மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 19 செப் 2020

அட்சயா கேபிள் யாருடையது? அமைச்சர் விளக்கம்!

அட்சயா கேபிள்  யாருடையது? அமைச்சர் விளக்கம்!

தன்மீது ஸ்டாலின் சுமத்தும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று அமைச்சரும், அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவருமான உடுமலை ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத் தலைவராக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கடந்த மாதம் நியமிக்கப்பட்டார். இந்தச் சூழலில் ராமநாதபுரத்தில் கடந்த 7ஆம் தேதி பேட்டியளித்த அமைச்சர் மணிகண்டன், ‘உடுமலை ராதாகிருஷ்ணன் தனது அட்சயா கேபிள் நிறுவனத்தின் 2 லட்சம் இணைப்புகளையும் அரசு கேபிள் நிறுவனத்துடன் இணைக்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து அடுத்த 24 மணி நேரத்தில் மணிகண்டனின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது.

இந்தத் தகவல்களைச் சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிட்ட திமுக தலைவர் ஸ்டாலின், உடுமலை ராதாகிருஷ்ணனை அரசு கேபிள் டிவி நிறுவனத் தலைவர் பதவியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் நேற்று (ஆகஸ்ட் 10) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், “எதிர்க்கட்சித் தலைவர் சொல்வது முற்றிலும் பொய். டிஜிட்டல் முறையில் ஒரு கேபிள் நிறுவனம் தொடங்கப்பட வேண்டும் என்றால் அதற்கு மத்திய அரசின் அனுமதியைப் பெற வேண்டும். அது நிறுவனமாகவும் பதிவு செய்யப்பட வேண்டும். தமிழகத்தில் 29 கேபிள் டிவி நிறுவனங்கள் டிஜிட்டல் உரிமம் பெற்றுள்ளன. தற்போது தனியார் கேபிள் நிறுவனங்களுக்கு உரிமத்திற்கு இணையம் மூலமாகவே உரிமம் பெறப்பட்டு வருவதால் அட்சயா கேபிள் நிறுவனத்தின் உரிமையாளர் யார், அதன் இயக்குநர்கள் யார் என்பதை அதன் மூலமாகவே தெரிந்துகொள்ளலாம்” என்று விளக்கம் அளித்தார்.

மேலும், “ஏழை, எளிய மக்களுக்காகப் பாடுபடக்கூடிய அரசு, தமிழக அரசு. அதனால்தான் 130 ரூபாய் என்ற குறைந்த கட்டணத்தில் கேபிள் சேவையை அளிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதனால் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத எதிர்க்கட்சித் தலைவர் திசை திருப்ப வேண்டும் என்பதற்காக இதுபோன்ற பொய்யான அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். அது மக்களிடத்தில் எடுபடாது” என்று தெரிவித்தார்.


மேலும் படிக்க


தினகரன் உத்தரவு: புலம்பும் பழனியப்பன்


விஜய் பட ஷூட்டிங்: விபத்தில் சிக்கியவர் மரணம்!


டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நக்கல்-துரைமுருகன் அப்செட்!


புறக்கணிக்கப்படுகிறதா தமிழ் சினிமா?


பன்னீரும் அமித் ஷாவும்: தோல்விக்கு காரணம் சொல்லும் எடப்பாடி


ஞாயிறு, 11 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon