மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 27 மே 2020

பக்ரீத் ஸ்பெஷல்: செட்டிநாடு மட்டன் பிரியாணி

பக்ரீத் ஸ்பெஷல்: செட்டிநாடு மட்டன் பிரியாணி

உணவு சிறக்க உவர்ப்பு, புளிப்பு, கார்ப்பு, துவர்ப்பு, கசப்பு, இனிப்பு ஆகிய அறுசுவைகள் தேவை. ஆனால், விருந்து சிறக்க இந்த அறுசுவைகள் மட்டும் போதாது. அறுசுவைகளோடு சேர்த்து அன்பு, உபசரிப்பு, புன்சிரிப்பு என நவசுவைகள் வேண்டும். எவ்வளவு சிறந்த உணவாக இருந்தாலும் உபசரிப்பில் குறையிருந்தால் ருசிக்காது. இதைப் பல விருந்துகளில் அனுபவபூர்வமாக உணரமுடியும். பிரியாணிகளில் பலவகை உண்டு. செட்டிநாடு உணவு வகைகளில் மட்டன் பிரியாணிக்குத் தனியிடம் உண்டு. அசத்தும் சுவைகொண்ட இந்த பிரியாணி செட்டிநாட்டு விருந்துகளில் சிறப்பு உணவாகப் பரிமாறப்படும். பக்ரீத் திருநாளில் செய்யப்படும் இந்தப் பிரியாணி அனைவரையும் அசத்தும்.

என்ன தேவை?

மட்டன் – ஒரு கிலோ

பாஸ்மதி அரிசி – ஒரு கிலோ

தயிர் – ஒரு கப்

காஷ்மீர் மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்

தனியாத்தூள் (மல்லித்தூள்) – ஒரு டீஸ்பூன்

பச்சை மிளகாய் – 5 (நீளவாக்கில் நறுக்கவும்)

புதினா – ஒரு கட்டு (ஆயவும்)

கொத்தமல்லித்தழை – ஒரு கட்டு (பொடியாக நறுக்கவும்)

பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை கலவை – 25 கிராம்

வறுத்து அரைத்த முந்திரி விழுது - 2 டீஸ்பூன்

எலுமிச்சைப்பழம் – ஒன்று (சாறு பிழியவும்)

வெங்காயம் – கால் கிலோ (நீளவாக்கில் நறுக்கவும்)

தக்காளி – 150 கிராம் (நீளவாக்கில் நறுக்கவும்)

இஞ்சி - பூண்டு விழுது – 2 டீஸ்பூன்

தோலுரித்த சின்ன வெங்காயம் – 100 கிராம்

வாழையிலை - 2

எண்ணெய் – 100 மில்லி

நெய் – 75 மில்லி

கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

அலங்கரிக்க:

நறுக்கிய கொத்தமல்லித்தழை, வறுத்த சின்ன வெங்காயம் – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

அரிசியை அரை மணி நேரம் ஊறவிடவும். சிறிதளவு புதினா, கொத்தமல்லித்தழையைத் தனியாக எடுத்து வைக்கவும். மட்டனுடன் தயிர், காஷ்மீர் மிளகாய்த்தூள், தனியாத்தூள், முந்திரி விழுது, எலுமிச்சைச்சாறு, சிறிதளவு உப்பு, ஒரு டீஸ்பூன் இஞ்சி - பூண்டு விழுது, கொத்தமல்லித்தழை, புதினா இலைகள், சின்ன வெங்காயம் சேர்த்து ஊறவைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய்விட்டுப் பாதியளவு பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, உப்பு, மீதமுள்ள இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் ஊறவைத்த மட்டன் கலவை சேர்த்து வதக்கவும். பிறகு, தேவையான அளவு தண்ணீர்விட்டு மிருதுவாக வேகவிடவும். மற்றொரு பாத்திரத்தில் தண்ணீருடன் மீதமுள்ள பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, கொத்தமல்லித்தழை, புதினா சேர்த்துக் கொதிக்கவிடவும். அதில் அரிசி சேர்த்து முக்கால் வேக்காடு பதத்தில் வேகவைத்து வடிக்கவும். தவாவைச் சூடாக்கி, மட்டன் பாத்திரத்தை வைத்து, வடித்த சாதம் சேர்த்து நன்கு கலக்கவும். அதனுடன் நெய், கரம் மசாலாத்தூள், கொத்தமல்லித்தழை, புதினா இலைகள் சேர்த்து வாழையிலையால் மூடி 20 நிமிடங்கள் வரை சிறு தீயில் வேகவிட்டு இறக்கவும். பிறகு இலையை எடுத்துவிட்டு, அதன்மீது வறுத்த வெங்காயம், கொத்தமல்லித்தழைத் தூவி சூடாகப் பரிமாறவும்.

என்ன பலன்?

உடலில் உள்ள நல்ல கொழுப்புகளின் தரத்தை அதிகரித்து, கெட்ட கொழுப்புகளை நீக்கும் அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் ஆட்டிறைச்சியில் நிறைந்துள்ளது. இதில் உள்ள புரோட்டீன் பசியைக் கட்டுப்படுத்துவதோடு, நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கும். கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ரத்த சோகை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே, கர்ப்பிணிகள் மட்டனைச் சாப்பிட்டால், அதில் உள்ள இரும்புச்சத்து, ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து, உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். குறிப்பாக கருப்பையில் ரத்த ஓட்டம் சீராகச் செல்ல வழிவகுக்கும்.

நேற்றைய ரெசிப்பி: செட்டிநாடு ஸ்பெஷல் - பீட்ரூட் வடை


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நக்கல்-துரைமுருகன் அப்செட்!


சிவகார்த்தி படத்தால் பாதிக்கப்படும் ஜெயம் ரவி!


என்டிடிவி விவகாரம்: பின்னணியில் சுப்பிரமணியன் சாமி?


வேலூர்: தேர்தல் முடிவை மாற்றிய சீமான்


தினகரன் உத்தரவு: புலம்பும் பழனியப்பன்


திங்கள், 12 ஆக 2019

chevronLeft iconமுந்தையது