மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 21 அக் 2020

மோடி - அமித் ஷா இந்தியாவில் யாரும் பாதுகாப்பாக இல்லை!

மோடி - அமித் ஷா இந்தியாவில் யாரும் பாதுகாப்பாக இல்லை!

வெளிநாடு செல்லவிருந்த என்டிடிவியின் நிறுவனர் பிரனாய் ராய் மும்பை ஏர்போர்டில் தடுத்து நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவரது மகள் தாரா ராய் ‘மோடி - அமித் ஷா இந்தியாவில் யாரும் பாதுகாப்பாக இல்லை’ எனக் கூறியுள்ளார்.

என்டிடிவியின் நிறுவனர்களான பிரனாய் ராய், அவரது மனைவி ராதிகா ராய் ஆகிய இருவரும் வெளிநாடு செல்வதற்காக மும்பை விமான நிலையத்துக்கு ஆகஸ்ட் 9ஆம் தேதியன்று சென்றுள்ளனர். மத்திய புலனாய்வுப் பிரிவு தாக்கல் செய்த வேண்டுகோளின்படி விமான நிலைய அதிகாரிகள் அவர்கள் இருவரையும் வெளிநாடு செல்ல அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் அவர்களது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டில் பிரனாய் ராய், ராதிகா ராய் மீது ஐசிஐசிஐ வங்கிக் கடன் குறித்து சிபிஐ தாக்கல் செய்த வழக்கின் அடிப்படையில் இவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். அதைக் கண்டித்து ‘ஊடக நிறுவனர்களின் மீதான இத்தகு நடைமுறை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது’ என என்டிடிவி அறிக்கைவிட்டுள்ளது.

இந்த நிலையில், பிரனாய் ராயின் மகள் தாரா ராய் இதுகுறித்து தனது கண்டனத்தை மிக விரிவாக பதிவு செய்துள்ளார்:

மனம் உடைந்ததாக உணர்கிறேன். நானும் எனது குடும்பமும் தனிப்பட்ட முறையில் ஊழல் நிறைந்த இந்த கிரிமினல் அரசாங்கத்தின் நயவஞ்சகத்தை அனுபவித்து வருகிறோம். எங்கள் பெற்றோரின் (பிரனாய் - ராதிகா ராய்) 70ஆவது பிறந்த நாளை கொண்டாட ஐந்து நாட்கள் பயணமாக வெளிநாடு செல்ல நாங்கள் விமான நிலையத்தை அடைந்தோம். ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியா திரும்ப டிக்கெட்டுகளையும் வைத்திருந்தோம். என்டிடிவிக்கு எதிராக சிபிஐ தாக்கல் செய்த எந்தவொரு சட்டபூர்வமான ஆதாரமும் இல்லாத ஒரு வழக்கைக் காரணம் காட்டி, எனது பெற்றோர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு அனுமதியில்லையென்று எங்களுக்குத் திடீரென தெரிவிக்கப்பட்டது.

எனது பெற்றோர் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே செலுத்திய வங்கிக் கடன் மீதான வழக்கு அது. எனது பெற்றோர் இந்த வழக்குக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறார்கள். இந்த வழக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் நிலையிலும், அவர்கள் அடிக்கடி வெளிநாடுகளுக்குச் சென்று வருகின்றனர். வெளிநாட்டுக்கு அவர்கள் பயணம் செய்ய முடியாது என்று நீதிமன்றமோ அல்லது சிபிஐ மூலமோ அவர்களுக்கு அறிவிக்கப்படவில்லை. வழக்கால் அலைக்கழிப்பு இருந்தபோதிலும், எனது பெற்றோர் சரியானவற்றுக்காகத் தொடர்ந்து போராடுகிறார்கள்.

இந்த வழக்கை தீர்க்க அரசாங்கம் மறுத்து, அதை இரண்டு ஆண்டுகளாக நிலுவையில் வைத்திருக்கிறது. எனது பெற்றோர் தங்கள் தனிப்பட்ட நிதி மற்றும் வணிகத்தில் முழுமையான வெளிப்படைத்தன்மையைப் பின்பற்றுகிறார்கள். ஆனால், அரசாங்கம் உரிய செயல்முறையைப் பின்பற்ற மறுக்கிறது. எனது பெற்றோர் முழுமையாகக் கேட்பது என்னவெனில், உரிய செயல்முறை.

ஓர் அரசாங்கம் உரிய செயல்முறையைப் பின்பற்றாதபோது, அதன் குடிமக்களுக்கு என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும். காலம் இருட்டாகவும் பயமாகவும் இருக்கிறது. இது ஓர் அரசைப் பொறுத்தவரையில் நமது முழு வரலாற்றையும் ரத்து செய்து, நம் மக்களில் ஒரு பகுதியைக் காட்டிக் கொடுக்கிறதா அல்லது அது தனிப்பட்ட உரிமையையும் சுதந்திரத்தையும் தாக்குகிறதா என்பது.

நாங்கள் அனைவரும் இப்போது அதிர்ச்சியில் இருக்கிறோம். ஒரு வருடம் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஓர் அழகான விடுமுறை நின்றதாலோ; எல்லா பணமும் வீணாகிவிட்டதாலோ மட்டுமல்ல; திடீரென்று நாங்கள் சுதந்திரமாக இல்லை என்று உணருவதால்.

உங்கள் குடும்பத்தினருடன் விடுமுறைக்குச் செல்வது போன்ற ஓர் எளிமையான நிகழ்ச்சி எந்த எச்சரிக்கையும் இல்லாமல் உங்களிடமிருந்து பறிக்கப்படுகிறது. ஏன்? ஏனென்றால் நீங்கள் அரசாங்கத்துக்கு எதிராகப் பேசத் துணிவீர்கள். ஏன்? ஊடகங்களில் உள்ள எவருக்கும் ஒரு வலுவான பாடம் கற்பிக்க.

இந்த நிலையிலும் எனது பெற்றோர் துவண்டு போகாமலிருப்பதைப் பார்த்து நான் ஈர்க்கப்பட்டேன். நீங்கள் இந்த அரசாங்கத்துக்கு வாக்களித்த ஒரு நபராக இருந்தால், எல்லாமே சரியாக இருக்கிறது என நீங்கள் வசதியாகவும் பாதுகாப்பாகவும் உணர்கிறீர்கள் என்றால், உங்கள் கண்கட்டை அவிழுங்கள். நரேந்திர மோடி மற்றும் அமித் ஷாவின் இந்தியாவில் - யாரும் பாதுகாப்பாக இல்லை. அவர்கள் உங்களுக்காகக் கூட ஒரு நாள் வருவார்கள். ஏனென்றால், இது ஒரு சர்வாதிகார ஆட்சி.

இவ்வாறு குறிப்பிட்டு தனது வலுவான கண்டனத்தையும் விமர்சனத்தையும் வைத்துள்ளார் தாரா ராய்.


மேலும் படிக்க


தினகரன் உத்தரவு: புலம்பும் பழனியப்பன்


விஜய் பட ஷூட்டிங்: விபத்தில் சிக்கியவர் மரணம்!


டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நக்கல்-துரைமுருகன் அப்செட்!


புறக்கணிக்கப்படுகிறதா தமிழ் சினிமா?


பன்னீரும் அமித் ஷாவும்: தோல்விக்கு காரணம் சொல்லும் எடப்பாடி


ஞாயிறு, 11 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon