஷ்ணன் - வேலுமணி: எடப்பாடியின் கில்லாடி அரசியல்!


டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நக்கல்-துரைமுருகன் அப்செட்!


என்டிடிவி விவகாரம்: பின்னணியில் சுப்பிரமணியன் சாமி?


திங்கள், 12 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon