மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 27 மே 2020

இன்ஸ்பெக்டரைத் திட்டிய மாவட்ட ஆட்சியர்: வலுக்கும் எதிர்ப்புகள்!

இன்ஸ்பெக்டரைத் திட்டிய மாவட்ட ஆட்சியர்: வலுக்கும் எதிர்ப்புகள்!

அத்திவரதரை தரிசிக்க நாள்தோறும் அதிகளவில் பக்தர்கள் காஞ்சிபுரத்தில் குவிந்து வருகின்றனர். தரிசனத்துக்காக காவல் உயரதிகாரிகள் மற்றும் காவலர்கள் ஷிப்ட் முறையில் பாதுகாப்பு அளித்து வருகிறார்கள். இந்த நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு கோயில் முகப்பில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த காவல் துறை ஆய்வாளர் ஒருவர் விஐபி பாதையில் சிலரை அனுப்பிவிட்டார். அந்தச் சமயத்தில் முக்கிய விஐபிக்களை வரவேற்க அங்கு வந்த காஞ்சி மாவட்ட ஆட்சியர் இதைப் பார்த்துவிட்டு அந்த ஆய்வாளரைப் பிடித்து, ‘உன்னைத் தொலைத்துவிடுவேன்’ என்பன உட்பட கடுமையான வார்த்தைகளால் சாடினார்.

ஆய்வாளரை மாவட்ட ஆட்சியர் திட்டியதைத் தொடர்ந்து ஆட்சியரைத் தொடர்புகொண்டு ஏடிஜிபி ஒருவர் எச்சரித்ததாகச் செய்தி ஒன்று போலீசாரின் வாட்ஸ் அப் குழுக்களில் வேகமாகப் பரவியது. இதுதொடர்பாக விசாரித்தபோது, “ஏடிஜிபியெல்லாம் காஞ்சிபுரம் ஆட்சியரைத் தொடர்புகொண்டு பேசவில்லை. முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் போனில் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார்” என்று வருவாய்த் துறை வட்டாரங்களில் கூறுகின்றனர்.

மேலும், ஆட்சியரின் செயல் காவல் துறையினர் மத்தியில் கோபத்தை அதிகரிக்கச் செய்துள்ளது என்கிறார்கள் அத்திவரதர் தரிசன பாதுகாப்பில் இருப்பவர்கள். இதுதொடர்பாக காவல் துறை வட்டாரங்களில் பேசினோம். “அத்திவரதர் தரிசனத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதி முறையாகச் செலவழிக்கப்படுவதில்லை. தனியார் நிறுவனங்களுக்கு மட்டும் விஐபி பாஸ்களை அள்ளிக் கொடுத்துவருகிறார். சென்னையில் படிக்கும் பொன்னையா மகன் தனக்கு வேண்டியவர்களுக்கு விஐபி பாஸ்களை அள்ளிக்கொடுத்து வருகிறார்” என்று குற்றம்சாட்டினர். அத்திவரதர் தரிசனம் என்ற பெயரில் உயரதிகாரிகள் செய்யும் முறைகேடுகளை வெளிக்கொண்டு வருவதற்காக வேலைகளில் காஞ்சி காவலர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஆட்சியர் பொன்னையாவைக் கண்டித்து ஒருவர் பேசும் வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவர் திருமாறன்ஜி என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் அவர், “காஞ்சிபுரத்தில் பாதுகாப்பிலிருந்த ஒரு இன்ஸ்பெக்டரை மாவட்ட ஆட்சித் தலைவர் பொது இடத்தில் வைத்து போடா, வாடா என்றும் சஸ்பெண்ட் செய்துவிடுவேன் என்றும் கடுமையான வார்த்தைகளில் சாடுகிறார். இவ்வளவு தெனாவட்டாகவும் திமிராகவும் பேசுவது எவ்விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “மாவட்ட ஆட்சியர் பப்ளிக் சர்வன்ட் என்றால் இன்ஸ்பெக்டரும் பப்ளிக் சர்வன்ட்தான். கடந்த 40 நாட்களாக இரவு பகல் கண்விழித்து காவலர்கள் படும் கஷ்டத்தைப் பொதுமக்கள் பாராட்டி வருகிறார்கள். இந்த நேரத்தில் தங்கள் வீட்டில் வேலை செய்யும் வேலையாளிடம் பேசுவது போல காவல் துறையினரைக் கீழ்த்தரமாகப் பேசுவது எவ்வகையில் நியாயம்?” என்று கேள்வி எழுப்புபவர், காவல் துறையினருக்கு சங்கம் இல்லாததால் அவர்களைக் கீழ்த்தரமாக பேசுகிறார்கள். ஆகவே, இதை யார் முன்னெடுக்காவிட்டாலும் நாங்கள் தமிழகம் முழுவதும் முன்னெடுத்துச் செல்ல உள்ளோம் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து, “விஐபி வருகிறார், மினிஸ்டர் வருகிறார் என்று கலெக்டர் கூறுகிறார். இறைவன் முன்பு அனைவரும் சமம்தான். மினிஸ்டருக்கு மட்டும் 10 கை, 10 கால் உள்ளதா என்ன? இரவு பகலாக பணியாற்றுபவர்களைப் பாராட்ட வேண்டாம். குறைந்தபட்சம் திட்டாமலாவது இருக்கலாம் அல்லவா? 4 லட்சம் பக்தர்கள் வந்துசெல்லும் இடத்தில் வெறும் 5,000 போலீசார் மட்டுமே பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்குச் சரியான உணவுகூடக் கிடைப்பதில்லை என்கிறார்கள். 1.25 லட்சம் காவலர்கள் இல்லையென்றால் தமிழகத்தில் மக்கள் நிம்மதியாக இருக்க முடியாது. ஆகவே, மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து மதுரையில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என்று தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நக்கல்-துரைமுருகன் அப்செட்!


சிவகார்த்தி படத்தால் பாதிக்கப்படும் ஜெயம் ரவி!


என்டிடிவி விவகாரம்: பின்னணியில் சுப்பிரமணியன் சாமி?


வேலூர்: தேர்தல் முடிவை மாற்றிய சீமான்


தினகரன் உத்தரவு: புலம்பும் பழனியப்பன்


திங்கள், 12 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon