மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 4 ஜூலை 2020

வாட்ஸ் அப் ஆடியோவால் திணறும் ‘ரெட்’ திருச்சி!

வாட்ஸ் அப் ஆடியோவால் திணறும் ‘ரெட்’ திருச்சி!

ஜெயம் ரவி நடிப்பில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் வரும் 15ஆம் தேதி ரிலீஸாக உள்ள படம் கோமாளி. படத்தின் டீசர் வெளியானபோது ரஜினியை நக்கல் அடித்திருக்கிறார்கள் என சர்ச்சை எழுந்தது. பின்னர், அந்தக் காட்சியை நீக்கிவிட தயாரிப்பாளர், இயக்குநர் ஒப்புக்கொண்டு வருத்தம் தெரிவித்ததால் அந்தப் பிரச்சினை முடிவுக்கு வந்தது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்தப் படத்தை சக்தி பிலிம் பேக்டரி சார்பில் சக்திவேல் தமிழக உரிமையை வாங்கியுள்ளார்.

சிவகார்த்திகேயன் நடித்த மிஸ்டர் லோக்கல் படம் 2019 மே 17இல் ரிலீஸானது. படம் எதிர்பாராத விதமாக பெரும் தோல்வியைச் சந்தித்தது. இதனால் மினிமம் கேரண்டி முறையில் படத்தை வாங்கி வெளியிட்ட மதுரை, திருச்சி பகுதி விநியோகஸ்தர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது.

இதனால் மதுரை ஏரியாவில் மிஸ்டர் லோக்கல் படத்தைத் திரையிட்டு நஷ்டமடைந்த தியேட்டர் உரிமையாளர்களும், விநியோகஸ்தரும் இந்தப் படத்துக்குத் தமிழகம் முழுவதும் விநியோகஸ்தர்களிடம் வியாபாரம் பேசி முடித்த சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலிடம் நஷ்டத்தைச் சரிகட்ட வேண்டும் எனப் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

ஒரு கட்டத்தில் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேச்சு வார்த்தையில் பங்கு கொண்டார். அவர் நஷ்டத்தில் தானும் பங்கெடுப்பதாக உத்தரவாதம் கொடுத்தார். ஆனால், பிறகு அதிலிருந்து பின் வாங்கியதால் “மதுரை விநியோகப் பகுதியில் கோமாளி திரைப்படத்தைத் திரையிட திரையரங்குகள் வழங்குவதில்லை” என்று திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு எடுத்தனர்.

இம்முடிவை மதுரை, ராமநாதபுரம் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்துக்கும், தமிழ்த் திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்புக்கும் அனுப்பி வைத்தனர் . கூட்டமைப்பு இது சம்பந்தமாக சக்திவேலன், ஞானவேல்ராஜா ஆகிய இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு சுமுகமான முடிவுக்கு வந்ததால் மதுரை ஏரியாவில் கோமாளி திரைப்படத்தைத் திரையிடுவதிலிருந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது.

திருச்சி ஏரியாவில் மிஸ்டர் லோக்கல் படத்தை மினிமம் கியாரண்டி அடிப்படையில் வாங்கி வெளியிட்ட தியாகராஜனுக்குப் பெரும் நஷ்டம் ஏற்பட்டதாகவும் அதைத் தயாரிப்பாளர் தரப்பு அல்லது படத்தின் வியாபாரத்தைப் பேசி முடித்துக்கொடுத்த சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் திருப்பித் தர வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது .

“மிஸ்டர் லோக்கல் படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை நான் வாங்கவில்லை. பட வியாபாரத்திலும் தியேட்டர் எடுத்துக்கொடுப்பதற்கு மட்டும் உதவி செய்ததோடு எனது வேலை முடிந்தது” என்று சக்திவேலன் தரப்பில் பதில் கூறப்பட்டது.

படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா “மினிமம் கியாரண்டி அடிப்படையில் படத்தை வாங்கி விட்டு நஷ்டத்தைக் சரிக்கட்ட பணம் கொடுக்க வேண்டும் என்று கேட்பதில் எந்த வகையிலும் நியாயமில்லை” என மறுத்துவிட்டதால் பிரச்சினை பெரிதாகி, ‘சக்தி பிலிம் பேக்டரி சார்பில் ஆகஸ்ட் 15 அன்று திரையிட உள்ள கோமாளி திரைப்படத்துக்குத் திரையரங்குகள் ஒதுக்கீடு செய்வதில்லை’ என்று திரையரங்க உரிமையாளர்களும் விநியோகஸ்தர்களும் கூட்டாக முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க ஆலோசனைக் குழு தலையிட்டு பிரச்சினையை முடிவுக்குக்கொண்டுவர பலகட்ட முயற்சிகளை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. இது சம்பந்தமாக திருச்சி ஏரியா திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் மீனாட்சி சுந்தரம் மற்றும் திருச்சி ஏரியாவில் அதிகமான திரையரங்குகளைச் சொந்தமாகவும் குத்தகை அடிப்படையிலும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் பிரான்சிஸ் ஆகியோரை தயாரிப்பாளர்கள் சங்க ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் பலமுறை தொடர்பு கொண்டும் அதற்கு உரிய பதில் இல்லை என்று கூறப்படுகிறது.

இந்தச் சூழலில் தயாரிப்பாளர் சங்கத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினர்களில் ஒருவரான ஜே.சதீஷ்குமார் ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மீனாட்சி சுந்தரம், பிராான்சிஸ் ஆகிய இருவருக்கும் “கோமாளி படத்தை ரிலீஸ் செய்யும் விவகாரத்தில் எதுவாக இருந்தாலும் பேசித் தீர்வு காண வேண்டும். அதை விட்டு, படத்தை ரிலீஸ் செய்ய தியேட்டர் ஒதுக்காமல் “ரெட்” மிரட்டல் விடுத்தால் தயாரிப்பாளர் கவுன்சில் அதை வேடிக்கை பார்க்காது. ஏற்கனவே திருச்சி ஏரியா தியேட்டர்கள் மீது நிலுவையில் உள்ள திருட்டு விசிடி பதிவு வழக்கை மீண்டும் கையிலெடுத்து சட்ட நடவடிக்கை எடுக்கவும் கவுன்சில் தயங்காது” என ஜே.எஸ்.கே ஆடியோ பதிவில் பேசியிருப்பது திருச்சி தியேட்டர் அதிபர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜே.எஸ்.கே பேசியிருக்கும் ஆடியோவில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள் தயாரிப்பாளர்களுக்கு நன்மை பயக்கும் என்றாலும், பல மாதங்களாகக் கிடப்பில் இருக்கும் திருச்சி ஏரியாவின் திருட்டு விசிடி வழக்கை தூசிதட்டி, அவர்களின் இன்றைய ஆக்‌ஷனுக்கு ரியாக்ட் செய்யப் போவதாகக் குறிப்பிடுவது, தங்களுக்குத் தேவையான சமயத்தில் நடவடிக்கை எடுக்க, தங்களுக்கு இருக்கும் அதிகாரத்தைத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தவறாகப் பயன்படுத்துகிறதா என்ற கேள்வி எழுகிறது. இதை அடிப்படையாகக்கொண்டு, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் வரம்பு மீறுகிறதா... பிற சினிமா அமைப்புகள் மீது ஆதிக்கம் செலுத்துகிறதா என்ற கேள்விகளுக்கான விடையைத் தேடி திரையுலகினரின் கருத்துடன் இடம்பெறும் கட்டுரை, மாலை 7 மணி பதிப்பில் வெளியாகும்.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நக்கல்-துரைமுருகன் அப்செட்!


சிவகார்த்தி படத்தால் பாதிக்கப்படும் ஜெயம் ரவி!


என்டிடிவி விவகாரம்: பின்னணியில் சுப்பிரமணியன் சாமி?


வேலூர்: தேர்தல் முடிவை மாற்றிய சீமான்


தினகரன் உத்தரவு: புலம்பும் பழனியப்பன்


திங்கள், 12 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon