மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 12 ஜூலை 2020

பெருவெள்ளம்: கிராமமே மாயம்!

பெருவெள்ளம்: கிராமமே மாயம்!

கேரளாவில் பெய்துவரும் கனமழை, நிலச்சரிவால் புதுமலை என்ற கிராமமே இருந்த இடம் தெரியாமல் அழிந்துபோயுள்ளது. தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்திலும் மழை பாதிப்புகள் அதிகமாக இருக்கும் நிலையில் சீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவு மற்றும் மழை வெள்ளத்தில் ஏராளமான வீடுகளும் சாலைகளும் பாலங்களும் சேதமடைந்துள்ளன. கன மழையின் காரணமாக இதுவரையில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு படை, ராணுவம், தீயணைப்புத் துறை, காவல் துறை, வனத் துறை என அனைத்து துறை அதிகாரிகளும் போர்கால அடிப்படையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைத்து வருகின்றனர். கனமழை பாதிப்பால் 1,200 வீடுகளுக்கு மேல் சேதமடைந்துள்ளன. சுமார் 5,000 பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவலாஞ்சியில், சீரமைப்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

சீரமைப்புப் பணிகள் குறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறுகையில், “நீலகிரி மாவட்டத்தில் சுமார் 350 கி.மீ. தூரம் வரையிலான சாலை பாதிக்கப்பட்டுள்ளது. 150 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதைப் போர்க்கால அடிப்படையில் சீரமைத்து வருகிறோம். மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மீண்டும் மழை பெய்தால் பாதிப்புகளைச் சமாளிக்கத் தேவையான ஆட்கள், ஜேசிபி வாகனங்கள் மற்றும் மரம் அறுக்கும் இயந்திரங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. தேவையான அளவு மணல் மூட்டை, சவுக்கு மரங்கள் என அனைத்தையும் தயார் நிலையில் வைத்துள்ளோம்” என்று தெரிவித்தனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துவரும் நிலையில், இந்த மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட இடம் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சிதான். நீலகிரியில் இதனால் 15க்கும் அதிகமான மீட்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் பகுதிகளில் வெள்ள நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. நீலகிரியில் நேற்று இரவும் கனமழை பெய்தது. நேற்று ஒரே நாளில் நீலகிரியில் 350 மி.மீ மழை பெய்துள்ளது. கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இன்றைய மழை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், “கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மற்ற மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யலாம். வரும் 15ஆம் தேதி வரை இதே நிலை நீடிக்க வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டமாகக் காணப்படும். ஒரு சில இடங்களில் சேலான மழைக்கு வாய்ப்புள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் மழை பாதிப்பு அதிகமாக இருக்கும் நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவிலும் வெள்ள பாதிப்பு தீவிரமாக உள்ளது. தென்மேற்குப் பருவ மழை தொடங்கியுள்ளதால் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியான கேரளாவின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சென்ற ஆண்டில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து மீண்டு வந்த கேரளாவில் மீண்டும் மழை பாதிப்பு பெரும் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. மழை வெள்ள பாதிப்பால் அங்கு பலி எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1,550 நிவாரண முகாம்களில் சுமார் 2.25 லட்சம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வயநாடு, இடுக்கி, கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்கள்தான் மழை வெள்ளத்தால் அதிக பாதிப்புகளைச் சந்தித்துள்ளன.

மழை காரணமாக, வயநாட்டில் உள்ள புதுமலை என்ற கிராமத்தில் நிலச்சரிவால் 1,000க்கும் அதிகமான வீடுகள் இருந்த இடமே தெரியாமல் அழிந்துள்ளன. 15க்கும் மேற்பட்ட நிலச்சரிவுகள் ஏற்பட்டு அந்த கிராமம் இருந்த இடமே தெரியாமல் போயுள்ளது. தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த அக்கிராமம் முழுவதும் அழிந்துள்ளது. கோயில், அஞ்சலகம், பள்ளி வாசல் உள்ளிட்ட அனைத்து கட்டடங்களும் தரைமட்டமாகியுள்ளன. அந்தப் குதியில் புதையுண்ட நிலையில் ஆறு சடலங்கள் மீட்கப்பட்டதாகவும், மேலும் 20 பேர் புதையுண்டிருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.


மேலும் படிக்க


சிவகார்த்தி படத்தால் பாதிக்கப்படும் ஜெயம் ரவி!


துரைமுருகன் சொந்த ஊர் ரிசல்ட்!


மணிகண்டன் - உடுமலை ராதாகிருஷ்ணன் - வேலுமணி: எடப்பாடியின் கில்லாடி அரசியல்!


டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நக்கல்-துரைமுருகன் அப்செட்!


என்டிடிவி விவகாரம்: பின்னணியில் சுப்பிரமணியன் சாமி?


திங்கள், 12 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon