மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 12 ஜூலை 2020

பக்ரீத் பண்டிகை: தலைவர்கள் வாழ்த்து!

பக்ரீத் பண்டிகை: தலைவர்கள் வாழ்த்து!

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை பக்ரீத். இந்த பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகிறது. இறைவனின் தூதரான இப்ராஹிம் நபியின் தியாகத்தை நினைவுகூரும் விதமாக, ஒவ்வோர் ஆண்டும் இஸ்லாமிய நாட்காட்டியின் பன்னிரண்டாவது மாதமான துல்ஹஜ் மாதம்10ஆம் நாள் இது கொண்டாடப்படுகிறது. அந்நாளில் உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்கள் தங்களிடமுள்ள ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை புனிதப்பலி (குர்பானி) செய்வார்கள்.

அந்த வகையில் பக்ரீத் பண்டிகை இன்று (ஆகஸ்ட் 12) கொண்டாடப்படும் நிலையில், தமிழகத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முதல்வர், எடப்பாடி பழனிசாமி

இறைக் கட்டளையை ஏற்று, தனது ஒரே மகனான இஸ்மாயிலை இறைவனுக்கு அர்ப்பணிக்க துணிந்த இறைத்தூதர் இப்ராஹிம் அவர்களின் இறை உணர்வையும் தியாகத்தையும் நினைவுகூரும் வகையில் பக்ரீத் திருநாள் இஸ்லாமியப் பெருமக்களால் கொண்டாடப்படுகிறது.

இத்திருநாளில், “எவர் ஒருவர் இறை அச்சம் கொள்கின்றார்களோ... மேலும், நன்னடத்தை மேற்கொள்கின்றார்களோ... அத்தகையவர்களுடன் இறைவன் இருக்கிறான்" என்ற திருக்குரானின் போதனையை மக்கள் மனதில் நிறுத்தி, உலகில் அன்பும், அமைதியும், மனிதநேயமும் தழைத்தோங்கிட அனைவரும் நல்லொழுக்கத்துடன் ஒற்றுமையாக வாழ்ந்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் உளமார்ந்த பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகள்.

திமுக தலைவர், ஸ்டாலின்

ஈத்-உல்-அஸா என்ற நோன்பு இருந்து ‘கடமையைச் செய்வதிலேயே உண்மையான இன்பம் பிறக்கிறது’ என்பதை உணர்த்தும் நன்னாளாக இந்த நாள் அமைந்துள்ளது. ஏழைகள் மீது காட்டும் கருணை தனிமனித வாழ்வில் ஓர் இணக்கமான சூழ்நிலையை ஏற்படுத்துகிறது. அதுவே சமுதாய அளவில் மிகுந்த நல்லிணக்கத்துக்கு அடையாளமாக விளங்குகிறது. இந்தத் தியாகத் திருநாளில் சமுதாய நல்லிணக்கம் போற்றும் பணியின் சிறப்பம்சத்தை எடுத்துரைக்கும் வகையில் - கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துகள்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர், கே.எஸ்.அழகிரி

உலகோர் அனைவரும் ஒரே தாய், தந்தை வழிவந்தவர்கள் என்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய உண்மையை உணர்ந்து சகோதரத்துவம், சமாதானம், ஏகத்துவம் போன்றவற்றை பின்பற்றி மகிழ்ச்சியுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.

மதிமுக பொதுச் செயலாளர், வைகோ

இறைவனுக்காக அவனது கட்டளையை ஏற்று, புனிதப் பயணம் மேற்கொண்டு, மக்காவிலிருந்து திரும்புபவர்கள் தமது தாயாரின் வயிற்றிலிருந்து பிறந்த பாலகனைப் போல திரும்புகிறார்கள். புனிதப் பயணம் மேற்கொண்டவர்கள் இறைவனின் திருப்பொருத்தத்தை நாடிச் சென்று மகிழ்வுடன் கொண்டாடி மகிழும் வேளை அங்கு செல்ல வாய்ப்பற்றோர் தத்தம் வசதிக்கேற்ப தத்தம் இல்லங்களில் தியாகத் திருநாளைக் கொண்டாடி மகிழ்கிறார்கள்.

புவி எங்கும் வாழும் முஸ்லிம்கள் புனிதத் திருநாளை, தியாகத் திருநாளாகக் கொண்டாடி மகிழும் இவ்வேளையில் இதயங்கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். நற்குணத்துடன் வாழ்த்துவோம்.

அமமுக பொதுச் செயலாளர், டிடிவி தினகரன்

ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் உன்னதமான தியாகத்தை உலகம் போற்றும் என்பதற்கு அடையாளமே இந்தத் திருநாள். அதிலும் உண்மையாக அன்போடும் உளப்பூர்வமான நம்பிக்கையோடும் தியாகங்களைச் செய்பவர்களுக்கு முழுமையாக இறையருள் கிடைக்கும் என்பதை பக்ரீத் சொல்கிறது. நல்லவற்றையே நினைத்து நல்லவற்றையே செய்து நாளும் மகிழ்ச்சியாக வாழ்ந்திட பக்ரீத் வாழ்த்துகள்.

விசிக தலைவர், திருமாவளவன்

இறைத்தூதர் இப்ராஹிம் அவர்களின் தியாக உணர்வைப் போற்றும் நாளாகவும், ஏழை எளியோருக்கு அன்னமிடும் கடமையை ஆற்றும் நாளாகவும் அமைந்திடும் பக்ரீத் பெருநாளில் இஸ்லாமியர் யாவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதுடன் இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மை மக்களும் இதர சமூகத்து மக்களும் நல்லிணக்கமாக இம்மண்ணில் வாழ்வதற்கு ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட முன்வரவேண்டுமென வேண்டுகோள் விடுக்கிறோம்.

இஸ்லாமியர்கள் மட்டுமின்றி இதர சமூகங்களைச் சார்ந்த யாவரும் ஈகை, இரக்கம், கருணை ஆகியவற்றை மேம்படுத்தவும் சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்கவும் இந்த ஈகை திருநாளில் உறுதியேற்போம்.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நக்கல்-துரைமுருகன் அப்செட்!


சிவகார்த்தி படத்தால் பாதிக்கப்படும் ஜெயம் ரவி!


என்டிடிவி விவகாரம்: பின்னணியில் சுப்பிரமணியன் சாமி?


வேலூர்: தேர்தல் முடிவை மாற்றிய சீமான்


தினகரன் உத்தரவு: புலம்பும் பழனியப்பன்


திங்கள், 12 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon