மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 11 ஜூலை 2020

திமுக-மதிமுக உறவு: மனம் திறந்த வைகோ

திமுக-மதிமுக உறவு: மனம் திறந்த வைகோ

நாடாளுமன்ற மாநிலங்களவையில் காஷ்மீருக்கான 370 சட்டப் பிரிவு ரத்து செய்யப்பட்டது தொடர்பான விவாதத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, காங்கிரஸ் கட்சியை மிகக் கடுமையாகத் தாக்கியிருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அனுமதியோடுதான் வைகோ காங்கிரசை தாக்கியதாகக் குறிப்பிட்டார். மீண்டும் அதற்கு பதில் கொடுத்தார் வைகோ. திமுக கூட்டணியில் இருக்கும் மதிமுக, காங்கிரஸ் கட்சிகளிடையே இப்படி வார்த்தைப் போர் வெடித்த நிலையில் ஸ்டாலின் கருத்து எதுவும் சொல்லாமல் அமைதிகாத்து வருகிறார்.

இந்த அரசியல் சூழலில் ஆகஸ்டு 10 ஆம் தேதி மதிமுக தலைமையகமான தாயகத்தில், மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் பற்றி தலைவர் ஏதாவது பேசுவார் என்று மாசெக்கள் எதிர்பார்ப்போடு இருந்தனர்.

அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள் சிலரும் மாசெக்கள் சிலரும் கூட்டத்தில் பேசினர். அவர்களும் பல ஆண்டுகளுக்குப் பின் வைகோ டெல்லி சென்றது பற்றி சிலாகித்துப் பேசினர்.

பின் உரையாற்றிய வைகோ, “23 ஆண்டுகளுக்குப் பின் மாநிலங்களவை சென்ற எனக்கு மாற்றுக் கட்சித் தலைவர்கள் பலரும் நிரம்ப மரியாதை கொடுக்கின்றனர்” என்று சொல்லி தான் சந்தித்த ஒவ்வொரு தலைவரும் என்ன சொன்னார்கள் என்பதையெல்லாம் விளக்கமாக எடுத்துக் கூறினார்.

பின் உறுப்பினர் சேர்க்கையின் அவசியம் பற்றியும் விளக்கினார். வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா பிறந்தநாள் மாநாட்டை முழு நாள் மாநாடாக நடத்தப் போவதாகவும் அதற்கு நிர்வாகிகள் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

காங்கிரஸ் பற்றி சில மாவட்டச் செயலாளர்கள் கேட்க, “அவங்களப் பத்தி கண்டுக்கிடாதீங்க. திமுகவுக்கும் நமக்கும், தளபதிக்கும் எனக்குமான உறவு சுமுகமாக இணக்கமா இருக்கு. அதனால மத்தவங்களப் பத்தி நாம பேச வேண்டாம்” என்றும் பதிலளித்துள்ளார் வைகோ.

திமுகவுக்கும், மதிமுகவுக்குமான உறவு சுமுகமாக இருக்கிறது என்றால் திமுக கூட்டணியில் காங்கிரஸின் நிலை என்ன என்ற கேள்வி திமுக கூட்டணிக்குள் எழுந்திருக்கிறது.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நக்கல்-துரைமுருகன் அப்செட்!


வேலூர்: தேர்தல் முடிவை மாற்றிய சீமான்


எடப்பாடி அமைச்சரவையில் புதிய அமைச்சர் யார்?


தினகரன் உத்தரவு: புலம்பும் பழனியப்பன்


விஜய் பட ஷூட்டிங்: விபத்தில் சிக்கியவர் மரணம்!


ஞாயிறு, 11 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon