மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 4 டிச 2020

பட்ஜெட்டை கூட்டுவது யார்?

பட்ஜெட்டை கூட்டுவது யார்?

தமிழ் சினிமா 2019: சறுக்கியதும் சாதித்ததும்: 2

இராமானுஜம்

தமிழ் திரைப்படத்துறையில் புதிய படங்களை வெளியிட்டு அதிகமான வருமானம் பெறக் கூடிய காலங்கள் பொங்கல், தமிழ் வருடப் பிறப்பு, பள்ளி, கல்லூரி விடுமுறை மாதமான மே மாதம், தீபாவளி பண்டிகை. இந்த நான்கு காலங்களிலும் திரையரங்குகளில் வசூல் அதிகரிக்கும் .

ஒவ்வொரு திரையரங்கின் ஆண்டு வருமானத்தில் இந்த காலங்கள் பிரதான பங்கு வகிக்கும். அதனால் தான் மேற் குறிப்பிட்ட நாட்களில் முன்னணி நடிகர் நடித்த படங்களும், பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட படங்களும் வெளியிட போட்டி ஏற்படுகிறது .

பண்டிகை நாட்களில் குறைந்தபட்சம் நான்கு படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டால் மட்டுமே அனைத்து திரையரங்குகளும் புதிய படங்கள் திரையிடுவதற்கு வாய்ப்பு ஏற்படும். ஆனால் ரஜினிகாந்த் , அஜித் குமார், விஜய் நடித்த படங்கள் வெளிவருகிற போது மற்ற நடிகர்கள் நடித்த படங்களை வெளியிட தயங்குகின்றனர்.

இந்த கலாச்சாரத்தை தமிழ் சினிமாவில் தொடங்கிவைத்த பெருமை ஏவிஎம் நிறுவனம் தயாரித்த சிவாஜி படத்திற்கு சேரும். எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் இவர்கள் திரையுலகில் ஆதிக்கம் செலுத்தி வந்த காலங்களில் குறைந்தபட்சம் ஐந்து முதல் ஏழு படங்கள் பொங்கல் தீபாவளி பண்டிகை காலங்களில் ரிலீஸ் செய்யப்பட்டன.

திரையரங்குகளின் எண்ணிக்கை தமிழகத்தில் இரண்டாயிரத்திற்கும் மேலிருந்த காலங்களில் இது சாத்தியமானது. கமல், ரஜினி இவர்கள் நடித்த படங்கள் நேரடியாக மோதியிருக்கின்றன. அதுமட்டுமன்றி இவர்களோடு சத்யராஜ், விஜயகாந்த், ராமராஜன், பிரபு, சரத்குமார் போன்றவர்கள் நடித்த படங்களும் ஒரே நாளில் ரிலீஸாகியுள்ளன .

அன்றைக்கு அதிகபட்சமாக 85 திரையரங்குகளில் ஒரு படம் திரையிடப்படுவது சாதனையாக கருதப்பட்டது. பத்தாண்டுகளுக்கு முன்பு படத்தின் கதை பிரதானமாக இருந்தது. அதனுடன் அப்படத்தில் நடித்த நடிகர்களை முன் வைத்து வியாபாரம் நடைபெற்றது.

இவற்றை இங்கு குறிப்பிடுவதற்கு காரணம் எத்தனை படங்கள் தங்கள் படத்தை எதிர்த்து வெளியானாலும் வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கை தயாரிப்பாளர், நடிகர்கள் மத்தியில் இருந்தது.

டிஜிட்டல் முறையில் படங்கள் வெளியிடத் தொடங்கிய பின்னர் குறுகிய நாட்களில் போட்ட முதலீட்டை எடுக்க வேண்டும் என்ற போக்கு உருவானது. அதனால் குறைந்தபட்சம் 200 முதல் 500 திரையரங்குகள் வரை புதிய படங்களை திரையிடும் சூழல் உருவானது.

இதனால் சிறு பட்ஜெட் படங்கள் நடுத்தரமான நடிகர்கள் நடித்த படங்கள் முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்கள் வெளியாகும் அன்று வெளியிட விரும்பினாலும் தியேட்டர் கிடைப்பதில் நெருக்கடிகள் ஏற்பட்டன.

இதை இங்கு குறிப்பிடுவதற்கு காரணம் இத்தொடரை சினிமா அல்லாத பார்வையாளர்களும் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே. இன்றைக்கு முன்னணி நடிகர்கள் வாங்குகிற சம்பளம் அளவிற்கு எம்ஜிஆரும் சிவாஜியும் வாங்கினார்கள்.

எம்.ஜி.ஆர் கடைசியாக நடித்த படம் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் இப்படத்திற்கு அவருக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் ஏழு லட்ச ரூபாய்.

அன்றைக்கு எம்.ஜி.ஆர் வாங்கிய சம்பளத்தின் அளவை இன்றைக்கு முன்னணியில் இருக்கும் நடிகர்கள் வாங்குகிற சம்பளத் தொகையுடன் ஒப்பிட்டால் சரியாக வரும்.

எம்ஜிஆர், சிவாஜி இருவரும் சினிமாவை நேசித்து தன்னை நம்பி முதலீடு செய்யும் தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடைந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். கமலும் ரஜினியும் தங்களது திரையுலக வாழ்க்கையில் உச்சத்தைத் தொடும் வரை இதேபோன்று இருந்தனர்.

1990களுக்குப் பின் ரஜினி, கமல் அவர்களைத் தொடர்ந்து முதலிடத்திற்கு வந்த அனைத்து நடிகர்களுமே யார் எக்கேடு கெட்டால் என்ன எங்களுடைய சம்பளம் முழுமையாக தங்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர்.

வெற்றிபெற்ற ஹீரோக்களின் கால்சீட்டை வாங்குவதில் தயாரிப்பாளர்களிடம் கடுமையான போட்டி ஏற்பட்டது இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு ஒரு படத்தில் நடித்த ஹீரோக்கள் கூட கோடிக்கணக்கில் சம்பளம் கேட்கும் சூழல் உருவானது.

படத் தயாரிப்பு செலவும் அதிகரித்ததால் சூழ்நிலை கைதியாக சிக்கிக்கொண்ட தயாரிப்பாளர்கள் தாங்கள் போட்ட முதலீட்டை லாபம் இல்லை என்றாலும் அசலையாவது வியாபாரம் மூலம் திருப்பி எடுக்க முயற்சித்தனர்.

படம் வெளியான முதல் மூன்று நாட்களில் அசலில் பெரும்பகுதியை திரையரங்க வசூல் மூலம் எடுக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் காரணமாக அதிகமான திரையரங்குகளில் படங்களை திரையிடத் தொடங்கினர்.

இதனால் முன்னணி நடிகர்கள் ஆதிக்கம் அதிகரித்தது. இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட நடிகர்கள் அவர்களை வைத்து படம் தயாரித்த தயாரிப்பாளர்கள் பெரும் நெருக்கடிக்கு ஆளானார்கள். தயாரான படங்களை வெளியிடும் தேதியை கூட தீர்மானிக்க முடியாத நிலையில் இன்று வரை உள்ளனர். போட்டிக்கு படம் இல்லாமல் தனியாக வந்து கல்லா கட்டும் முன்னணி நடிகர்கள் வசூல் சக்கரவர்த்திகளாக பெரும்பான்மையான ஊடகங்களால் சித்தரிக்கப்படுகிறார்கள்.

இது உண்மைதானா என்பதை நெருக்கமான புள்ளி விவரங்களோடு தொடர்ந்து நாளை பார்க்கலாம்.

தமிழ் சினிமா 2019: சறுக்கியதும் சாதித்ததும்!


மேலும் படிக்க


தினகரன் உத்தரவு: புலம்பும் பழனியப்பன்


விஜய் பட ஷூட்டிங்: விபத்தில் சிக்கியவர் மரணம்!


டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நக்கல்-துரைமுருகன் அப்செட்!


புறக்கணிக்கப்படுகிறதா தமிழ் சினிமா?


பன்னீரும் அமித் ஷாவும்: தோல்விக்கு காரணம் சொல்லும் எடப்பாடி


திங்கள், 12 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon