மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 31 மா 2020

சிபிஎஸ்இ கட்டண உயர்வு: பெற்றோர்கள் எதிர்ப்பு!

சிபிஎஸ்இ கட்டண உயர்வு: பெற்றோர்கள் எதிர்ப்பு!

பொதுத் தேர்வு மாணவர்களுக்கான தேர்வு கட்டணத்தை ரூ .750ல் இருந்து ரூ .1,500 வரை இரட்டிப்பாக்கி மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) எடுத்த முடிவை அகில இந்திய பெற்றோர் சங்கம் கடுமையாக எதிர்த்துள்ளது.

சிபிஎஸ்இ வாரியத்தின் திருத்தப்பட்ட தேர்வுக் கட்டணத்தின்படி, எஸ்சி, எஸ்டி மாணவர்கள் இனிமேல் 5 பாடங்களுக்கு ரூ.1,200 கட்டணம் செலுத்த வேண்டும், முன்பிருந்த ரூ.50ல் இருந்து 24 மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டது. பொதுப்பிரிவினருக்கு ரூ.750 ஆக இருந்த கட்டணம் ரூ.1500 ஆக உயர்த்தப்பட்டது. இந்த கட்டணம் 2020ஆம் ஆண்டு பொதுத் தேர்வு எழுதும் 10ஆம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்குப் பொருந்தும் என்று சிபிஎஸ்இ தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பார்வைத் திறன் குறைபாடு உள்ள மாணவர்களுக்குத் தேர்வு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதுதவிர பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்புத் தேர்வு எழுதும் மாணவர்களைக் கொண்ட சிபிஎஸ்இ பள்ளிகள் இதற்கு முன் 5 பாடங்களுக்கு ரூ.5 ஆயிரம் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது. இது தற்போது ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்பட்டிருக்கிறது.

இதற்கு இந்திய பெற்றோர் சங்கம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. ” இது அரசியலமைப்பிற்கு விரோதமானது மற்றும் மாணவர்களின் கல்வி உரிமைக்கு முற்றிலும் எதிரானது. கட்டண உயர்வை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவுள்ளோம்” என்று சங்கத்தின் தலைவர் அசோக் அகர்வால் தெரிவித்துள்ளார். இந்த கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். ”ஒவ்வொரு குழந்தைக்கும் அடிப்படை உரிமையாக அனைத்து அரசாங்கங்களும் இலவச மற்றும் தரமான பள்ளிக் கல்வியை வழங்க வேண்டும். மக்கள்தொகையில் 70 சதவீதத்திற்கும் அதிகமானோரின் குடும்ப வருமானம் மாதத்திற்கு ரூ.6000க்கும் குறைவாக உள்ளது. அத்தகைய குடும்பங்களிலிருந்து வரும் மாணவர்களுக்கு சிபிஎஸ்இ தேர்வுக் கட்டணத்தில் பத்தாம் மற்றும் பனிரண்டாம் வகுப்புக்கான கூடுதல் தேர்வுக் கட்டணத்தை எப்படிச் செலுத்த முடியும்” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

திங்கள், 12 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon