மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 19 செப் 2020

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு: செங்கோட்டையன்

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு: செங்கோட்டையன்

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ள பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்கள் எளிதில் கணிதம் கற்கும் வகையில் மேட்டிபிஃக் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். இந்தியாவிலேயே அரசுப் பள்ளி மாணவர்களுக்காகத் தமிழகத்தில் கணிதப் பாடத்துக்குச் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கரட்டடிபாளையத்தில் உள்ள கலை அறிவியல் கல்லூரியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார். பள்ளிக் கல்வித் துறை மற்றும் மேட்டிபிஃக் ஆஸ்திரேலியா ஆகியவை இணைந்து உருவாக்கிய புதிய செல்போன் செயலியை அமைச்சர் அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழகத்தில் இந்த ஆண்டு கூடுதலாக 1.72 லட்ச மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். அரசுப் பள்ளி மாணவர்கள் இடையே சீனா தொழில்நுட்பம் முறையில் விமானத்தைக்கூட உருவாக்கும் திறமையும், ஆற்றலும் கற்றுக்கொடுக்கப்படும்.

ஈரோடு மாவட்டம் கணிதமேதை ராமானுஜம் பிறந்த ஊர் என்பதால் இச்செயலி தமிழகத்தில் முதன்முதலில் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டது. கோபியில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் 21,000 மாணவர்களுக்கு 500 ஆசிரியர்கள் கணிதப் பாடத்தைப் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள செயலி மூலம் கற்றுத்தருவார்கள். பன்னிரண்டாம் வகுப்பில் கணிதப் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள், பொறியியல் துறையைத் தேர்ந்தெடுத்துப் படிக்கும்போது 21 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெறுவதில்லை என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே கணிதப் பாடத்தை ஆரம்பக் கல்வி முதலே மாணவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் ஆஸ்திரேலிய நாடு நிறுவனத்தின் உதவியுடன் இச்செயலி அறிமுகப்படுத்தப்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், “கடந்த ஏழு ஆண்டுகளில் 45.7 லட்சம் இலவச மடிக்கணினிகள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 11, 12ஆம் வகுப்பு படிக்கும்போதே தற்போது மடிக்கணினிகள் வழங்கப்படுகின்றன. 2017- 2018ஆம் ஆண்டு படித்த மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள் விரைவில் வழங்கப்படும். 6 முதல் 8ஆம் வரையிலான 20 லட்சம் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு டேப் வழங்க ஏற்பாடு செய்யப்படும்” என்றார்.

ஞாயிறு, 11 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon