மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 27 மே 2020

“காஷ்மீரில் நடப்பது என்ன? வெளியான வீடியோ!

“காஷ்மீரில் நடப்பது என்ன? வெளியான வீடியோ!

“காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுவிட்டது. கடந்த ஐந்து நாட்களாக பாதுகாப்புப் படையினர் வசமே காஷ்மீர் இருக்கிறது. இந்த நாட்களில் ஏதேனும் போராட்டங்கள் நடந்ததா? மக்கள் வீதிக்கு வந்த சம்பவங்கள் ஏதும் உண்டா?” என்ற இந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபரின் கேள்விக்கு,

“பெரிய அளவிலான போராட்டங்கள் ஏதும் நடைபெறவில்லை. ஸ்ரீநகரை ஒட்டிய நகரப் பகுதிகளில் மட்டும் சிற்சில கல்லெறி சம்பவங்கள் நடைபெற்றன. தடைச் சட்டங்களை பிரயோகிப்பதில் படையினர் நிதானமாகவே செயல்படுகிறோம். குறைந்தபட்ச படைகள், அதிகபட்ச இரக்கம் என்பதுதான் இப்போதைய நமது படையினர் உத்தி” என்று பதில் அளித்திருந்தார் காஷ்மீர் ஆளுநரின் ஆலோசகரும் முன்னாள் சிஆர்பிஎஃப் தலைவருமான கே.விஜயகுமார் ஐபிஎஸ். அவரது இந்த நேர்காணல் ஆகஸ்டு 9 ஆம் தேதி வெளியானது.

ஆனால் தி கார்டியன், பிபிசி போன்ற சர்வதேச ஊடகங்களின் கூற்றுப்படி காஷ்மீரில் இந்திய அரசின் 370 ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடுமையான போராட்டங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. காஷ்மீர் சாலைகளில் இளைஞர்களும் பெண்களும் ஆயிரக்கணக்கான அளவுக்கு திரண்டு மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அவர்கள் மீது இந்திய ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது. பிபிசி இது தொடர்பாக வீடியோ காட்சிகளையும் வெளியிட்டுள்ளது.

அதில், ‘நாங்கள் இந்திய அரசியலமைப்பை ஏற்கமாட்டோம். எங்களை இப்படியே இருக்க விடுங்கள்’ என்று காஷ்மீர் இளைஞர்கள் போராட்ட முழக்கங்களை எழுப்பிக் கொண்டே சாலைகளில் பேரணியாக செல்கிறார்கள். சில இடங்களில் இளைஞர்கள் மீது இயந்திரத் துப்பாக்கிகள் சடசடவென சீறும் சத்தம் காதைத் துளைக்கிறது.

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக தி கார்டியன் வெளியிட்ட செய்தியும் சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது.

”காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து சற்று தளர்த்தப்பட்டது. இதற்குக் காரணம் வெள்ளிக் கிழமை ஸ்ரீநகர் வீதிகளில் பத்தாயிரம் காஷ்மீர் இளைஞர்களும், பெண்களுமாக சேர்ந்து டெல்லியின் முடிவை எதிர்த்து முழக்கங்களை எழுப்பிக் கொண்டே சென்றனர். தடைச் சட்டங்களை எல்லாம் அவர்கள் மீறியதால் போலீஸார் அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள். ரப்பர் குண்டுகளால் தாக்குதல் நடத்தினார்கள். இந்தப் போராட்டத்தின் விளைவாகத்தான் கட்டுப்பாடுகள் ஓரளவுக்கு தளர்த்தப்பட்டன. ஆனாலும் தொலைத் தொடர்பு, இணைய வசதிகள் முழுமையாக துண்டிக்கப்பட்டிருப்பதால் காஷ்மீரில் என்ன நடக்கிறது என்பது மூடி மறைக்கப்படுகிறது” என்று கார்டியன் செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அதேநேரம் மத்திய உள்துறை அமைச்சகம் இந்த செய்திகளை திட்டவட்டமாக மறுத்துள்ளது. “ஸ்ரீநகர், பாராமுல்லா பகுதிகளில் சில இடங்களில் போராட்டங்கள் நடந்தன. இவற்றிலும் இருபது பேர்களுக்கு மேல் எங்கும் திரளவில்லை. இந்நிலையில் காஷ்மீரிகள் திரண்டு போராட்டம் நடத்துவதாக வெளியாகும் செய்திகள் இட்டுக்கட்டப்பட்டவை. அவை சரியான செய்திகள் அல்ல” என்று மறுத்திருக்கிறது.

கடந்த வியாழனன்று ஸ்ரீநகரில் இருந்து டெல்லி வந்த அஸ்லம் அலி, “காஷ்மீரில் கடுமையான உணவுப் பற்றாக்குறை நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. என் குடும்பத்தால் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த காய்கறிகள் காய்ந்து வற்றிப் போன நிலையிலும் அதையே உணவுக்காக பயன்படுத்தி வருகிறார்கள். சில கடைகளில் மூடியபடியே பால் பொருட்களை விற்கிறார்கள். அவற்றை வாங்கி சமாளித்து வருகிறோம். ஆனால் ஜம்முவில் இருந்து பால் பொருட்கள் உள்ளிட்ட அத்தனை பொருட்களும் காஷ்மீர் கொண்டுவருவது நிறுத்தப்பட்டுவிட்டதால் பால் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படும் நிலைமை இருக்கிறது” என்று கார்டியனிடம் பேசியிருக்கிறார்.

அதேபோல, காஷ்மீரின் சுகாதாரத்துறையும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. ஸ்ரீநகரில் ஒரு மருத்துவமனையில் அவசர பிரிவில் பணியாற்றும் டாக்டர் ஒருவர் , “சராசரியாக நாள் தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்போம். ஆனால் இப்போது 100க்கும் குறைவானவர்களே மருத்துவமனையை தேடி வருகிறார்கள்” என்று பிரான்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியதாக மேற்கோள் காட்டியிருக்கிறது கார்டியன். ஆம்புலன்ஸுகள் கூட இயக்கப்படுவதில்லை. மருந்துக் கடைகளிலும் மருந்துகளின் இருப்பு வேகமாக குறைந்துகொண்டே வருகிறது என்றும் செய்தி வெளியிட்டுள்ளது கார்டியன்.

இந்திய ஊடகங்கள் காஷ்மீரில் என்ன நடக்கிறது என்று பெரிய அளவில் செய்திகள் வெளியிடாத நிலையில்... கார்டியன், பிபிசி போன்ற செய்தி நிறுவனங்களே காஷ்மீரில் போராட்டங்கள் நடப்பதாகவும், மக்களுக்கு உணவு, சுகாதாரத்துக்கு நெருக்கடி ஏற்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியிட்டு வருகின்றன. இதனால் சர்வதேச சமூகத்துக்கு பதில் சொல்ல வேண்டிய இந்தியாவின் பொறுப்பு அதிகமாகியிருக்கிறது.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நக்கல்-துரைமுருகன் அப்செட்!


வேலூர்: தேர்தல் முடிவை மாற்றிய சீமான்


எடப்பாடி அமைச்சரவையில் புதிய அமைச்சர் யார்?


தினகரன் உத்தரவு: புலம்பும் பழனியப்பன்


விஜய் பட ஷூட்டிங்: விபத்தில் சிக்கியவர் மரணம்!


ஞாயிறு, 11 ஆக 2019

அடுத்ததுchevronRight icon