மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 28 நவ 2020

ஐந்து முறை தேசிய விருது பெற்ற புலிக்கலைஞன்!

ஐந்து முறை தேசிய விருது பெற்ற புலிக்கலைஞன்!

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆவணப்படக் கலைஞர் நல்லமுத்துவுக்குச் சிறந்த சுற்றுச்சூழல் படத்துக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது இவர் பெறும் ஐந்தாவது தேசிய விருது ஆகும்.

நல்லமுத்து தயாரித்து இயக்கியுள்ள ‘தி வேர்ல்ட்’ஸ் மோஸ்ட் ஃபேமஸ் டைகர்’ என்ற 60 நிமிட ஆவணப்படத்துக்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் உள்ள ரந்தம்போர் கோட்டை தேசிய பூங்காவில் வசித்த மச்லி என்ற புலியைப் பற்றி உருவாகியுள்ளது இந்த ஆவணப்படம்.

பொதுவாகப் புலிகளின் வாழ்நாள் 15 ஆண்டுகள் என்றால் மச்லி என்ற பெண் புலி 19 ஆண்டுகள் வாழ்ந்து 900 சதுர கிலோமீட்டரை ஆட்சி செய்தது. ஒன்பது புலிக்குட்டிகளை ஈன்றுள்ளது. தனது முழு வாழ்க்கையையும் ரந்தம்போர் பூங்காவிலேயே கழித்துள்ளது.

மச்லி தனது விடாப்பிடியான உறுதிப்பாட்டினால் உலகம் முழுவதும் பிரபலமானது. 14 அடி நீளமுள்ள முதலை ஒன்றை அது கொன்றுள்ளது. தனது பகுதிக்குள் வரும் பெரிய ஆண் புலிகளையும் விரட்டி வெற்றிபெற்றுள்ளது. தனது கோரைப்பல்லை இழந்த பின்னும், ஒரு கண்ணை மட்டுமே பயன்படுத்திக்கொண்டு தனது குட்டிகளை வளர்த்துள்ளது. 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது 19ஆவது வயதில் உயிரிழந்தது.

நல்லமுத்து மச்லியை 2007ஆம் ஆண்டு அதன் பத்து வயது முதல் இறப்பு வரை சுமார் 10 ஆண்டுகள் படம் பிடித்துள்ளார். மச்லி இறக்கும்போதும் அவர் அங்குதான் இருந்துள்ளார். இதற்காக ஒட்டுமொத்தமாக 150 நாள்கள் படப்பிடிப்பு நடத்தியுள்ளார்.

இதற்கு முன்னதாக நான்கு முறை தேசிய விருது பெற்ற நல்லமுத்து அதில் மூன்று படங்களைப் புலிகளைப் பற்றியும் ஒரு படத்தை மேற்குத்தொடர்ச்சி மலை பற்றியும் உருவாக்கியுள்ளார்.

12 பிராந்திய மொழிகளில் தயாராகியுள்ள இந்தப் படத்தை உருவாக்க 1.5 கோடி ரூபாய் செலவாகியுள்ளதாக நல்லமுத்து கூறியுள்ளார். “ரந்தம்போர் தேசிய பூங்காவில் புலிகளைத் தேடிச் செல்லும் ஒரு பயணத்துக்கு 15,000 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. சுற்றுச்சூழலை மையமாகக்கொண்டு உருவாகும் படங்களுக்கு, காட்டுயிர்களைப் பற்றிய படங்களுக்கு உதவ அரசு முன்வர வேண்டும். சுற்றுச்சூழல் குறித்தும் புலி பாதுகாப்பு குறித்தும் இத்தகைய படங்கள் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தும்” என்று கூறியுள்ளார்.


மேலும் படிக்க


தினகரன் உத்தரவு: புலம்பும் பழனியப்பன்


விஜய் பட ஷூட்டிங்: விபத்தில் சிக்கியவர் மரணம்!


டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நக்கல்-துரைமுருகன் அப்செட்!


புறக்கணிக்கப்படுகிறதா தமிழ் சினிமா?


பன்னீரும் அமித் ஷாவும்: தோல்விக்கு காரணம் சொல்லும் எடப்பாடி


ஞாயிறு, 11 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon