மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 3 டிச 2020

எடப்பாடி அமைச்சரவையில் புதிய அமைச்சர் யார்?

எடப்பாடி அமைச்சரவையில் புதிய  அமைச்சர் யார்?

தமிழக அமைச்சரவையில் இருந்து தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சரான மணிகண்டன் நீக்கப்பட்ட நிலையில்.... இப்போது அமைச்சரவையில் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு பிரதிநிதித்துவம் இல்லாத நிலை நிலவுகிறது. இந்தக் குறையைத் தீர்க்க வேண்டும் என்று அதிமுகவுக்குள் அடுத்த கட்ட நகர்வுகள் ஆரம்பித்துள்ளன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், முதுகுளத்தூர், திருவாடானை, பரமக்குடி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. இவற்றில் தற்போது பதவி நீக்கம் செய்யப்பட்ட அமைச்சர் மணிகண்டன் ராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். திருவாடானை தொகுதியில் முக்குலத்தோர் புலிப்படை கருணாஸ் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். முதுகுளத்தூர் தொகுதி காங்கிரஸ் மலேசியா பாண்டியனிடம் இருக்கிறது. மணிகண்டனைத் தவிர அதிமுக சட்டமன்ற உறுப்பினர் என்றால் அது தற்போது பரமக்குடி இடைத்தேர்தலில் வென்ற சதன் பிரபாகர்தான்.

எனவே சதன் பிரபாகருக்குதான் முறைப்படி ராமநாதபுரம் மாவட்ட அமைச்சர் என்ற பிரதிநிதித்துவம் அளிக்கப்படவேண்டும் என்று ஒரு நகர்வு கடந்த சில நாட்களாக தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதே நேரம் மணிகண்டனிடம் இருந்து பறிக்கப்பட்ட அமைச்சர் பதவியை அதே சமூகத்தைச் சேர்ந்த இன்னொருத்தருக்கு கொடுத்து அமைச்சரவையில் இணைக்க வேண்டும் என்ற குரல்களும் அதிமுகவுக்குள் எழுந்துள்ளன.

இதுபற்றி சென்னை முதல் ராமநாதபுரம் மாவட்டம் வரைக்கும் அதிமுக நிர்வாகிகள் மத்தியில் பேசினோம்.

“மணிகண்டனின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது பற்றி கட்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வெளிப்படையான குரல் எதுவும் எழவில்லை. எனவே அவர் கட்சியில் பலமாக இருக்கிறார் என்பது தெரிகிறது. அதேநேரம் மணிகண்டனை நீக்கியதற்கு பதிலாக அந்த ராமநாதபுரம் மாவட்டத்துக்கு பிரதிநிதித்துவம் கொடுப்பதா, அல்லது மணிகண்டன் சார்ந்த சாதிக்கு பிரதிநிதித்துவம் கொடுப்பதா என்ற சிக்கல் முதல்வர் முன்னால் இருக்கிறது. மாவட்டம் சார்ந்த பிரதிநிதித்துவமே வேண்டுமென்றும், சாதி சார்ந்த பிரதிநித்துவமே வேண்டுமென்றும் இருவிதமான அழுத்தங்கள் முதல்வருக்கு தரப்படுகின்றன.

மணிகண்டன் முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த அமைச்சர். அவர் நீக்கப்பட்டுவிட்ட நிலையில், அவரது பொறுப்புகளை மிகவும் சாமர்த்தியமாக அதே சமுதாயத்தைச் சேர்ந்த உதயகுமாரிடம் ஒப்படைத்தார் முதல்வர். ஆனபோதும் ஏற்கனவே வருவாய் துறை, பேரிடர் மேலாண்மை போன்ற துறைகளில் அதிக வேலைகள் உதயகுமாருக்கு இருப்பதால் தகவல் தொழில் நுட்பத்துறையை தொடர்ந்து அவரே நிர்வகிக்க முடியாத சூழல் இருக்கிறது.

இந்த நிலையில்தான் மணிகண்டன் இருந்த இடத்தில் அதே ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரே அதிமுக எம்.எல்.ஏ.வான சதன் பிரபாகர் பெயர் அடிபடுகிறது. சதன் பிரபாகர் முன்னாள் எம்பி நிறைகுளத்தானின் மகன். நிறைகுளத்தானுக்கு 98ல் அதிமுக- பாஜக கூட்டணி ஆட்சியில் வாஜ்பாய் அமைச்சரவையில் மத்திய அமைச்சராகும் வாய்ப்பு இருந்தது. ஆனால் நிறைகுளத்தான் டெல்லி சென்று சேர்வதில் அப்போது தாமதம் ஏற்பட்டதால் அவரது அமைச்சர் பதவி நழுவிப் போனது, அடுத்த விரிவாக்கத்தில் நீங்கள் மத்திய அமைச்சர் ஆவீர்கள் என்று ஜெயலலிதாவே நிறைகுளத்தானிடம் கூறினார். ஆனால் அரசியல் சூழல் மாறிப் போய் ஆட்சியை அதிமுகவே கவிழ்த்தது.

ஊராட்சித் தலைவர், மாவட்டக் கவுன்சிலர் என்ற பதவிகள் வகித்திருந்த அவரது மகன் பிரபாகருக்கு கட்சியில் இளைஞரணி உட்பட பொறுப்புகள் கொடுத்தார் ஜெயலலிதா. மேலும் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் நாமக்கல் தொகுதி பொறுப்பாளர்களாக தங்கமணி, சதர்ன் பிரபாகர் ஆகியோரை நியமித்தார் ஜெயலலிதா. கட்சி அமைப்பு தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் ஆகியவற்றில் முன்னாள் அமைச்சர் பொன்னையன், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரோடு சேர்ந்து பணியாற்றியிருக்கிறார் பிரபாகர்.

இந்த அடிப்படையில்தான் பரமக்குடி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு பிரபாகரை தேர்வு செய்தார் முதல்வர் எடப்பாடி. அங்கே அவர் வெற்றிபெற்றுவிட்ட சூழலில்தான் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு இப்போது அமைச்சரும் இல்லாத நிலை இருக்கிறது.

ஏற்கனவே தென் மாவட்டங்களில் இருந்து தனி தொகுதி எம்.எல்.ஏ.க்கள் சிலர் தினகரன் அணிக்குச் சென்ற நிலையில் தென் மாவட்டத்தில் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தில் நம்பிக்கையான இடத்தைப் பெற வேண்டுமென்று நினைக்கிறார் எடப்பாடி. அதனால் மணிகண்டன் வகித்த துறையை சதன் பிரபாகருக்கு கொடுக்கலாம் என்று நினைக்கிறார். வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் இது தொடர்பாக முதல்வர் வீட்டுக்கு சென்று ஆலோசனை நடத்தியிருக்கிறார். அப்போது பிரபாகரும் உடன் சென்றிருக்கிறார். உதயகுமார் ஜெ. பேரவை செயலாளராக இப்போது இருக்கும் நிலையில் அதே ஜெ,. பேரவையில் இணைச் செயலாளராக இருக்கிறார் பிரபாகர். எனவே அவரை அமைச்சர் ஆக்கி தென் மாவட்டத்தில் தன் சிண்டிக்கேட்டை பலப்படுத்திக் கொள்ள உதயகுமாரும் நினைக்கிறார்.

அதேநேரம் முக்குலத்தோர் சமுதாயத்து அமைச்சர்கள் சிலர் முதல்வரிடம், ‘எங்க சமுதாயத்து அமைச்சர் பதவியை எங்க சமுதாயத்துக்கிட்டயே கொடுங்க’ என்று வற்புறுத்தி வருகிறார்கள். எனவே புதிய அமைச்சராக யாரை நியமிக்கலாம் என்பது குறித்து எடப்பாடி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இன்னும் இரு வருடங்கள் ஆட்சி இருக்கும் நிலையில் இப்போது இடைத்தேர்தலில் ஜெயித்து எம்.எல்.ஏ.க்களான சிலருக்கு அமைச்சர் பதவி நிச்சயம் என்ற பேச்சும் உலவுகிறது” என்று முடித்தார்கள்.

அமைச்சரவை பட்டியலில் உங்களுக்கு வாய்ப்பிருப்பதாக பேசப்படுகிறதே என்று பரமக்குடி எம்.எல்.ஏ. சதன் பிரபாகரிடம் மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரி சார்பாகக் கேட்டோம்.

“ சார் எனக்கு எம்.எல்.ஏ. பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் முதல்வர் அவர்கள் என்னை பரமக்குடி சட்டமன்ற இடைத்தேர்தலில் வேட்பாளராக நிறுத்தி வெற்றிபெற வைத்தார். அதனால் எனக்கு கட்சித் தலைமை என்ன பணி கொடுக்கிறதோ அதை செம்மையாக செய்வேன். எல்லாம் முதல்வர் கையில்” என்றார் தேர்ந்த அரசியல்வாதியாக!

-ஆரா


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நக்கல்-துரைமுருகன் அப்செட்!


வேலூர்: தேர்தல் முடிவை மாற்றிய சீமான்


சென்னை மெட்ரோ: 2.5 நிமிடத்துக்கு ஒரு ரயில்!


தினகரன் உத்தரவு: புலம்பும் பழனியப்பன்


விஜய் பட ஷூட்டிங்: விபத்தில் சிக்கியவர் மரணம்!


ஞாயிறு, 11 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon